சிலிண்டர் விலை குறைப்பிற்கு காரணம் என்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரையில் குறைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறையும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த விலை குறைப்பு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை பெரும் மகிழ்ச்சி கொள்ள வைத்திருக்கிறது. இதோடு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிதாக 75 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டு உள்ள 200 ரூபாய் தள்ளுபடியுடன் சேர்த்து மொத்தம் 400 ரூபாய் தள்ளுபடி பெற உள்ளனர் உஜ்வாலா திட்ட பயனாளிகள். மத்திய அரசு கடந்த சில மாதங்களாக கமர்சியல் சிலிண்டர் விலையை மட்டுமே குறைத்தும், உயர்த்தியும் வந்த நிலையில் பல 200 ரூபாய் விலை குறைப்பை முதல் முறையாக வீட்டில் பயன்படுத்தும் domestic LPG cylinder-க்கு குறைக்கப்பட்டு உள்ளது.
வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை குறைய முக்கிய காரணம் பணவீக்கம். தக்காளி விலை உயர்வு வீட்டு சமையல் அறை முதல் நாடாளுமன்றம் வரையில் விவாதிக்கும் முக்கிய பிரச்சனையாக மாறிய நிலையில் 300 ரூபாயாக இருந்த தக்காளி தற்போது 30 முதல் 50 ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் அரசி, கோதுமை போன்ற பிற முக்கிய உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது, இதனால் ஆகஸ்ட் மாதம் மட்டும் அல்லாமல் செப்டம்பர் மாதம் வரையில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்த நிலையில் இதை கட்டுப்படுத்தவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளதாக கணிக்கப்படுகிறது. தக்காளி, வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக ஜூன் மாதம் 4.81 சதவீதமாக இருந்த ரீடைல் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.