ஆவணி! …’மாதங்களுக்கு எல்லாம் அரசன்’

 ஆவணி! …’மாதங்களுக்கு எல்லாம் அரசன்’

ஆவணி! …’மாதங்களுக்கு எல்லாம் அரசன்’ என்று இதற்குப் பொருள். சிங்க மாதம், வேங்கை மாதம் என்ற பெயர்களும் ஆவணிக்கு உண்டு. ஆவணி மாதத்தின் சிறப்பு பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில், ’சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை’ என்கிறார்.

ஆவணி மாதத்தில் தான் இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆவணி மூலம் ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தை, ’ஆனி மூலம் அரசாளும்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அதுபோன்று, ஆவணி மாதம் வரும் மூலமும் சிறப்பு பெற்றதுதான்.

மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை… என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்

. ஓணம்: கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மலையாள தேசத்தை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி கதைதான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்குக் காரணம்.’அசுர குரு சுக்கிராச்சார்யர் சொல்லும் வழிப்படி ஆட்சி செய்கிறார்

மகாபலி’ என்கிற தேவர்களின் முறையீட்டை அடுத்து, அவரை வாமனனாக வந்து ஆட்கொண்ட மகாவிஷ்ணு, மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கவும் அருள்பாலித்தார். அதன்படி, ஒவ்வொரு ஓணம் பண்டிகை அன்றும் அவரது தியாகத்தை- வள்ளல் தன்மையை கேரள மக்கள் நினைவுகூர்கிறார்கள். அந்த நாளில் மகாபலி தங்களது இல்லங்களுக்கும் வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். மகாபலியின் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கும்விதமாக தங்களது வீட்டின் முன் அத்தப்பூ கோலம் போடுகிறார்கள்

, வீடு முழுக்கத் தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள். தங்களது மகிழ்ச்சியைப் பார்த்து, மகாபலியும் மகிழ்வதாக நம்புகிறார்கள். விநாயகர் சதுர்த்தி: தேடி வந்து வழிபட்டால், ஓடி வந்து வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரம் நிகழ்ந்ததும்

இதே ஆவணி மாதத்தில்தான்! மாதம் தோறும் விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினம் வந்தாலும், இந்த மாதத்தில் அவர் அவதாரம் செய்த சதுர்த்தி மட்டுமே ’விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. ’இந்தக் காரணத்துக்காக நான் இவ்வளவு ஆண்டுகள் விரதம் இருக்கப் போகிறேன்…’ என்று சங்கல்பம் செய்துகொண்டு, அத்தனை வருடங்களும் சதுர்த்தி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உண்டு. அவர்கள், ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தி அன்று தான் தங்களது விரதத்தைத் தொடங்குவார்கள். தொடர்ந்து 21 ஆண்டுகள் வரை சதுர்த்தி விரதம் மேற்கொள்வோரும் உண்டு

. அவ்வளவு காலம் விரதத்தைத் தொடர முடியாதவர்கள், தொடர்ந்து 7 ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், 21 சதுர்த்திகளில் விரதம் இருந்து, அதற்கு அடுத்தாக வரும் ஆவணி சதுர்த்தியில் விரதத்தை நிறைவு செய்யலாம். மஞ்சுளா யுகேஷ்.துபாய்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...