மருத்துவ படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி நடைபெறும்!!!

 மருத்துவ படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி நடைபெறும்!!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர். கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. 6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன. மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.  அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...