தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி காலமான நாளின்று
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதிக்கு, கடந்த 1886ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ம் தேதி மகளாக பிறந்தார் முத்துலட்சுமி ரெட்டி.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்புக்கு சொந்தகாரராக விளங்கினார்.
சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினராகவும், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர் என பல பதவிகளை முதல் பெண்மணியாக அலங்கரித்தவர் முத்துலட்சுமி.
நம் தமிழகமெங்கும் வியாபித்திருந்த தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, பால்ய திருமணங்களுக்கு தடை போன்ற சட்டங்களை நிறைவேற்றிய பெருமையும் இவரை சாரும்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1926-ம் ஆண்டு நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று பெண்ணடிமைக்கு எதிராக வலுவாக குரல்கொடுத்தார். இவரின் சமூக பணிகளை பாராட்டி மத்திய அரசு “பத்மபூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது.
தமிழக அரசும் இவரது பெயரில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.(வந்தது?)
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து வெற்றி பெற்ற முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, பெண் சமூக முன்னேற்றத்தின் ஊன்றுகோல் என்றால் அது மிகையாகாது