ஐஸ்கிரீம் தினம்

 ஐஸ்கிரீம் தினம்

தேசிய ஐஸ்கிரீம் தினமின்று🍧

ஐஸ்கிரீம்!

கேட்டவுடன் உள்ளம் குளிர்ந்து நாவில் தித்திக்கும் இந்த வார்த்தை ‘ஐஸ்டு கிரீம்’ என்னும் வார்த்தைகளிலிருந்து 1776-ம் ஆண்டு உருவானதாக கூறப்படுகிறது.

உலகிலேயே அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் இருப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையில் மட்டுமே வருடத்திற்கு 90 மில்லியன் டாலருக்கும் மேலாக வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறும் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை (ஜூலை 18,2021) ‘தேசிய ஐஸ்கிரீம் தினமாக’ கடைபிடிக்கின்றனர்.

தேசிய ஐஸ்கிரீம் தினம் 1984 இல் ஜனாதிபதி ரீகனால் நிறுவப்பட்டது.. , ஐஸ்கிரீம் உருவானதற்கு ஒவ்வொரு கதையைச் சொல்வதால், இந்த ஐஸ்கிரீமின் உண்மையான பிறப்பைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. என்றாலும் 1843-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ‘நான்ஸி ஜான்சன்’ என்ற கண்டுபிடிப்பாளர், கையால் சுழற்றி இயக்கும் இயந்திரத்தின் மூலமாக உருவாக்கிய ஐஸ்கிரீமையே முதல் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

ஒரு பெரிய உருளையில் உள்ளே சுழலும் சிறிய உருளைக்குள் பால், சர்க்கரை, வாசனைப் பொருட்களைச் சேர்த்து தயிர் மத்து போன்ற வடிவத்தால் கலக்கி, பெரிய உருளையில் இருக்கும் பனிக்கட்டியுடன் இவற்றைக் கலக்கும்போது மென்மையான ஐஸ்கிரீம் கிடைக்கிறது என்ற நான்சியின் கண்டுபிடிப்பு தான் அங்கீகரிக்கப்பட்ட ஐஸ்கீரீம் என்கிறது உணவு வரலாறு. ஆனால், தனது கண்டுபிடிப்பின் மகத்துவம் தெரியாமல் நான்சி அந்த இயந்திரத்தை ‘வில்லியம் யங்’ என்பவருக்கு வெறும் 200 டாலருக்கு விற்றுவிட்டிருக்கிறார்.

இதற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1904-ம் ஆண்டு லூயிஸ் என்ற அமெரிக்கர், உணவுக் கோன்களை தற்செயலாகக் கண்டுபிடிக்க, ஐஸ்கிரீம் கோன்கள் பயன்பாட்டுக்கு வந்தது என்று கூறப்படுகிறது. அதேபோல அமெரிக்காவின் அருகாமைத் தீவுகளில் விளைந்த செடிகளின் நெற்றை, குளிர்ந்த பாலுடன் கலந்தபோது புதியதொரு சுவையும், மணமும் கிடைத்திட, ‘வெனிலா ஐஸ்கிரீம்’ உருவானதாம்.

நான்சி, லூயிஸ் மட்டுமல்லாமல் அமெரிக்க வெள்ளை மாளிகை சமையல் கலை வல்லுநர் அகஸ்டஸ் ஜான்சன், ஜனாதிபதி ஜெஃபர்சன் என அமெரிக்காவும், ஐஸ்கிரீமும் வருடங்களாக ஒன்றாகப் பயணித்துள்ளதாலேயே ஐஸ்கிரீம் அமெரிக்காவின் பொதுவுடைமை ஆகிவிட்டது எனலாம்.

ஆனால், உண்மையில் ரெஃப்ரிஜிரேட்டர் என்ற குளிர்சாதனப் பெட்டியும், ஐஸ் கட்டிகளைக் கடையும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான், இன்றைய ஐஸ்கிரீம்களும், பல்வேறு ஃப்ளேவர்களும், இவற்றைத் தயாரிக்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களும் பிறந்தன.

சரி…

என்னதான் உள்ளது இந்த ஐஸ்கிரீமில் என்றால்… பால் புரதம், பால் கொழுப்பு, சர்க்கரை, தண்ணீர் மற்றுர் ஐஸ் ஆகியவற்றின் கூழ்மம் (emulsion) தான் ஐஸ்கிரீம் என்கிறது அறிவியல். இந்தக் கூழ்மத்தில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான கொழுப்பு, 6-10% புரதம், 12-16% இனிப்பு மற்றும் 55-65% நீர், 0.2% சுவையூட்டிகள் என்ற ஃபார்முலா மட்டுமே இவற்றிற்கு சரியான சுவையைத் தருகின்றன என்கிறது அமெரிக்க ஹேகன் தாஸ் மற்றும் பாஸ்கின் ராபின்ஸ் நிறுவனங்கள்.

நாவுக்கு சுவை, வயிற்றுக்கு குளிர்ச்சி, மனதிற்கு மகிழ்ச்சி என அனைத்தையும் கலவையாகத் தரும் இந்த ஐஸ்கிரீம்கள் விளைவிக்கும் பாதகங்களை நமக்கு நினைவுப்படுத்தும் எஃப்டிஏ, உண்மையில் இவற்றின் அதிக கலோரிகளால் உடற்பருமன், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அதிகரிக்கலாம் என்றும், செயற்கை சுவையூட்டிகளால் வயிற்று அழற்சி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை இவை ஏற்படுத்தலாம் என்றும், குளிர்ச்சியான குணத்தால் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் என்பதாலும் ஐஸ்கிரீமை உண்ணும் அளவில் எச்சரிக்கையுடன் இருக்க நம்மை அறிவுறுத்துகிறது.

எது எப்படியோ, நாடு இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டி ஐஸ்கிரீம் பிடிக்காது என்று கூறுபவர்களே இருக்கமாட்டார்கள் என்பதால், உலக மக்களின் பொது உணவு ஐஸ்கிரீம்தான் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

யோசித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையும் ஐஸ்கிரீம் போன்றதுதான். உருகுவதற்குள் அதைச் சுவைத்து விடுவோம் வாருங்கள்!🍦

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...