தருமபுரியில் ஒரு ‘மினி ஊட்டி’ இருக்கிறதா – அழகான வத்தல்மலை பயணம்!

தருமபுரியில் இருக்கும் ‘மினி ஊட்டி’ என்றழைக்கப்படும் வத்தல்மலைக்கு ஒரு சூப்பர் பட்ஜெட் ட்ரிப் பிளான் பண்ணலாமே. இதமான வானிலை, 24 ஹேர்பின் பெண்டுகள், ஆங்காங்கே அழகான வியூபாயின்ட்கள், மசாலா மற்றும் பழத் தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சி என வத்தல்மலை நம்மை பிரமிக்க வைக்கிறது. தருமபுரியில் அமைந்திருக்கும் இந்த அழகிய வத்தல்மலை கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து எளிதில் அணுகலாம்! இந்த இடத்தின் ஸ்பெஷல் என்ன? எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்!

மாசடையாத இயற்கை அழகு நிறைந்த வத்தல்மலை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இந்த வத்தல்மலை அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள வத்தல்மலை அதன் வசீகரமான சுற்றுலாத் தலங்களுக்குக்காகவும், இதமான வானிலைக்காகவும் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வரால் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. வத்தல்மலை மாசடையாத இயற்கை அழகால் சூழ்ந்துள்ளது.

ஒரு தனிமையான சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் வத்தல்மலைக்கு ஒரு ட்ரிப் அடித்து விட்டு வாருங்கள். பார்க், போட்டிங், கடைகள் என பெரிதளவு சுற்றுலா ஸ்பாட்டுகள் எதுவும் இல்லையென்றாலும் இயற்கையின் மடியில் சாய்ந்து, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க இது ஒரு அற்புதமான ஸ்பாட்டாகும். வருடத்தின் எல்லா நாட்களிலும் வத்தல்மலை நம்மை வரவேற்றாலும் செப்டம்பர் முதல் மார்ச் இடையிலான நேரம் இங்கு செல்வதற்கு சிறந்த நேரமாகக் கூறப்படுகிறது.

பைக் ரைடு செய்ய ஏற்ற இடம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள செங்கம்பட்டி சாலையில் 18 கிமீ தூரத்திற்கு பயணித்தால் அரை மணி நேரத்திற்குள் வத்தல்மலையின் அடிவாரத்தை அடைந்துவிடலாம். அங்கிருந்து 8 கிமீ தூரத்திற்கு மலைமுகடுகளில் நீங்கள் பயணிக்க வேண்டியிருக்கும். செல்லும் வழி முழுக்க வியூபாயின்ட்கள் தான். நீங்கள் வழியெல்லாம் நின்று ரசித்து போட்டோ எடுக்க விரும்பினால் உங்களது சொந்த இரு சக்கர வாகனம் அல்லது காரில் செல்ல வேண்டும்.

ஹேர்பின் பெண்டுகளும், வியூபாயின்ட்களும் வத்தல்மலையின் உச்சியை அடைய நீங்கள் 24 ஹேர்பின் பெண்டுகளை கடக்க வேண்டும். ஒவ்வொரு ஹேர்பின் பெண்டும் மிகவும் செங்குத்தாக இருப்பதால் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு ரைடர் என்றால், பயணத்தை ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீர்கள். ஆங்காங்கே நிறுத்தி வியூபாயின்ட்களை ரசிக்க மறக்காதீர்கள்.

அழகான அருவியில் குளிக்க மறக்காதீர்கள்

உச்சியை அடைந்து விட்டதை நீங்களாகவே தெரிந்து கொள்வீர்கள். காரணம் ஜில்லென்ற காற்றும் இதமான வானிலையும் உங்களை வரவேற்கிறது. வத்தல்மலை ஒரு குளிர் பிரதேசமாக இருப்பதால் இங்கு காபி, மிளகு, ஆரஞ்சு, பலாப்பழம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த தோட்டங்களையும் நீங்கள் இங்கு கண்டு மகிழலாம். எல்லாவற்றையும் முடித்துவிட்டு வத்தல்மலையின் ‘ஹிட்டன் ஸ்பாட்’ (Hidden spot) ஆன அருவியில் குளிக்க மறக்காதீர்கள். இந்த அருவியில் மழைக் காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.

கூடிய விரைவில் சுற்றுலா ஸ்பாட்டாக மாறப்போகும் வத்தல்மலை

என்ன தான் வத்தல்மலை அழகாக இருந்தாலும், இதமான வானிலை கொண்டிருந்தாலும், வியூபாயின்ட்கள் இருந்தாலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஏரியோ, படகு குழாமோ, பூங்காவோ இல்லை, தம்குமிட வசதிகளோ வத்தல்மலையை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வத்தல்மலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி வத்தல்மலையில் கூடிய விரைவில் படகு குழாமுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வத்தல்மலைக்கு எப்படி செல்வது வத்தல்மலைக்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் இல்லை. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து தருமபுரியில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 6 மணி, மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணிக்கு இந்த பேருந்துகள் தருமபுரியில் இருந்து வத்தல்மலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் செல்லாமல் உங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறப்பான பயணமாக இருக்கும். தருமபுரியில் இருந்து வெறும் 2 லிட்டர் பெட்ரோல் போட்டால் போதும், வத்தல்மலைக்கு ஒரு சூப்பரான ஒரு நாள் ட்ரிப் அடித்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!