இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா….!!!! – தனுஜா ஜெயராமன்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றுலாத்துறை ஒருங்ணைப்புடன் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மாவட்டத்தின் பிரபல கோயில்களான அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், ராயபுரம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட ஒன்பது கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டமும், சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலை அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பத்து திருக்கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.