சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ்

நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் 14ம் தேதி தமிழ் மற்றம் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் படங்கள் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. ஆனால் கடந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது ரிலீசாகவுள்ள மாவீரன் படம் தனக்கு மிகப்பெரிய
வெற்றியை அளிக்கும் என்று சிவகார்த்திகேயன் நேற்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் -இயக்குநர் மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாவீரன். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவிருந்த நிலையில், அந்த மாதத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, தற்போது படத்திற்கான பிரமோஷன்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜூம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். மேலும் படத்தில் வில்லனாக கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்துள்ள மிஷ்கின், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்துள்ள சரிதா உள்ளிட்டவர்களும் இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினர்.

அப்போது பேசிய சரிதா, தான் ரஜினியுடன் படங்களில் நடித்துள்ளதாகவும், தன்னுடைய முதல் படமே ரஜினியுடன்தான் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். சிவகார்த்திகேயனை பார்க்கும்போது தனக்கு ரஜினியை பார்க்கும் ஃபீல் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்தின் எடிட்டர் பிலோபின் ராஜூம் சிவகார்த்திகேயன் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். படத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன்கள் அதிரடியாக அமைந்துள்ளதாகவும் சண்டைக்காட்சிகளில் அவர் ஜாக்கிசானை நியாபகப்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய மெரினா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, மெரினா கடற்கரையில் 50 ரசிகர்களுடன் நடந்தது என்றும் தற்போது மாவீரன் படத்திற்கு இவ்வளவு அதிகமான ரசிகர்கள் வந்துள்ளது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து டாக்டர், டான் படங்கள் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் பிரின்ஸ் படம் சொதப்பியதையும் சிவகார்த்திகேயன் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தடவை படம் மிஸ் ஆயுடுச்சு, சாரி என்று கூறிய சிவகார்த்திகேயன், ஆனா இந்த தடவை மிஸ்ஸே ஆகாது என்றும் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் நிகழ்ச்சி முடிந்து அவர்கள் அனைவரும் செல்லும்போது அவர்களுக்கு இரவு உணவும் கையில் கொடுத்து படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!