தேவதாசி முறை ஒழிப்புப் போராளி  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

 தேவதாசி முறை ஒழிப்புப் போராளி  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

தமிழ் தாய்மொழி என்றபோதும், தமிழில் எழுதவோ படிக்கவோ அறிந்திராதவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பின்னர் இரண்டு அற்புதமான நூல்களைத் தமிழில் எழுதினார். அவை ’தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவல் மற்றும் ‘இஸ்லாமியரும் இந்தியர் நிலையும்’ என்ற சிறு பிரசுரம் இரண்டுமாகும். அதன் பின்னர் பல்வேறு கட்டுரைகளையும் பல பத்திரிகைகளில் எழுதினார். சி.என்.அண்ணாதுரை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த ’திராவிட நாடு’ வார இதழில் ஐந்து வாரங்களுக்கு இடம் பெறும் வகையில் ’தமயந்தி’ என்னும் குறுந்தொடரையும் எழுதினார். மடாதிபதிகளின் காமக் களியாட்டங்களைத் தோலுரித்துக் காட்டியது அந்தக் குறுநாவல். இவை அனைத்தும் எவ்வாறு அவருக்கு சாத்தியமானது?

அம்மையாரைப் பொறுத்தவரை அவரது வளர்ப்புத் தாயாரான ஆச்சிக்கண்ணு அம்மாள், தங்கள் குலத்தொழிலுக்கு ஒரு வாரிசை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவரை வளர்த்தாரே தவிர, இராமாமிர்தத்துக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அக்கறை ஏதும் அவருக்கு இல்லை. அதனால் தாசித் தொழிலின் அடிப்படையான ஆடல், பாடல் கற்பித்தல், கீர்த்தனைகளைக் கற்பதற்கு அடிப்படையான சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகள் மட்டுமே அவருக்குப் பயிற்றுவிக்கப்பட்டன.

மூவலூர் அம்மையார் தமிழ் கற்றதன் பின்னணியிலும் தாசிகளின் அவலமான வாழ்க்கை முறையே இருந்தது எனலாம். காங்கிரஸில் அம்மையார் ஈடுபட்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் திரு.வி.க. அவருக்கு அரசியலில் மிகுந்த உந்து சக்தியை அளிக்கும் விதத்தில் தான் செல்லும் கூட்டங்களுக்கெல்லாம் உடன் அவரை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்படித்தான் படிப்படியாக ஒரு மேடைப் பேச்சாளராகவும் அம்மையார் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.

அப்போது ‘நவசக்தி’ பத்திரிகையில் வெளிவரும் செய்திகளைப் படித்துக் காண்பிக்கக் கூடியவராகவும், தமிழ் கற்பிக்கும் ஆசானாகவும் விளங்கியவர் மூவலூர் சிங்காரவேலு பண்டிதர் என்பவர் ஆவார்.

அப்போதைய ஒன்றுபட்ட வங்கத்தின் பாரிசால் நகரில் ’வழுக்கி விழுந்த பெண்கள் நிலை’ பற்றி காந்தி எழுதியிருந்த ஒரு கட்டுரையின் மொழியாக்கம் ‘நவசக்தி’ யில் வெளியாகியிருந்தது. அதை அவர் வாசித்துக் காண்பித்த பின்னரே, அம்மையாருக்கு தேவதாசிகளின் அவலமான வாழ்க்கை முறையை முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டுமென்ற எண்ணமும் அதற்கு ஆதரவாகத் தேவதாசிப் பெண்களை ஒருங்கிணைக்க வேண்டுமென்ற உந்துசக்தியும் எழுந்தது. பின்னர் நாகபாசத்தார் சங்கம் உருப் பெறவும் அதற்காக உழைக்கவும் தன் வாழ்நாளை அம்மையார் அர்ப்பணித்தார்.

அதே போலவே, இப்போதும் வழக்கில் இருக்கும் ‘இசை வேளாளர்’ என்னும் சொற்பதம் உருவானதன் பின்னணியிலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரே அச்சாணியாக விளங்குகிறார். இசையைக் கலையாக மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரமாகவும் கொண்டவர்களாகவும், தேவதாசிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்ட தேவதான நிலங்களில் வேளாண்மையை மேற்கொள்பவர்களாகவும் விளங்கியதால் இசை வேளாளர்கள் என்னும் பதத்தை ‘சந்த திவாகரம்’ என்னும் நூலின் வழி மூவலூர் சிங்காரவேலு பண்டிதர் அளித்த ஆலோசனையின் பேரில், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையிடமும் கலந்தாலோசித்து உருவாக்கியதாகவும் அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார். தேவதாசி ஒழிப்பில் அம்மையாருக்கு எந்த அளவுக்குப் பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு ‘நாக பாசத்தார் சங்கம்’ என்று அதுவரை நிலவி வந்த பெயரை ‘இசை வேளாளர்’ என மாற்றி அமைத்ததிலும் ராமாமிர்தம் அம்மையாருக்குப் பெரும் பங்கிருக்கிறது.

இன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் 61 வது நினைவு தினம்.

கடந்த மாதம் மயிலாடுதுறையில் முதல்வர் அவர்களால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலை காணொளி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டது.

பா.ஜீவ சுந்தரி முகநூல் பக்கத்திலிருந்து

சிலை படம் உதவி: கவிஞர் முருக தீட்சண்யா

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...