எம்.எம்.தண்டபாணி தேசிகர்
எம்.எம்.தண்டபாணி தேசிகர் காலமான தினமின்று
“என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா”
“தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும்.
பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் உள்ள திருச்செங்கட்டான்குடி என்ற ஊரில் பிறந்தார். திருச்செங்கட்டான்குடி அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டு நாயனார் பிறந்த ஊராகும்.
முதன் முதலில் தனது தந்தையார் முத்தையா தேசிகரிடம் தேவாரம் பயின்ற எம்.எம்.தண்டபாணி தேசிகர் கும்பகோணத்தில் புகழ் பெற்ற “பிடில் ராஜமாணிக்கம்” என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் மாணிக்க தேசிகர் மற்றும் சடையப்ப நாயனக்காரர் ஆகியோரிடமும் இசை பயின்றார். தேசிகரின் தந்தையார் குழந்தையாக இருந்த தண்டபாணி தேசிகரை மார்பின் மீது கிடத்திக்கொண்டு தேவார பாடல்களை மெதுவாக இனிமையாக பாடிக்கொண்டே பாடம் புகட்டினாராம். தண்டபாணி தேசிகர் அவர்களுக்கு பதிமூன்று வயதாயிருக்கும்போது அவரது தந்தை மறைந்தார். அவர் தனது சகோதரி வீட்டில் வளர்ந்தார்.
வெண்கலக்குரலுக்கு சொந்தக்காரர் எம்.எம்.தண்டபாணிதேசிகர். தமிழில் பாடல்கள் இயற்றுவதிலும், இசை அமைப்பதிலும், பாடுவதிலும் தேர்ந்தவர். ஆசிரியராக பணி புரிந்தவர். அவரது பதினெட்டு வயதிலேயே ஆசிரியராக பணியாற்றத்துவங்கினார். ஒக்குர் லட்சுமணன் செட்டியார் தேவார பாடசாலையில் பத்து ஆண்டுகள் ஆசிரியராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பேராசிரியராகவும், துறையின் தலைவராகவும் பதினைந்து ஆண்டுகள் பணி புரிந்தார்.
பட்டினத்தார் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக 1936ல் நடித்தார். வள்ளாள மஹாராஜா, தாயுமானவர், மாணிக்கவாசகர் மற்றும் நந்தனார் போன்ற திரைப்படங்களில் நடித்தார். திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த நந்தனார் திரைப்படம் மிகவும் பிரசித்தமானது.
“இசை தமிழ் பாமாலை” என்ற பெயரில், பாரதியாரின் பாடல்கள், தேவாரத்தில் உள்ள சில பாடல்கள், திவ்யப்பிரபந்தம் மற்றும் திருப்புகழ் ஆகியவற்றில் உள்ள பாடல்களை தொகுத்து வழங்கி உள்ளார். தமிழ் இசைச் சங்கத்தின் மூலமாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
“தேவாரமணி”, “திருமுறை கலாநிதி”, “சங்கீத சாஹித்ய சிரோமணி”, “தாண்டக வேந்தர்”, “பண்ணிசை வேந்தர்” போன்ற பட்டங்களை பெற்றவர். தமிழ்நாடு இயல் இசை மன்றம் இவருக்கு “கலைமாமணி” பட்டத்தை அளித்தது.
ஆனை முகத்தோனே, ஜகஜனனி, அருள வேண்டும் தாயே மற்றும் எனை நீ மறவாதே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
தருமபுரம் ஆதீனத்தின் “ஆஸ்தான இசை புலவராக” இருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் முதன்மை இசை வித்வானாகவும் இருந்துள்ளார்.
1955 முதல் 1970 வரை 15 ஆண்டுகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு பதவியை விட்டு விலகி தனது மனைவி தேவசேனாவுடன் சென்னை வந்து தங்கினார். தனது இறுதி நாள் வரை சென்னை இசைக்கல்லூரியுடனும், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்துடனும் (தற்போதைய இயல் இசை நாடக மன்றத்துடனும்) தொடர்பில் இருந்தார்.
1972 ஆம் ஆண்டு இதே ஜூன் 26 ஆம் நாள் எம்.எம்.தண்டபாணி தேசிகர் காலமானார்.
From The Desk of கட்டிங் கண்ணையா!