புத்தகக் கண்காட்சியும் ராஜஸ்தான் ஊறுகாய் கடையும்

 புத்தகக் கண்காட்சியும் ராஜஸ்தான் ஊறுகாய் கடையும்

சென்னை நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46வது புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். பல அரங்குகளில் குவிக்கப்பட்டிருந்த அறிவுக் களஞ்சியமான நூல்களைப் பார்வையிட்டேன். குறிப்பாக, சிறப்பாக எல்லா கடைகளிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் குவிக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு பொ.செ. அதிக அளவில் பதிப்பகங்கள் பதிப்பித்திருந்தன. வெவ்வேறு தலைப்புகளில் சில பதிப்பகங்களில் 17 நூல்களை வாங்கினேன்.

திருப்தியாக வீட்டிற்குச் செல்ல வெளியே வந்தேன். வரும் வழியில் கண்காட்சிச்சாலையின் வெளியே ஒரு கடையின்முன் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. கடைக்கு அருகில் சென்று அங்கு நடந்து கொண்டிருந்த வியாபாரத்தைப் பார்த்தேன். ஒரு ஊறுகாய் விற்பனை செய்யும் கடையின் முன்தான் அந்தளவுக்குக் கூட்டம் அலைமோதியது.

ஊறுகாய் வாங்கிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையோரின் கைகளில் புதிதாக வாங்கிய புத்தகங்கள் தென்படவில்லை. ஊறுகாய் வாங்குவதில்தான் ஆர்வமாக இருந்தார்கள்.

ஊறுகாய் கடைகாரர் கடையைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தனது கடைச் சரக்கான ராஜஸ்தான் ஊறுகாயைப் பற்றி விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார் கடைகாரர். இருபதுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் வாளிகளில் ஊறுகாய் ஊறிக்கொண்டிருந்தது. ஊறுகாய் மிக மிகப் பளபளப்பாக வாளிகளில் காட்சி அளித்துக் கொண்டிருந்தன.

இருபதுக்கு மேற்பட்ட ஊறுகாய் தினுசுகளிலிருந்து சாம்பிள்களை எடுத்து வந்திருந்தவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார் கடைக்காரர். ஓசியில் வினியோகிக்கப்பட்ட ஊறுகாய்களின் சாம்பிளை பலர் தங்கள் கையால் வாங்கி நாக்கில் வைத்து ருசி பார்த்துவிட்டு “ரொம்ப நல்லா இருக்குங்க உங்க புராடக்ட்” என்று சொல்லிக்கொண்டே கடையிலிருந்து எதுவும் வாங்காமல் நைசாக நழவி நடையை கட்டிக்கொண்டிருந்தார்கள்.

போகும்போது இந்த ஊறுகாய் கடை விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்துவிட்டது.

புத்தக காட்சிக்கு விஜயம் செய்திருந்த சில வாசக ஆர்வலர்களுக்கு, நாவில் புதிய நறுஞ்சுவையை உலாவவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் தோன்றிவிட்டதோ என்னவோ அவர்களில் சிலரும், கண்காட்சியில் நூல்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது, புத்தகப் பையைச் சுமந்து கொண்டே ஊறுகாய் கடைக்குமுன் வந்து ஆஜராகிவிட்டார்கள்.

தங்களுக்குப் பிடித்த ஊறுகாய் தினுசுகளை வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஊறுகாய் கடைக்காரர் குறைந்தபட்ச விற்பனை அளவு 1/4 கிலோ என்றும், கால் கிலோ ஊறுகாய் விலை ரூபாய் 150 என்றும்  நிர்ணயம் செய்திருந்தார். 1/4 கிலோவுக்கு குறைவாக விற்பனை கிடையாது என்று கடைக்காரர் உறுதியோடு சொல்லிக்கொண்டிருந்தார்.

ஊறுகாய் கடையில் சரக்கு வாங்கியவர்கள் எவரும் விலைக்கு வாங்கும் ஊறுகாய்க்குத் தள்ளுபடி உண்டா? கழிவு உண்டா? என்று கேட்கவில்லை.

ஒவ்வொருவரும் இரண்டு பொட்டலம், நான்கு பொட்டலம் என்று ஊறுகாயை வாங்கி அதற்காக்க கொண்டுவந்திருந்த துணிப்பைகளில் வைத்துத் திணித்துக்கொண்டு ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த புத்தக சுமையோடு, அவரவர் திசையில் பயணித்தனர்.

சிலர் கார் பார்க்கிங் ஏரியாவிற்கும், சிலர் மவுண்ட்ரோடு சாலைக்கும் வந்து சேர்ந்து அங்கிருந்து புறப்பட்டு  தங்களது வசிப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

ஓசியாக வழங்கப்பட்ட ஊறுகாய் கடையில் விலையில் தள்ளுபடி கேட்காதவர்கள், புத்தகக் கண்காட்சி அரங்குகளில் மட்டும் தாங்கள் வாங்கியிருந்த புத்தகங்களுக்குக் கடைக்காரர் வழங்கிய 10% தள்ளுபடியை ஏன் 20% சதவிகிதமாக உயர்த்தி வழங்கமுடியுமா? என்று கேள்வி மேல் கேள்வி அரங்கு நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டிருந்ததும் என் செவிகளில் விழுந்தது.

புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்களில் சிலர் புத்தகம் வாங்கியதாகவே தெரியவில்லை.

ஊறுகாய் கடையில் சாம்பிள் மட்டும் வாங்கி சுவைத்துவிட்டு ஊறுகாயை விலைக்கு வாங்காமல் நடையைக் கட்டுயவர்களே போல,

ஸ்டால்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூல்களை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு புரட்டிப் பார்த்த பரம சந்தோஷத்தோடு அடுத்த புத்தக ஸ்டால்களுக்குத் தமது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். இந்த வகையான சிலர் கட்டணச் சீட்டு வாங்கிக்கொண்டு புத்தகக் காட்சி சாலைக்கு வருகை தந்திருப்பது புத்தகங்களை வெறுமனே புரட்டிப் பார்த்துவிட்டு போவதற்காகத்தானோ! அவர்களின் போக்கு எனக்கு ஒரு விசித்திரமாகவே எனக்கு பட்டது.

காட்சி அரங்குகளில் நடந்துகொண்டிருந்த நூல் விற்பனையைப் பார்த்தேன். வெகு வெகு சுறுசுறுப்பாக இருந்தது.

கண்காட்சித் திடலில் கடை போட்டு நடந்துகொண்டிருந்த ஊறுகாய் கடையின் விறுவிறுப்பான வியாபாரத்தைப் பார்த்து பல புதிய பாடங்களைக் கற்றுக்கொண்ட மனதிருப்தியுடன் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...