ரஜினி நடித்த 4 படங்கள் மறுபடியும் வெளியாகிறது

 ரஜினி நடித்த 4 படங்கள் மறுபடியும் வெளியாகிறது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளைப் பெரிதும் விரும்பப்பட்ட அவரது பிரபலமான படங்களைத் திரையிட்டுக் கொண்டாடுகிறது பி.வி.ஆர். சினிமாஸ். சென்னை மற்றும் கோவையில் வரும் டிசம்பர்  9 முதல் 15 வரை ரஜினிகாந்த் திரைப்படத் திருவிழா நடைபெறவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளைக் (டிசம்பர் 9)  கொண்டாடும் வகையில், இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பிரீமியம் திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்பு திரைப்பட விழா’ என்ற தலைப்பில் டிசம்பர் 9 முதல் 15 வரை ரஜினியின் பிரபல திரைப்படங்களைத் திரையிடவுள்ளது..

அவரது பிறந்தநாளுக்கான கவுண்ட் டவுனாக இரண்டு தென்னிந்திய நகரங்களில் உள்ள 4 பி.வி.ஆர். திரையரங்குகளின் பெரிய திரையில்,  டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கி 7 நாட்கள் நடைபெறும். இந்தத் திருவிழாவில், பாபா (2002), சிவாஜி: தி பாஸ் (2007), 2.0 (2018) மற்றும் தர்பார் (2020) ஆகிய 4 சூப்பர்ஹிட் படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த முன்னெடுப்பு பற்றி பேசிய பி.வி.ஆர். லிமிடெட் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி (CEO), திரு. கௌதம் தத்தா, “ரஜினிகாந்த் சார், சாதனைகளை தகர்த்தெறிந்த பல திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய சினிமா துறைக்குப் பெருமை சேர்த்த ஒரு மகத்தான நடிகராவார்.

அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதிலும், மனதைவிட்டு நீங்காத அவரது சிறந்த திரைப்படங்களில் சிலவற்றை ரசிகர்களுக்குத் திரையிடுவது குறித்தும் பி.வி.ஆர். பெருமிதம் கொள்கிறது.

சினிமா உலகில் அவரது பயணத்தைக் காட்சிப்படுத்தும் விதமாக, இந்த ஏழு நாட்கள் ரஜினிகாந்த் திரைப்பட விழாவைக் காண சென்னை மற்றும் கோவையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்கிறோம். பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய தலைவரின் படங்களை மீண்டும் கண்டு மகிழ அவரது ரசிகர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத வாய்ப்பாக இருக்கும்”, என்று கூறினார்.

தென்னிந்தியத் திரைப்படச் சந்தையானது நாட்டின் பிராந்திய மொழித் திரைப்படச் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது; ஏனெனில் திரைப்படங்களைக் காணும் நாட்டம் மற்ற பகுதிகளைவிட தென்னகத்தில் அதிகமாக உள்ளது. எனவே பெரிய ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தங்கள் திரைப்படங்கள் அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அவற்றை தென்னிந்திய மொழிகளில் டப் செய்துவருகின்றன. தென்னிந்திய நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராகக் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் நடிக்கும் திரைப்படங்களால் வெகுஜனங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் இணைக்க முடிகிறது. சமீப காலமாக ஒரு மாறிவரும் போக்கு அறியப்பட்டுள்ளது, அதாவது தேசிய அளவில் பல-மொழிகளில் வெளியடப்படும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெறுவதைக் காணமுடிகிறது. இதனால், இந்தி அல்லாத திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது தெரியவருகிறது.

பி.வி.ஆர். ஏற்பாடு செய்துள்ள இந்தச் சிறப்புத் திரைப்பட விழா குறித்தும், பாபா திரைப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்படுவது குறித்தும் பேசிய, திரு. ரஜினிகாந்த அவர்களின் துணைவியாரும், திரைப்படத் தயாரிப்பாளருமான, திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள்,

“20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாபா திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது; அத்திரைப்படம் இப்போது மீண்டும் வெளியாவது என் மனதிற்கு மேலும் நெருக்கமான ஒரு உணர்வுபூர்வ அனுபவமாக உள்ளது. பாபா, எங்கள் குடும்பத்திற்கு பல விதங்களில் மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாகும்.

திரையரங்குகளில் ‘பாபா’ திரைப்படத்திற்கு மீண்டும் அமோக வரவேற்பை அளிக்கும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மீது காட்டும் அனைத்து அன்பிற்காக கடவுளுக்கு நன்றி கூறுவதோடு, ரசிகர்களுடன் இணைந்து மீண்டும் அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க நான் காத்திருக்கிறேன்,” என்று பூரித்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...