நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ்
உத்தரபிரதேசத்தை நான்குமுறை ஆட்சி செய்த மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜம். அந்தக் கட்சியை நிறுவியவரும், மாயாவதியின் அரசியல் குருவுமான கான்ஷிராம் எனது தொடக்க கால நண்பர். நான் அவரை பலமுறை தில்லியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வரும்போது எனது இல்லத்திற்கு வந்து உணவருந்தி, ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.
ஒருமுறை எனது திண்டிவனம் வீட்டுக்கு வந்த அவர், என்னுடன் சமூகநீதி குறித் தும், வர்ணாசிரமம் குறித்தும் ஒரு பேனாவை தலைகீழாக பிடித்து உதாரணம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் நீடித்த உரையாடலின் நடுவே கட்சி நடத்துவதற்கான நிதியை எங்கிருந்து திரட்டுகிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு பதிலளித்த கான்ஷிராம், ‘‘பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக நான் செல்லும்போது, கூட்டம் நடைபெறும் திடலின் நான்கு முனைகளிலும் பெரிய அண்டாக்களின் மீது துணியைக் கட்டி, அதில் சிறிய ஓட்டையைப் போட்டு வைத்து விடுவோம். கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவரும் அதில் குறைந் தது ஒரு ரூபாய் பணம் போட்டுவிட்டுத் தான் நுழைய வேண்டும். அவ்வாறு திரட்டப்படும் நிதியைக் கொண்டுதான் கட்சி நடத்துகிறேன்’’ என்று கூறினார்.
அதன்பின் சில ஆண்டுகள் கழித்து புதுச்சேரி செல்லும் வழியில் தைலாபுரம் தோட்டத்தில் என்னை சந்தித்தார். அப்போது தமது கட்சி சார்பில் நடத்தப்படும் பிரச்சாரங்கள் குறித்து அவர் விளக்கினார்.
“முன்பெல்லாம் பொதுக்கூட்டங்களுக்கு காரில் செல்வேன். ஆனால், இப்போ தெல்லாம் நிலைமை மாறி விட்டது. பிரச்சாரக் கூட்டங்களுக்கு நான் ஹெலி காப்டரில்தான் பயணிக்கிறேன். மாலை 5 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டரில் பறக்கமுடியாது என்கிறார்கள். அதனால் மாலை 5 மணிக்குப் பிறகு என்னால் கூட்டங்களில் பேச முடியவில்லை’’ என்று கவலைப்பட்டுக் கொண்டார்.
ஒரு காலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்து கட்சி நடத்திய கன்ஷிராம், சில ஆண்டுகளில் ஹெலி காப்டரில் சென்று பிரச்சாரம் செய்யும் நிலைக்கு உயர்ந்தார். அதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அதைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தப் பதிவு.