சபர்மதி காந்தி ஆசிரமத்தை ரூ,1,200 கோடியில் புதுப்பிக்கும் சர்ச்சை

குஜராத்திலுள்ள காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் 1200 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுவது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைத் தனியார் பெருநிறுவனத்துக்கு குஜராத் அரசு தாரை வார்க்கப் போவதாக காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பழம் பெருமை வாய்ந்த சபர்மதி ஆசிரமத்தை, இன்றைய அரசு 54 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், புதிய அருங்காட்சியகங்களும், கலையரங்கமும், ஓய்வறைகளும், கடைகளும், உணவு கூடங்களும் கட்டப்பட உள்ளன. இது, அனைத்து காந்திய நிறுவனங்களையும் கையகப்படுத்தி, வணிக தலமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி. இதை நாம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன.

மத்திய பா.ஜ.க. அரசும் மாநில பா.ஜ.க. அரசும் இணைந்து உருவாக்கும் இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் நேரடிப் பார்வையில் செயல்படுத்தப்பட இருப்பதாகச் செய்கிதள் வருகின்றன.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள குஜராத்தைச் சேர்ந்த பிமல் படேல் என்கிற ஒப்பந்ததாரரே காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் எடுத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்தி தனது சொந்த மாநிலமான குஜராத் அகமதாபத்திலுள்ள கொச்சரப் என்ற பகுதியில் 1915, மே, 25ஆம் தேதி முதன்முதலாக  ஆசிரமத்தை நிறுவினார். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, கதர் ஆடைகள் தயாரிப்பு போன்றவற்றில் நாட்டம்கொண் டிருந்த காந்தி, அதற்கு வசதியாக அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் 1917ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தை மாற்றினார்.

இந்த ஆசிரமம் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்தததால் சபர்மதி ஆசிரமம் என்றழைக்கப்பட்டது.  அந்தப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் வசித்தால் ஹரிஜன் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது.

இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை தேசம் கொண்டாடி வரும் நிலையில் சபர்மதி ஆசிரமத்தையே முகவரியாக கொண்ட 2,500 பேர் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆம், தாங்கள் வீதிக்கு வந்துவிடுவோம் என்கிற அச்சத்தால் இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்து கின்றனர். அப்படி அரசு சபர்மதி ஆசிரமத்தை கையகப்படுத்தினால் மகாத்மா காந்தி காலத்தில் குடியேறி அங்கேயே தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தாங்களும் வெளியேற்றப்படுவோம் என அஞ்சுகின்றனர். ஆகையால் இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் எனப் போராட்டங்களை சபர்மதி ஆசிரமவாசிகள் நடத்தி உள்ளனர்.

இந்த சபர்மதி ஆசிரமம், பழம்பெருமை வாய்ந்தது. மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை சுமார் 13 ஆண்டுகள் தம் துணைவியார் கஸ்தூரி பாயுடன் இந்த ஆசிரமத்தில்தான் வாழ்ந்தார். 

சபர்மதி ஆசிரம வளாகத்தில், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, மாணவர் விடுதிகள் என 12 வகையான சொத்துக்கள் உள்ளன. இவற்றிற்கு 1960ஆம் ஆண்டில் குஜராத்-மகாராஷ்டிர மாநிலங்கள் இணைந் திருந்த பாம்பே மாநிலத்தின் முதல்வர் மொரார்ஜி தேசாய் முழுமையான சொத்துவரி விலக்கு அளித்தார். தொடர்ந்து அகமதாபாத் நகராட்சித் தலைவ ராக விளங்கிய, பின்னாள் துணைப் பிரதமர், வல்லபாய் படேல் நிரந்தர வரிவிலக்கு அளித்தார்.

இந்த நிலையில் காந்தியே இன்று இருந்தாலும், இதை வன்முறையின் வெளிப்பாடு என்று தான் கருதியிருப்பார். அதைக் காட்சிப் பொருளாக்க மாட்டார்கள். அதிலும் அதை ஜோடனை செய்து, லாபம் ஈட்ட முற்படவும் மாட்டார்கள்.

சபர்மதி ஆசிரமத்துக்கு வருபவர்கள் வெறும், ‘டூரிஸ்ட்’கள் அல்ல. காந்திய தொண்டர்கள், ஆசிரமத்தோடு உணர்வு ரீதியாக ஒன்றியவர்கள். அப்படிப்பட்ட இடத்தை, ‘டூரிஸ்ட் ஸ்பாட்’டாக மாற்றுவதை எப்படி ஏற்க முடியும்?

இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளார். “பார்வையாளர்கள் அந்த இடத்தின் எளிமையையும், தத்துவங்களை யும் போற்றுவார்கள். அதனால்தான் அது ஆசிரமம் என அழைக்கப்படுகிறது. அது அருங்காட்சியகம் என அழைக்கப்படுவதற்கான இடம் அல்ல. ஆசிரமத் தின் நல்லொழுக்கத்தையும், கண்ணியத்தையும் அழிப்பது தேசத் தந்தைக்கு செய்யும் அவமரியாதை. காந்திஜிக்குத் தொடர்புடைய அனைத்தையும் மாற்ற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது” எனவும் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், தனியார் கார்ப்பரேட் ஒன்றுக்காக குஜராத் அரசு சபர்மதி ஆசிரமம் அருகே பெருமளவு நிலம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காகவே சபர்மதி ஆசிரமத்தையும் கபளீகரம் செய்யப் பார்க்கிறது குஜராத் அரசு என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப் படுகிறது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன, மேம்படுத்தவேண்டிய திட்டங்களும நிறைய இருக்கும்போது, வாழ்க்கை முழுவதையும் எளிமையையே போதித்த காந்திஜியின் ஆசிரமத்தை 1200 கோடி செலவில் புதுப்பித்து சுற்றுலா தலமாக மாற்றி வருமானம் ஈட்டவேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது?  இது காந்தியின் எளிமையையும் அடையாளத்தையும் அழிக்கும் செயல் எனக் குரல் எழுப்புகின்றனர் காந்தியவாதிகள் இது அரசின் காதுகளுக்குக் கேட்குமா?

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...