தனித்துவ நடிகர் மறைந்த ஸ்ரீகாந்த்
தமிழ்த்திரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி. ஜெமினி கணேசன், ஜெயசங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுக்கு மத்தியில் ரசிகர்களிடம் தனித்த அடையாளத்துடன் காணப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
1965ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத் தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். ‘வெண்ணிற ஆடை’ படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்திறையில் பணியாற்றி தனக்கென ஒரு இடத்தைப் பிடித் திருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
‘வெண்ணிறஆடை’ படத்தில் நடிக்க வைப்பதற்காகப் புதுமுகங்களைத் தேடி அலைந்தனர், ஸ்ரீதரும் கோபுவும். தற்செயலாக, மவுண்ட் ரோடு அமெரிக்கத் தூதரகம் சென்றிருந்தனர். மிடுக்குடன் நடந்துபோகும் ஒரு வாலி பரைக் கண்டனர். கோட் சூட்டில் மிகக் கம்பீரமாக இருந்தார். விசாரித்தபோது அவர் பெயர் வெங்கட்ராமன் என்பது தெரிந்தது. அவரையே வெண்ணிறஆடை படத்திற்குக் கதாநாயகனாகப் போட்டனர். ஆனால் வெங்கட்ராமன் எனும் இயற்பெயர் கொண்ட ஸ்ரீகாந்த் தனது வேலையை ராஜினாமா செய்ய மறுத்தார். தூதரக அதிகாரிகளும், ஸ்ரீகாந்த் படத்தில் நடிப்பதற்குச் சில விசேட சலுகைகளை அளித்தனர். தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்ததும்தான், தனது தூதரக வேலையை ராஜினாமா செய்தார் ஸ்ரீகாந்த்.
1974ஆம் ஆண்டு வெளியான ‘திக்கற்ற பார்வதி’ படத்தில் இவர் ஹீரோ வாக நடித்திருந்தார். இந்தப் படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 50 படங்களில் கதாநாயகனாகவும் 150 படங்களுக்குமேல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.
கே. பாலசந்தர் இயக்கிய பூவா தலையா, பாமா விஜயம், எதிர்நீச்சல், போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த். ராஜநாயகம், அவள், காசேதான் கடவுளடா, நாணல், ராஜபார்ட் ரங்கதுரை, அன்புத்தங்கை, வைரம் போன்ற பல படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிகணேசன் மகனாக நடித்தார். அதில் மிக முக்கிய பாத்திரம் ஸ்ரீகாந்த்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் பங்குபெற்றார். குறிப்பாக ஜெயகாந்தன் எழுதி பீம்சிங் இயக்கிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட பல தனித்துவமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். அவர் நடிகராகப் பிரபலமான பின்னரும் பல மேடை நாடகங்களில் நடித்தார். ‘மங்கை’ என்ற டி.வி. சீரியலிலும் நடித்துள்ளார். இறுதியாக செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடிகை சோனியா அகர்வால் தந்தையாகச் சிறப்பாக நடித்திருந்தார்.
ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் தம் 82-வயதில் 12-10-2021 அன்று காலமானார். அவருக்கு கலைத்துறையினரும் நண்பர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.