இந்துசமய அறநிலையத் துறைக்குக் குவியும் பாராட்டுகள்

 இந்துசமய அறநிலையத் துறைக்குக் குவியும் பாராட்டுகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆட்சியில் அமர்வதற்கு முன்பே இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. அதை இப்போது செய்து காட்டி வருகிறது.

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் பி.கே.சேகர் பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்பது, கோவிலுக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு முறையாக வாடகை வசூலிப்பது, கோவில்களை சீரமைப்பது, புனரமைப்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. அனைத்து கோயில்களிலும்  பக்தர்களிடம் முடி காணிக்கை இலவசமாகச் செய்யவேண்டும் என்றும் அதற்கு மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் விழா நடந்தது. அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இவர் சேகர் பாபு அல்ல, இவர் செயல் பாபு என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

சேகர்பாபு தினமும் கோயில் கோயிலாகப் பயணம் செய்து பல கோயில்களில் ஆக்கிரமிப்பு செய்த கோயில் நிலங்களை மீட்டுவருகிறார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 33 கிரவுண்ட் நிலம் அண்மையில் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளி, தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெயரில் இயங்கி வருகிறது. மேலும் அந்தப் பள்ளியைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை நடத்தும் என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் ரூ.300 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

98 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இந்த இடத்தை குத்தகை தாரர்கள் மறைந்த பிறகு வாரிசுதாரர்கள் வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். அந்த வாடகையை அவர்கள் பெற்று வந்தனர். கோவிலுக்கு வாடகை செலுத்தவில்லை. 12 கோடிக்கு மேல் வாடகை நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்கவும் வழக்கு தொடருவோம். என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் வடபழநி கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 5.52 ஏக்கர் நிலம் மற்றும் சென்னை குரோம்பேட்டை நெமிலிச் சேரி அகஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் என தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 

இதுவரை 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக 5.25 ஏக்கர் சொத்துக்கள் இருந்ததாகவும். ஆனால் தற்போது 4.75 ஏக்கர் நிலங்கள் மட்டுமே அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மீதமுள்ள 50,000 ஏக்கர் நிலம் மாயமாக மறைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

சென்னை, குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தை பல ஆண்டு கள் முன்பு 11 நபர்கள் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந் தனர். இந்தச் சொத்தை மீட்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக அப்பகுதியைச் சுற்றி பல்வேறு இடங்கள் உள்ளன.  இதேபோல், வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் குடோன், சலூன், அரிசி கடை என 6க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளில் குடியிருந்தும் பல ஆண்டுகளாக வாடகை தராமல் வசித்து வந்தனர். இந்நிலையில், வாடகை கட்டவில்லை என்பதால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்  கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை சார்பில் வழக்கு போடப்பட்டது.

அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர், சென்றாயப் பெருமாள், கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்ட இந்தக் கோவில்களுக்குச் சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது. இதனால், கடந்த 2013-ம் ஆண்டு கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டது.  கரியகாளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 7.75 ஏக்கர் நிலமும், வாகீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.48 ஏக்கர் நிலத்தையும் கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. முடிவில் ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டது.

“இறை சொத்து இறைவனுக்கே என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஆக்கிரமிப்பு நிலங்களை தினசரியும் மீட்டு வருகிறோம். கடந்த நான்கு நாட்களில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தோம். அந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. இன்னும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றவர்,

“இதேபோல், இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் தாங்களாகவே வருகை தந்து அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோயில்கள் வசம் கொண்டுவரப்படும்.” என்று சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். கோயில் சிலைகளைக் கடத்தும் நபர்களை கைது செய்து வருகிறோம் எனவும், திருடுப்போன சிலைகளை மீட்கும் பணியில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயில் நிலங்களில் எளிய மக்களின் வீடுகள் இருக்கும்பட்சத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டால் அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவோ அல்லது கோவில் இடங்களிலேயே புதிய குத்தகை முறையில் இடம் வழங்க வும் தயாராக உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள களவு போன கோயில் சிலைகளைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் சிலைகளை கடத்தி சென்றவர்கள் குறித்த தகவல்களையும் சிலைகள் எங்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறோம். இதில் தொடர்புடைய அனைவர் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பாரம்பரிய சிலைகளை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை, அறநிலையத் துறை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு அளித்து, அதில் வரும் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் கோயில்களில் உள்ள நகைகளை எல்லாம் உருக்கி வங்கிகளில் தங்கக்கட்டிகளாக டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித் திருப்பது வரவேற்கத்தக்கதே.

அதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டமும் பாராட்டுக்குரியதே. அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதும் பாராட்டுக்குரியதே.

ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களில் கல்லுரிகள் அமைத்து அங்கு ஆன்மிகப் பாடங்கள் நடத்தப்படும் என்றும் சேகர்பாபு தெரிவித்த மிகப்பெரிய விஷயம். இருக்கிற கோயில்களை எல்லாம் படிக்கிற பள்ளி செய்வோம் என்று வாலி பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.

நாத்திகக் கட்சி என்று பெயர் பெற்ற தி.மு.க. ஆட்சியில் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களையும் நகைகளையும் சிலைகளையும் மீட்டு கோயில் களுக்கே வழங்குவது ஆன்மிகக் கட்சி என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் எந்தக் கட்சியும் இந்த அரிய செயல்களைச் செய்யவில்லை என்கிறார்கள் பொதுப் பார்வையாளர்கள். இதனால் கட்சி, சாதி, மதம் சாராத எல்லா தரப்பினரும் இந்தச் செயலைப் பாராட்டுகிறார்கள். நாமும் பாராட்டுவோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...