கொல்லூர் மூகாம்பிகை பற்றிய தகவல்கள்
மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
2. கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி செய்கிறார்கள்.
3. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
4. கலைஞர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் கலைப்பயணத்தில் முழுமையான வெற்றி அடைய தங்கள் கலைப்பணியை அன்னை மூகாம்பிகைக்கு அர்ப்பணித்து தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாகும்.
5. அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.
6. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.
7. மூகாம்பிகை அம்மனின் விக்கிரகத்திற்கு பக்தர்கள் புடவை சார்த்துதல் உண்டு. ஆனால், இந்த புடவை சாத்தும் போது தூய பட்டினாலான புடவையை மட்டுமே அம்பாளுக்கு கட்டுவார்கள். ஏனைய புடவையை அம்பாளின் மீது போர்த்தி விடுவார்கள்.
8. அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.
9. அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் தங்க ரேகையை அனைவரும் எல்லா நேரங்களிலும் பார்க்காதபடி தங்க கவசம் கொண்டும் மூடப்பட்டுள்ளது.
10. மகாபூஜை செய்பவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்க ரேகைக்குரிய பூஜைகள் செய்பவர்களுக்கு உச்சி நேரத்தில் லிங்கத்தின் தங்கக்கோட்டை சூரிய ஒளியை கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் பிரதிபலித்து தங்க ரேகையை காட்டுவது வழக்கமாகும்.