40 சர்வதேச விருதுகள் பெற்ற ‘என்றாவது ஒரு நாள்’ | பொன்ரங்கம்மூர்த்தி

 40 சர்வதேச விருதுகள் பெற்ற ‘என்றாவது ஒரு நாள்’ | பொன்ரங்கம்மூர்த்தி

திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டு 40 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது ‘என்றாவது ஒரு நாள்’ படம். இந்தப் படம் கொரோனாவுக்கு முன்னோ திரைக்கு வர இருந்து கொரோனாவில் கோரப்பிடியால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஓடிடி தளத்தில் திரையிடப்படவிருக்கிறது.

81வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் வெற்றி துரைசாமி தயாரித்து இயக்கிய ‘என்றாவது ஒரு நாள்’ படத்துக்குச் சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது. இதன் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்துக்குச் சிறந்த மேராமேன் விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் பெர்லின் இந்தியா பிலிம் ஃபெஸ்டிவல், வெனிஸ் பிலிம் அவார்ட்ஸ், தாகூர் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் உள்ளிட்ட 16 அமைப்புகள் நடத்திய திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த இயக்குநர், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த போட்டோகிராபி, சிறந்த எடிட்டிங், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த சுற்றுச்சூழல் படம் என 25 விருதுகளைப் பெற்றது.

இத்தனை விருதுகளுக்கும் காரணமான இயக்குநர் வெற்றி துரைசாமி சட்டப் படிப்பு படித்தவர். எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன். அடுத்த பட வேலையில் இருந்த அவரிடம் பேசினோம்.

படம் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது?

“கல்லூரியில் படிக்கும் போதே சினிமாமேல் ஆர்வமாக இருந்தேன். நான் வைல்ட் லைஃப் போட்டோ கிராஃபர். அதற்காக நிறைய பயணப்படுவேன். மாதத்தில் பல நாட்கள் காடுகளில்தான் இருப்பேன். பல்வேறுபட்ட ஊரகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு பயிற்சிக்காக ஒரு ஆவணப்படமும் ஒரு குறும்படமும் இயக்கினேன். இயக்குநர் வெற்றிமாறன் அண்ணன்தான் எனக்கு மானசீககுரு. அவர் வழிகாட்டுதலில் நான் நிறைய படம் பற்றித் தெரிந்துகொண்டேன்.”

படத்தைப் பற்றிச் செல்லுங்கள்?

“கொங்கு மண்டலத்தில் ஒரு குடும்பத்துக்குள் நடக்கிற கதை. கொங்கு மண்டலம் என்றதும் எல்லாருக்கும் பசுமையான காட்சிகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அங்கும் ஒரு வறண்ட பகுதி உள்ளது. அந்த மக்களின் வாழ்விலும் கஷ்டங்கள் உண்டு என்பதைச் சொல்லும் படம் ‘என்றாவது ஒருநாள்’.”

எழுத்தில் ஆர்வம் உண்டா?

“கதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் படம் 80 சதவிகிதம் வெவ்வேறு இடங்களில் நான் பார்த்து உணர்ந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு.”

40 விருதுகள் பெற்றிருக்கிற இந்தப் படம் கலைப்படமா?

“கலைப்படமும் இல்லை, கமர்ஷியல் படமும் இல்லை, ஜனரஞ்சகமான படம். கதாநாயகன் விதார்த், நாயகி ரம்யா நம்பீசன். தாய்-மகள் உறவு குறித்தும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்தும், மாடு ஒரு குடும்பத்தின் தேவை குறித்தும் பேசும் படம். கவியரசு வைரமுத்து நான்கு பாடல்களை எழுதியிருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை. சண்முகசுந்தரம் கேமரா. எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாக என்றாவது ஒரு நாள் இருக்கும்.”

அப்பா சைதை துரைசாமி என்ன சொன்னார்?

“படம் எடுக்கப்போறேன் என்று சொன்னதும் ஊக்கப்படுத்தினார். படம் எடுத்து முடிக்கும் வரை என்ன கதை, எப்படி எடுக்கிறேன் என்று கேட்கவில்லை. என்னோட கலை ஆர்வத்தில் அவர் தலையிட மாட்டார். அதே மாதிரி அவர் அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.”

அடுத்த படம் எப்படி இருக்கும்?

“கதை எழுதி முடித்துவிட்டேன். இதுவும் கதைக்காகவே எடுக்கப்படும் காதல் சம்பந்தப்பட்ட ஜனரஞ்சகமான படம்.”

கமலகண்ணன்

1 Comment

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...