பத்த வச்ச நெருப்பு பரபரன்னு பற்றி எரிவது போல படம் ஓடுகிறது.. தொடக்கத்திலிருந்து இறுதி வரை..
வழக்கமான ஒரு டான் கதைதான் போல என்று ஆரம்பக் காட்சிகளில் தோன்றினாலும்.. அதைத் தாண்டி சில ஏரியாக்களை டச் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.. அது இந்தப் படத்தை வித்தியாசப்படுத்த கை கொடுத்துள்ளது. அதை விலக்கி விட்டுப் பார்த்தால் இதுவும் ஒரு சாதாரண டான் கதையாக மாறிப் போயிருக்கும்.
2 டான்கள்.. ஒருவன் நல்ல டான்.. இன்னொருவன் மோசமான டான். பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறும் மக்களை காப்பாற்றி, அவர்களுக்கு அகதி அந்தஸ்து பெற்றுத் தருவது, தொழில் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட நல்லது செய்யும் டானாக வருகிறார் சிவதாஸ். அதற்கு நேர் எதிராக, அகதிகள் என்றாலே அருவறுப்பாக உணரும் இனவெறியனாக நிற்கும் பீட்டர் இன்னொரு டான்.
சிவதாஸின் செயல்கள் சட்டவிரோத குடியேறிகள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளதாலும், அவரால் பலருக்கு நல்லது நடப்பதாலும், எரிச்சலடையும் பீட்டர்.. சிவதாஸை தீர்த்துக் கட்ட ஒரு ஆளை களம் இறக்குகிறான். அவன்தான் சுருளி. இவன் ஒரு குட்டி டான்.. மதுரையில். அங்கு ஏற்படும் ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகும் சுருளிக்கு, லண்டனுக்கு வரும் வாய்ப்பு அமையவே கிளம்பி வருகிறான்.
வந்த இடத்தில் சிவதாஸுடன் நெருக்கமாகிறான்.. ஆனால் பீட்டரிடம் வாங்கிய பணத்துக்காக புத்தியைக் காட்டுகிறான்.. அதாவது துரோகம் செய்கிறான்.. அவனை நம்பிய சிவதாஸ் அவன் உதவியால் கொல்லப்படுகிறார்.. அதற்குப் பிறகு நடக்கும் பல திருப்பங்கள் சுருளியை மாற்றுகின்றன. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான், கடைசியில் என்ன நடக்கிறது.. இது மீதிக் கதை.. இதை நெட்பிளிக்ஸ் தளத்திற்குப் போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.
சேகர் கம்முலா இயக்கத்தில் மீண்டும் இணைகிறதா ரவுடி பேபி ஜோடி!? சேகர் கம்முலா இயக்கத்தில் மீண்டும் இணைகிறதா ரவுடி பேபி ஜோடி!?
தனுஷ்.. லட்டு கணக்கான ரோல்.. நன்கு அனுபவித்து பாய்ந்து கதகளி ஆடியுள்ளார். மதுரைக் காட்சிகள் அசத்துகின்றன. சண்டைக் காட்சிகளில் அனல் காட்டுகிறார். ஆனால் பல இடங்களில் ரஜினியை இமிடேட் செய்துள்ளார். அது ஏன் என்று தெரியவில்லை. சிலது ரசிக்க வைக்கிறது.. சிலதை ரசிக்க முடியவில்லை.. காரணம் ரஜினிக்கே உரியவை அவை.. அவரைத் தவிர வேறு யார் செய்தாலும் அது செயற்கையாகவே இருக்கும். ல காட்சிகளில் தனுஷை ரசிக்க முடிகிறது. சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் பல்லைக் காட்டினாலும் அதைத் தாண்டி காட்சியமைப்பில் அதை நிவர்த்தி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
ஜோஜு ஜார்ஜ்.. .மலையாளத்தில் முக்கிய நடிகராக உருவெடுத்து கலக்கிக் கொண்டிருக்கும் ஜார்ஜ் இப்படத்தில் சிவதாஸாக வருகிறார். அலட்டிக் கொள்ளாத கதாபாத்திரம்.. ஆனால் சீக்கிரமே அவரது கேரக்டருக்கு முடிவு கட்டியிருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. இன்னும் நிறைய நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் வந்தவரை அசத்தலாக செய்திருக்கிறார். சாகும்போது அவர் உதிர்க்கும்.. துரோகம்.. நம் இனத்தின் சாபம் என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல இருக்கும்..
ஈழத்தை “டச்” செய்துள்ளனர். ஈழப் போரின் காட்சிகளையும் சித்தரித்துள்ளனர். பெரிய ஆழமில்லை என்ற போதிலும் டச்சிங்காக அந்த காட்சிகள் அமைந்துள்ளன. சிவதாஸ் கொலைக்குப் பிறகு படத்தில் சற்று ஆழம் குறைந்தது போல தெரிகிறது. காட்சிகளை வலிய இழுத்துக் கொண்டு போவது போல தெரிகிறது. சிவதாஸ் இருந்தவரை பீட்டர் – சிவதாஸ் மோதல்.. இதில் நடுவே உதவிக்கு வரும் சுருளி என்ற அளவில் படத்தில் ஒரு பிடிப்பு இருந்தது.
ஆனால் சிவதாஸுக்குப் பிறகு தனது காதலிக்காக வேட்டையைத் தொடங்குகிறான் சுருளி. அதேசமயம், சிவதாஸ் இடத்திலும் அவன் அமர்கிறான். இதில் ஆழம் அதிகமாக இல்லை. காட்சிகள் பல இடங்களில் ஜவ்வாக இழுக்கிறது. இப்போது சுருளிக்கும், பீட்டருக்கும் இடையிலான போராக இது மாறுகிறது. ஒரு படம் முடிந்து, இன்னொரு படம் ஆரம்பிப்பது போல ஒரு பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பீட்டர் ரோலில் நடித்துள்ள நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ பற்றி கொஞ்சம் பேச வேண்டும்.. லண்டன் தாதா போல செயல்பட்டிருக்க வேண்டிய அவரை தமிழ் தாதா ரேஞ்சுக்கு உலவ விட்டுள்ளனர். அவர் பேசும் வசனமும் கூட அப்படித்தான் இருக்கிறது. என்ன சொல்றேனோ அதை மட்டும் பண்ணனும்.. அதை விட்டுட்டு ஹீரோவாக ஆசைப்பட்டா அவ்வளவுதான் என்று அவர் ஆங்கிலத்தில் சொல்லும்போது அவ் என்று கொட்டாவி விடத் தோன்றுகிறது. வேற மாதிரி அவரை பேச வச்சு அலப்பறையைக் கூட்டியிருக்கலாம். அதை விட அவரை கடைசிக் காட்சியில் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து எங்கேயோ இறக்கி விட்டு இப்படியே கிட என்று சொல்வது சற்றே பெரிய காமெடி.. தவிர்த்திருக்கலாம்!
சினிமாத்தனம், லாஜிக் ஓட்டைகள்.. இப்படி சில சில தொய்வுகள் இருந்தாலும்.. தனுஷ் என்ற ஒற்றை மனிதனின் சர்வாதிகாரமாக இந்த ஜகமே தந்திரம் உருவாகியுள்ளது. நல்ல பொழுது போக்கு ஆக்ஷன் படம் என்பதில் சந்தேகமில்லை.. ஜாலியாக ரசிக்கலாம்.. தியேட்டரில் வந்திருந்தால் திரையில் தெறித்த ஆக்ஷன் அதிரடியை சீட்டுகளின் நுனியில் இருந்து ரசித்திருக்கலாம்.. அது மட்டும்தான் மிஸ்ஸிங்.
ஜகமே தந்திரம்.. தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும்.