மலேசியா to அம்னீஷியா – விமர்சனம் | லதா சரவணன்

 மலேசியா to அம்னீஷியா – விமர்சனம் | லதா சரவணன்

பெங்களூரில் தன் காதலி ரியா சுமனைச் சந்திக்க குடும்பத்தினர்களிடம் மலேசியா செல்லப்போவதாக சொல்கிறார் வைபவ் அவரின் கெட்ட நேரம் ப்ளைட் காணாமல் போகிறது. அலைபாயும் உணர்வுகளை அடக்கிடச் சென்ற இடத்தில் அட்சரச் சுத்தமாய் ஒரு சொதப்பல் அரங்கேறுகிறது.

மொழி, காற்றின் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களுக்கு உணர்வு பூர்வமான திரைச்சித்திரங்களைக் கொடுத்த ராதாமோகன் மீண்டும் ஒரு நகைச்சுவை சித்திரத்தோடு ஆங்காங்கே உணர்வுக் கலவைகளையும் தூவி இருக்கிறார். ZEE 5 தளத்தில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தினை குடும்பத்துடனே பார்த்து ரசித்து சிரிக்கலாம்.

அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களின் நடிப்பும் அவரின் குரல் மொழியும் உடல் மொழியும் அத்தனை அற்புதம் தன்பெண்ணுக்கு பார்க்க வந்த மாப்பிள்ளையை கண்காணிக்கச் செல்லும்போது அவர் மேற்கொள்ளும் எச்சரிக்கை நடவடிக்கைகள் அவரின் உடை அதற்கு வாணிபோஜனின் நக்கலான கலாய்ப்பு எல்லாம் ஏ ஒன். அதிலும் ஒரு பெண்மணியுடன் அவர் டூயட் பாடி பிறகு அவரை நேரில் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சில நாட்களுக்கு முன்னால் அவர் நடித்த வெப்சீரிஸ் ஒன்றில் தனிமையில் வசிக்கும் முதுமையான ஒரு கதாப்பாத்திரத்தை அசால்ட்டாக நடித்திருப்பார். ராதிகா அவர்களின் சீரியலில் வெகு அட்டகாசமாக வில்லத்தனம் செய்திருப்பார். நல்ல குரல் வளம் அவருக்குள் ஒரு மல்ட்டிடேலண்ட் மனிதர் அவர். கிடைத்த வாய்ப்பை அழகாக கையாண்டு இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் அவர் வைபவ், கருணாகரனை மடக்குவதும் கேள்வி மேல் கேள்விகள் கேட்பதும் அதற்கு ஹிஸ்டீரியா பேஷண்ட் போல வைபவ் ரியாக்ட் செய்வதும் செம்ம காமெடி, மனைவியை அடையாளம் தெரியவில்லை ஆனால் பாஸ்கரைப் பார்த்ததும் ஒரு நொடி நிதானித்து அவருக்கு நம்பிக்கை கொடுத்து பின் டாங்லீ எனச் சொல்லும் இடமெல்லாம் நன்றாகவே உள்ளது.

சச்சினிடம் கையெழுத்து வாங்கிய பேட் பாஸ்கரிடம் படும் அவஸ்தையைப் பார்த்து தன் ஒட்டுமொத்த கோபத்தையும் வெளிக்காட்டவும் முடியாமல் தவிக்கும் அநேக இடங்களில் வைபவ் கைத்தட்டல்களை வாங்கிக்கொள்கிறார்.

பிளைட் காணவில்லை சிலமணி நேரங்களுக்கு முன்பு இனித்த காதலியின் அருகாமை கசக்கும் அந்தக் காட்சிகள் நான் என்ன செய்வேன் இதில் என் தப்பு என்னயிருக்கிறது என்று அவள் கேட்கும் இடங்களில் குற்றவுணர்வுடன் பதிலும் சொல்ல முடியாமல் நகரும் போது, மறதியின் மொத்த உருவமாக சச்சு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரதிபலிப்பு ஒரு காட்சியில் உன்னை ரொம்ப நம்பினேடா இப்படி செய்திட்டியே என்று வைபவ்வை அறையும் போது தான் செய்த தவறை எண்ணி அவர் கலங்குவதும், மனைவியின் பெயரைச் சொன்னதற்கே வாணியின் கண்கள் கலங்குவதைப் பார்த்து தன் தவறை எண்ணி வருந்துவதும் என்னையும் மறந்துட்டியாப்பா என்ற பிள்ளையின் கேள்விக்கு கலங்குவதும் தங்கள் திருமணம் நிச்சயமான நாளைப்பற்றி வாணி சொல்லிவிட்டு என்னநடந்திருந்தாலும் பரவாயில்லை நீங்க பழைய மாதிரி ஆனா போதும் என்று சொல்லும்போது ஒருவிநாடி இதுதான் உண்மை என்று சொல்லிவிடலாமா என்பதைப்போல முகபாவத்தை வைபவ் அழகாக கொண்டு வந்து பின் வாணியின் தோள்மேல் கைபோட்டு தலைசாய்த்துக் கொள்வதைப் போல் காட்டியிருப்பது. கணவன் மனைவிக்குள் ஒரு சிறிய காமம் கலக்காத தொடுதலின் பலத்தை உணர்த்தியிருக்கிறது. அதற்குத்தான் எத்தனை மகத்துவம்.

கடைசி காட்சியில் வாணிபோஜன் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். அந்த ஆக்ரோஷம் எனக்கு என் கணவர் உடல்நிலை முக்கியம் என்று பாஸ்கரை திட்டுவது. கருணாகரனின் பஞ்ச் வசனங்கள் பல இடங்களில் சிரிப்பினை வரவழைக்கிறது.

மீன்குஞ்சிற்கு நீந்தக்கற்றுத்தரவேண்டுமா என்ன ?

அய்யா சித்ராலயா கோபு அவர்களின் பேரனும் பேத்தியும் நமது கலாச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மகனும் மகளும் இந்த திரைப்படத்தில் பணிபுரிந்து இருக்கிறார்கள். கொரானா காலத்தில் நிச்சயம் இத்திரைப்பட அங்கத்தினர்கள் அனைவரும் நிறைய சிக்கல்களை தாண்டி வந்திருப்பார்கள். அவர்களின் சிரமங்கள் அனைத்திருக்கும் இத்திரைப்படத்தின் வெற்றி உரித்தாகட்டும்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...