ஏழை மக்கள் மருத்துவர் டாக்டர் க. பார்த்தசாரதி மறைந்தார்…
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மணிகண்டன் தெருவில் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் டாக்டர் க. பார்த்தசாரதி அவர்கள் மருத்துவ சேவை ஆற்றி வந்தார்.
மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாத அந்த காலத்தில் இவரது மருத்துவ சேவை வருமானத்தை நோக்கமாக கொண்டிராமல், லாப நோக்கமற்ற சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது. மேன்மையான கல்வியை பெறாத ஏழை தொழிலாளர் நிறைந்த மக்கள் வாழும் வடசென்னை மக்களுக்கு அவரின் மருத்துவ சேவை மாபெரும் வரப்பிரசாதமாக இருந்தது.
சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தன்னலம் கருதாத மகத்தான மருத்துவ சேவை மூலம் “ஆஸ்பத்திரிக்கு போக சாசில்லை அதனால் ஆஸ்பத்திரிக்கு போகவில்லை ” எனும் மனநிலையை வட சென்னை மக்களிடம் அற்றுப்போகச் செய்து, இல்லை என்போரையும் நாளை என்போரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்ட மருத்துவராய் இருந்தார்.
காலப் போக்கில் வடசென்னைப் பகுதியில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமான நிலையிலும், நவீனமான கட்டமைப்பு வசதிகளுடன் பல மருத்துவ மனைகள் உருவான நிலையிலும் ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யும் மருத்துவர் இவர் ஒருவர் மட்டுமே எனும் நிலையில் இவரது மருத்துவ சேவை அமைந்திருந்தது.
பல்வேறு வகையான மக்களிடமும் மருத்துவ சேவையின் போது இன பேதம் அறியாது, கோபம் என்பதே இல்லாமல் இன்முகம் கொண்டு பேசி, குடும்ப நலம், குழந்தை நலம், தொழில் நலம் என பலவற்றையும் ஆவலுடன் கேட்கும் குடும்ப மருத்துவராக திகழ்ந்தார்.
நடுவூரில் பயன் மரம் பழுத்தது போல், நீரின்றி அமையாத இவ்வுலகின் ஊர்களில் ஊருணி நீர் நிறைந்தது போல் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்து மகிழ்வித்த கண்கண்ட தெய்வம் மண்ணுலகத்திற்கு விடை கொடுத்து இன்று(20.5.2021) விண்ணுலகம் புதுந்துள்ளது.
தியாக உணர்வு கொண்டு வட சென்னை மக்களை தயாள உள்ளம் கொண்ட மருத்துவ சேவை மூலம் மகிழ்வித்த மக்கள் மருத்துவர் டாக்டர் க. பார்த்தசாரதி அவர்களின் இழப்பு பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பால் வருந்தி வாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து, அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
1 Comment
ஓம் சாந்தி