வரலாற்றில் இன்று – 14.03.2021 பை தினம்

 வரலாற்றில் இன்று – 14.03.2021 பை தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினமாக கொண்டாடப்படுகிறது. இதுபை என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் ℼயைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் ℼ தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.

இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு,ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது.

குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் 1955ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1883ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான ஜெர்மன் தத்துவியலாளர் கார்ல் மார்க்ஸ் மறைந்தார்.

1932ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஒளிப்படச்சுருளை கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் மறைந்தார்.

1794ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி எலி விட்னி என்பவர் பஞ்சை தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...