வரலாற்றில் இன்று – 23.07.2020 பால கங்காதர திலகர்
விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.
இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.
ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889ஆம் ஆண்டு இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908ஆம் ஆண்டிலிருந்து 1914ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார்.
முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் 1920ஆம் ஆண்டு மறைந்தார்.
சந்திரசேகர ஆசாத்
இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.
15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.
கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். ஆசாத், ஒவ்வொரு அடி விழும்போதும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழங்கினார். பிறகு இவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என்று அழைக்கப்பட்டார்.
லாலா லஜ்பத்ராயின் மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931ஆம் ஆண்டு இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்த போது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.
முக்கிய நிகழ்வுகள்
1925ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய தமிழக தியாகி சுப்பிரமணிய சிவா மறைந்தார்.