வரலாற்றில் இன்று – 27.06.2020 – அகிலன்
தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கள10ரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.
சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.
அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராஜா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது.
கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செருமனி, சீனா, மலாய் மற்ரும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது.
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. உலகின் மற்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேங்கையின் மைந்தனாக இருந்த சிறப்புமிக்க இராஜேந்திர சோழனின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவை அகிலன் இந்நாவலில் வழங்கியுள்ளார்.
இராஜந்திர சோழன் இராஜராஜ சோழனின் மகன் ஆவார். அவரது காலம் கலை, இலக்கியம் மற்றும் நிர்வாகத்தில் தமிழர்களின் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தோனேசியா, இலங்கை, கடாரம் எனப்படும் மலேசியா, இந்தியாவின் தெற்கு மற்றுன் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியனவற்றை இவர் வெற்றி கொண்டார்.
கி.பி 1010 இல் இவர் வாழ்ந்ததாகவும் இவருடைய வம்சம் பல்வேறு வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாவலானது கடாரத்தின் மீது பெற்ற வெற்றியையும், இந்தியாவின் வடக்குப் பகுதியை வெற்றி கொண்டதற்காக புதிய நகரமான கங்கைகொண்டா சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கியதையும் பிரதிபலிக்கிறது.
புதிதாக கட்டப்பட்ட கோயிலும் நகரமும் போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பல கட்டடக்கலை வடிவமைப்புகளை கொண்டிருந்தது.
நாடுகளை வென்றதுடன் அழகிய பெண்களான அருள்மொழி மற்றும் ரோகினி ஆகியோரின் இதயங்களையும் இளங்கோ வேல் கைப்பற்றினார். அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் அகிலனின் எளிய சக்திவாய்ந்த வார்த்தைகளால் சித்தரிக்கப்பட்டது. இராசேந்திர சோழனின் மூத்த ஆலோசகராக வந்தியத் தேவன் நாவலில் தோன்றி போர் மற்றும் நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்குகிறார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகவும் வேங்கையின் மைந்தன் நாவல் பார்க்கப்படுகிறது. சோழர் காலத்தின்போது நடந்த வரலாற்று உண்மைகளை விவரிப்பதாலும் சரியான மொழியைப் பயன்படுத்தியிருந்ததாலும் இந்த நாவல் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
‘கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிசு பெற்றது.
அகிலாண்டத்தின் புனைபெயர் அகிலன் ஆகும். இவர் 1922 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். பெருங்காளூர் என்ற இக்கிராமத்திலேயே அகிலன் தன்னுடைய இளமைப்பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது.
ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களமிறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார்..
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் தோன்ற தொடங்கின.
தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அகிலன், 1988ஆம் ஆண்டு மறைந்தார்.
ஹெலன் கெல்லர்
ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன், பேசும்திறன், கேட்கும்திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்தார்.
இவர் ஆனி சலிவன் (Anne Sullivan) ஆசிரியை உதவியுடன் பத்து வயதுக்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903ஆம் ஆண்டு தி ஸ்டோரி ஆஃப் மை லைப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.
மேலும் இவருடைய சுயசரிதை தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இது தவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார்.
பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி மிராக்கிள் ஒர்க்கர் (The Miracle Worker) திரைப்படம் ஆஸ்கார் விருதை பெற்றது.
வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்ட ஹெலன் கெல்லர் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
2007ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞரான டி.எம்.தியாகராஜன் மறைந்தார்.
1998ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
1838ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தார்.
1859ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி ஹேப்பி பர்த் டே டூ யூ பாடலை இயற்றிய மில்ட்ரெட் ஜே.ஹில் அமெரிக்காவில் பிறந்தார்.