கலைவாணர் எனும் மாகலைஞன் – 12 – சோழ. நாகராஜன்
12 ) கோபக்கார சாண்டோவுக்கே அதிர்ச்சி தந்த கிருஷ்ணன்…
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மேனகா படத்தில் வில்லத்தனம் புரியும் காமெடியன் வேடம். அந்தப் பாத்திரத்திற்குப் பெயர் சாமா ஐயர். நாயகி மேனகாவை சதா துன்புறுத்துவதே சாமாவுக்கு வேலை.
இப்படியான சூழலில் ஒருநாள் மேனகாவை சாமா ஐயர் கடத்திக் கொண்டுபோய்விடுகிறார். கடத்திய மேனகாவை நைனா முகமது என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிடுகிறார். அத்துடன் விடுவதாகவும் இல்லை அவர். மேனகா நடிகன் ஒருவனுடன் ஊரை விட்டே ஓடிப்போய்விட்டாள் என்று ஒரு கதையையும் கட்டிவிடுகிறார்.
அவருக்கு உடந்தையாக இருக்கிறாள் தாசியொருத்தி. அவள் பெயர் கமலம். சாமா ஐயருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் கமலத்தின் மனதிற்குள் வேறு எண்ணம் இருக்கிறது. அவருக்கு உடந்தையாக இருப்பதுபோல நடித்து, சமயம் பார்த்து அவரிடம் கொள்ளையடிக்கும் திட்டத்தோடுதான் இருக்கிறாள் தாசி கமலம்.
இப்படியான கதையமைப்புடன் மேனகா படப்பிடிப்புக்குத் திட்டமிடப்பட்டது. தாசி கமலம் வேடத்தில் டி. விமலா என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரோடு வேறு பாத்திரங்களான கோமளம் மற்றும் கனகம்மாள் ஆகிய வேடங்களில் நடிப்பதற்காக டி.ஆர். காந்தாமணி, டி.கே. ராஜாமணி ஆகியோரும் வந்திருந்தார்கள். இந்த மூவரும் சகோதரிகள். இவர்கள் மூவரும் இயக்குநர் ராஜா சாண்டோவுக்கு மிகவும் வேண்டியவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்தார்கள்.
சாமா ஐயரை தாசி கமலம் மயக்குவதாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்தப் பாடலின் வரிகள் இப்படி இருந்தன:
“ஆசை என்பதோர் அளவு மீறியே
ஆகா வெகு மோகமானேன்
அணையவாரும் துரையே நீரும்…”
– இப்படிப் போயின அந்தப் பாடலின் சொற்கள்.
கிருஷ்ணனைப் பார்த்து அணையவாரும் துரையே என்று பாடமாட்டேன் என்ற பிடிவாதமாக மறுத்துவிட்டார் கமலமாக நடித்த விமலா. பாடலாசிரியர் பூமிபாலகதாஸ் அந்த வரிகளை மாற்றமுடியாது என்று மறுத்தார். கடைசியில் படத்திற்கு இசையமைப்பாளரான ‘சின்ன அண்ணா’ முத்துசாமி தலையிட்டார். அந்த வரிகளை அணையவாரும் என்பதை மாற்றி அருகில் வாரும் துரையே என்று எழுதிக்கொடுத்தார்.
இதே மேனகாவை நாடகமாகப் போட்டபோது டி.கே. சண்முகம்தான் தாசி கமலமாகப் பெண் வேடமிட்டிருந்தார். அது அரங்கில் நல்ல சிரிப்பலையை உண்டுபண்ணுவதாக இருந்தது. தாசியும் சாமா ஐயரும் இந்தக் காட்சியில் நெருக்கமாக நடித்தார்கள். அதனால் அது யதார்த்தமாக அமைந்த காட்சியானது. இப்போது அதுவே சினிமாவாக எடுக்கப்படுகிற நிலையில், தாசி கமலம் வேடத்தில் அசலான பெண்ணே நடிப்பதால் இந்தக் காட்சிகள் இன்னமும் சுவாரசியமாக இருக்கும் என்று கருதி படப்பிடிப்பு தளத்தில் கூட்டமும் கூடிவிட்டிருந்தது.
ஆனால், தயாரிப்பாளர்களே எதிர்பார்த்த மாதிரி அந்தக் காட்சியில் தேவையான அளவில்கூட யதார்த்தமான நெருக்கம் இல்லை. இயக்குநர் தனக்கு வேண்டிய பெண் என்பதால் விமலாவை கிருஷ்ணனுக்கு சற்று விலகியபடி நடிப்பதற்கு ஏற்பவே காட்சிகளை அமைத்திருந்தார். இதை கவனித்த கிருஷ்ணனுக்கு இது தன்னை அவமதிப்பதாகப் பட்டிருக்கவேண்டும். என்னதான் இயக்குநருக்கு வேண்டிய பெண் என்றாலும் அதற்காக இப்படியா என்று கிருஷ்ணன் எண்ணியிருக்கவேண்டும்.
சாமா ஐயரை மயக்கிக் கொள்ளையடிக்கும் எண்ணத்தோடு அவரிடம் சல்லாபம் செய்யவேண்டிய தாசி கமலம் சாமாவைத் தொடவோ நெருங்கி உட்காரவோ இல்லை. நாடகத்தில் இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்துப் பழக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர்களான மொகைதீனும் சோமசுந்தரமும் படத்தில் இந்தக் காட்சியில் உண்மையிலேயே ஒரு பெண் நடிப்பதால் அது இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இருந்தாலும் இயக்குநர் ராஜா சாண்டோவிடம் இதுகுறித்துக் கேள்வியெழுப்பும் துணிவு எவருக்குமில்லை. ஆனால் கிருஷ்ணன் மட்டும் ஒரு உத்தியைக் கையாண்டார்.
கதைப்படி சாமாவிடம் சல்லாபம் செய்யும் தாசி கமலம் பாட்டுப் பாடி முடித்ததும் திருடர்கள் உள்ளே புகுந்து கட்டிலைச் சூழ்ந்துகொள்வதாகக் காட்சி போகிறது. அப்போது பயத்தில் சாமாவை நோக்கி கமலம் ஓடிவந்து அவரைக் கட்டியணைத்துக்கொள்கிறாள். அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்டபடியே அந்தத் திருடர்களுடன் சாமா சண்டை போடுவதாகக் காட்சி நீளும். இந்தக் காட்சியை ராஜா சாண்டோ விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட கிருஷ்ணன் இப்படிச் சொன்னார்:
“எல்லாம் சரி… ஆனால் அந்தம்மா விமலா என்னைக் கட்டிக்காதபடி வேறவழி ஏதாவது பண்ணுங்களேன்…” – என்றார்.
இதை சற்றும் எதிர்பாராத சாண்டோவுக்கு அதிர்ச்சி.
படப்பிடிப்பு தளமே அமைதியில் உறைந்திருந்தது.
இப்படி யாருமோ எதிர்த்துப்பேசியதில்லை ராஜா சாண்டோவை. அவரிடம் மரியாதையைவிட பலருக்கும் பயமே அதிகம். அந்தக் கோபக்கார இயக்குநர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற உணர்வோடு கலைஞர்கள் திகைத்து நின்றார்கள்.
ஆனால் கிருஷ்ணனிடம் அச்சம் விடைபெற்றுப் போயிருந்தது என்பதுமட்டும் எல்லோருக்கும் புரிந்தது.
கிருஷ்ணனைப் பார்த்துக் கேட்டார் ராஜா சாண்டோ இப்படி:
“ஏன்டா உன்னை விமலா கட்டி அணைத்துக்கொள்ளக் கூடாது?”
கிருஷ்ணன் மௌனம் கலைத்து வாய்திறந்தார்:
“நான் பதிவிரதன்!”
“என்ன பதிவிரதனா? இதென்னடா புதுசா இருக்கு?” – இது இயக்குநர்.
“புதுசு ஒண்ணுமில்லை. பொம்பளையில பதிவிரதை இல்லையா? அதுபோல ஆம்பளையில நான் பதிவிரதன். மனைவியைத் தவிர வேற பெண்கள் என்னைத் தொட அனுமதிக்க மாட்டேன்!”
இயக்குநருக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சி. தயாரிப்பாளர் எஸ்.கே. மொகைதீனைப் பார்த்துக் கேட்டார்:
“என்ன எஸ்.கே. உங்க கிருஷ்ணன் தகராறு பண்றான்? தொட்டு ஆக்ட் பண்ணாமப்போனா காட்சி நல்லாயிருக்குமா?”
இதைக் கேட்ட மொகைதீனுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. ராஜா சாண்டோவின் தவற்றைச் சுட்டிக்காட்டத்தொடங்கினார்.
“பின்ன என்னங்க … இந்தக் காட்சியை இப்படியா எடுக்குறது? நாடகத்தில கிருஷ்ணனும் சண்முகமும் எவ்வளவு அற்புதமா நடிச்சிருக்காங்க இந்தக் காட்சியில. நடிகையை வைத்து எடுக்குறதால சினிமாவில் இந்தக் காட்சி இன்னும் சிறப்பா அமையும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். தொடக்கத்திலிருந்தே சாமாவும் கமலமும் தொட்டுக்கொள்ளாமலேயே படத்தை முடிச்சிட்டீங்களே… அதனால காட்சி யதார்த்தமா அமையவில்லை என்கிற வருத்தத்தில்தான் கிருஷ்ணன் இப்ப தகராறு பண்றாரு…” – என்று ஒரே மூச்சில் தன் ஆதங்கத்தைச் சொல்லி முடித்தார் மொகைதீன்.
தனக்கு மிகவும் வேண்டிய பெண் என்பதால் விமலா கிருஷ்ணனுடன் நெருக்கமாக நடிப்பதைத் தவிர்த்த தனது தவறை உணர்ந்தார் ராஜா சாண்டோ.
“கிருஷ்ணா… இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே… சரி சரி, மறுபடியும் அதே காட்சியை எடுப்போம். நீ நாடகத்தில் நடித்ததுபோலவே இதிலும் நீ விரும்பியபடி நடிக்கலாம். உனக்கு மகிழ்ச்சிதானே?” – என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அந்தப் பிரச்சனையின் காரணகர்த்தாவாக இருந்த இயக்குநர்.
( கலைப் பயணம் தொடரும்)
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 | பகுதி – 14 | பகுதி – 15 | பகுதி – 16 | பகுதி – 17 | பகுதி – 18 | பகுதி – 19 | பகுதி – 20 |