வரலாற்றில் இன்று – 02.06.2020 – இளையராஜா
திரையுலகின் முடிசூடா மன்னன் ‘இசைஞானி’ இளையராஜா 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராசய்யா.
இவர் 26வது வயதில் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தார். பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவருக்கு ‘இளையராஜா’ என்ற பெயரை படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் சூட்டினார். இதை தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் இவரது இசை, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
லண்டனில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழவில் (Royal Philharmonic Orchestra) சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
பத்ம பூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார்.
முக்கிய நிகழ்வுகள்
1882ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி (Garibaldi) மறைந்தார்.
1840ஆம் ஆண்டு ஜுன் 2ஆம் தேதி புதின எழுத்தாளர் மற்றும் கவிஞரான தாமஸ் ஹார்டி பிறந்தார்.
1956ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைப்படத்துறையில் ஒரு மாமேதையாக போற்றப்படும் மணிரத்னம் மதுரையில் பிறந்தார்.
2015ஆம் ஆண்டு ஜுன் 2ஆம் தேதி மலேசிய தமிழறிஞர் சி.ஜெயபாரதி மறைந்தார்.