வரலாற்றில் இன்று – 30.05.2020 – சுந்தர ராமசாமி
நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) 1931ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி நாகர்கோவில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது ஆரம்பகாலக் கதைகள் சாந்தி என்ற இதழில் வெளிவந்தன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன் என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். பிறகு அவருடைய செம்மீன் நாவலையும் மொழிபெயர்த்தார்.
இவர் பசுவய்யா (Pasuvayya) என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 1988ஆம் ஆண்டு காலச்சுவடு என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட சுந்தர ராமசாமி 2005ஆம் ஆண்டு மறைந்தார்.
அலெக்ஸி லியோனோவ்
உலகிலேயே விண்வெளியில் நடந்த முதல் மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexey Leonov) 1934ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி லிஸ்த்வியன்கா (Listvyanka) (சோவியத் ஒன்றியம்) என்ற ஊரில் பிறந்தார்.
1960ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய விமானப் படையைச் சேர்ந்த 20 பைலட்டுகளில் இவரும் ஒருவர். இவரும், பாவெல் பையயோவ் என்ற பைலட்டும் வோஸ்நாட்-2 என்ற விண்கலத்தில் பயணம் செய்தனர்.
1965ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி அலெக்ஸி விண்வெளியில் 12 நிமிடங்கள் 9 நொடிகள் நடந்தார். இது மனித வரலாற்றின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகும்.
சோவியத் நாட்டின் ஹீரோ விருதை இரண்டு முறையும், லெனின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1987ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி கோவா இந்தியாவின் 25வது மாநிலமாகியது.
1912ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுள் ஒருவரான வில்பர் ரைட் மறைந்தார்.
1971ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி, செவ்வாய்க்கோளின் 70 சதவீத பரப்பளவை கண்டறியவும் மற்றும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் மரைனர் 9 (Mariner 9) விண்கலம் ஏவப்பட்டது.