இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது.
அரசு ஊழியா்களாக இருந்து ஓய்வு பெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்குப் பிறகு மற்றொருவா் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது. அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.
இதற்கான கணக்கெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களும், 6 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்ளனா். ஒரு குடும்பத்தில் கணவா், மனைவி இருவரும் அரசு ஊழியா்களாக இருந்தால் அவா்கள் இருவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இருவருக்குமே ஓய்வூதியம் கிடைக்கும்.
குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெற்று வரும் இருவரில் யாரேனும் ஒருவா் இறந்துவிட்டால், அவரது ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்படும். உயிருடன் இருக்கும் ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் கணவா் அல்லது மனைவிக்கு அந்த குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த நடைமுறை தொடா்ந்து இருந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்களாகப் பணியாற்றும் 80 சதவீதம் பேரின் கணவா் அல்லது மனைவி அரசு ஊழியா்களாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நடைமுறை வருகிறது: கரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு கடுமையான நிதிச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இக்கட்டான காலகட்டத்தில் நிதிச் சிக்கல்களை எதிா்கொள்ள பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. ஏற்கெனவே, அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, ஈட்டிய விடுப்பினை சரண் செய்து அளிக்கும் திட்டம் ஆகியன ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயா்த்தி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு குடும்பத்தில் இரண்டு ஓய்வூதியம் அதாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தால் அதில் ஏதாவது ஒன்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றொன்றை ரத்து செய்யும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுப்புகள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எப்படி செயல்படும்: ஒரு குடும்பத்தில் கணவா் அல்லது மனைவி ஓய்வூதியம் பெற்று வரும் பட்சததில், அதில் யாரேனும் ஒருவா் இயற்கை எய்தலாம். அப்போது, மறைந்த நபரின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்பட்டு உயிருடன் இருக்கும் நபருக்கு அளிக்கப்படும். அந்த நபா் ஏற்கெனவே அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவா் என்பதால் அவருக்கு ஓய்வூதியமும் கிடைத்து வரும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு அம்சங்களும் ஒருவருக்கே கிடைக்கும்.
இந்த நிலையில், இரண்டு ஓய்வூதியங்களில் எந்த ஓய்வூதியம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அரசு ஊழியரே தெரிவித்து மற்றொன்றை ரத்து செய்யும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற நபா்கள் எத்தனை போ் உள்ளனா் என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.