செருப்புகள் – எழுத்தாளர் குட்டி ரேவதி

 செருப்புகள் – எழுத்தாளர் குட்டி ரேவதி

செருப்பு கிடைக்காத காலத்திலிருந்து விதவிதமான செருப்பு போடும் காலத்திற்கு வந்தவள் நான். வீட்டிற்குள் கூட செருப்பு அணிய வேண்டியிருக்கிறது. சிமெண்ட் தரையின் தன்மை அப்படி உடலுக்குக் கேடானது. இன்றும் வெளியூர் எங்கு சென்றாலும் அனிச்சையாக மக்களின் கால் நோக்கியே பார்வை போகும். அவர்கள் செருப்பு அணிந்திருக்கிறார்களா என்று புத்தி அறிய விரும்பும். பெரும்பாலான ஊர்களில் இன்னும் கல்வி, மின்சாரம் போலவே செருப்பும் சென்று சேரவில்லை. நிறைய முதியவர்கள், ஏன் பள்ளிக்குச் செல்லும் சிறுமி சிறுவர் கூட செருப்பு இல்லாமல் செல்வதைப் பார்த்திருக்கிறேன். சில முதியவர்களின் கால்கள் செருப்பு போடாமல் நடந்து நடந்தே கரடு தட்டி வெப்பத்திற்கு மரத்துப் போயிருக்கும். நம் நாட்டில் எங்குமே நீங்கள் வெறும் பாதங்களால் நடந்து செல்ல முடியாது. ஒன்று கொடுமையான வெயில் இருக்கும், அல்லது முட்கள் இருக்கும், அல்லது தூய்மையின்மை மலிந்து கிடக்கும்.

நம் தேசம் ஒன்றும் பசும் புல்வெளிகளால் ஆனது இல்லை. பாலையால் ஆனது. கொடும் மணல் வெளியால் ஆனது. கந்தக பூமியால் ஆனது. தார்ச்சாலைகளால் ஆனது. முட்புதர்களால் ஆனது. வெப்பம் தகிப்பாகி உடலுக்குள் சென்று என்னவென்னவெல்லாம் ஆகும் என்பதை ஒரு மருத்துவராகவும் றிவேன். பெரும்பாலான புற்றுநோய்களுக்கு இப்படியான வெப்பம் உடலுக்குள்ளே போய் சேகரமாவது தான் காரணம். என் அம்மாவிற்குக் கால் முறிந்து ஒரு கால் மட்டும் சிறிய உயரம் கூடிய செருப்பு அணிய வேண்டியிருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மருந்து மாத்திரைக்குக் கவனம் கொடுப்பது போலவே அத்தகைய செருப்பையும் உருவாக்குவது சவாலாக இருந்தது. வடிவமைத்து உருவாக்கவேண்டியது என்பதால் பல முறைகளில் சரியாக வரவில்லை. கோடம்பாக்கத்தில் செருப்பு தைக்கும் இளைஞர் ஒருவர் இருக்கிறார். என்னை அம்மா என்று தான் அழைப்பார். அவ்வளவு கண்ணும் கருத்துமாக செருப்பைத் தைத்துக் கொடுப்பார். என் அம்மாவின் கால் அளவு, முறை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு கவனமாகத் தைத்துக்கொடுப்பார். அவ்வளவு அக்கறையும் நேர்த்தியும் அந்தச் செருப்பை உருவாக்கி இருப்பதில் இருக்கும். வாழ்வில் அவரைக் கண்டடைந்தது அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள் செருப்பு அணியக்கூடாது என்று தடைசெய்யப்பட்ட ஊர்கள் உள்ளன. செருப்பு என்பதைப் பெறுவதும் செருப்பைப் போடும் உரிமை பெறுவதுமே இங்கு எவ்வளவு அத்தியாவசியமானவை. இன்று மக்கள் நீண்ட நீண்ட சாலைகள் வழியாகப் புலம் பெயர்ந்து நகரும் போது என் மனதில் முதலில் தோன்றுவது பசிக்கும் வயிற்றுக்குத் தேவையான உணவினும் அவர்களுடைய கால்களுக்குத் தேவையான செருப்புகள் தாம். எந்நேரமும் கால்களுக்குத் தேவையானவை செருப்புகள். நாம் உண்மையிலேயே அந்தப் பிஞ்சுப் பாதங்களுக்குத் தேவையான செருப்புகளைக் கோரித்தான் முதலில் போராடவேண்டும். உதவ விரும்புபவர்கள் முதலில் செருப்புகளிலிருந்து தொடங்கவேண்டும். தனியொருவருக்கு செருப்புகள் இல்லையெனில் இந்த உலகத்தை அழித்திடுவோம், மக்களே! சுடும் பாதம், கொடும் பாவம்.

இந்தத் தேசத்தில் செருப்பு போடும் உரிமை வேண்டும்! தனக்கு உரிமையான செருப்புகளும் வேண்டும்! செருப்பு போட்டு நடக்கும் உரிமையையாவது பெறுவோம்!

புகைப்படம்: யாரோ

நன்றி : எழுத்தாளர் குட்டி ரேவதி அவர்களின் முகநூல் புத்தக பதிவிலிருந்து…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...