மது – எழுத்தாளர் லதா சரவணன்
மது அரசர் காலத்தில் இருந்து தற்போது வரை மிகவும் ஒரு பிரச்சினைக்குரிய ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. மது அருந்தினால் நிதானம் இழப்பது நிச்சயம்.
இதனால் பல விஷயங்கள் நடைபெறலாம். நிச்சயமாக நல்ல விஷயம் நடைபெறும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாண வளர்ச்சியாக தான் மது வந்து போகிறதே தவிர அதை சுத்தமாக ஒழிக்க முடியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
இன்றும் (கொரோனாவிற்கு முன்) பல ஆட்கள் சனிக்கிழமை மாலை அந்த மதுக்கடையில் கூட்டம் கூட்டமாக நிற்பதை பார்க்கலாம். அதுவும் ரோட்டு ஓரமாக தெருவோரமாக வீதியில் நிற்பதை கேவலம் என்று நினைப்பதை தாண்டி, அந்த மதுபாட்டில் கையில் கிடைத்தால் போதும் என்று ஆசையுடன் நிற்க்கும் திறமையான மகா புத்திசாலிகளையும், அங்கு பார்க்கும் பொழுது ஒரு சில கணம் வருத்தம் ஏற்படுகிறது, என்னவோ உண்மைதான்.
அதைப் பற்றிய விழிப்புணர்வுக்காக நமது பொறுப்பாசிரியரும் சமூக அக்கறையாளரும் எழுத்தாளருமான திருமதி. லதா சரவணன் அவர்கள் தோழி ஊடகத்திற்காக பேசிய காணொளி காட்சி இதோ உங்களுக்காக…
உங்களின் உண்மையான விமர்சனத்தை இங்கு பதிவிட்டால் மின் கைத்தடி மின்னிதழ் இன்னும் மெருகேறும் என்று நம்புகிறோம்
குடிமகன் பேசுகிறேன்
மதிக்கிறேன் மகிழ்கிறேன் நான் அரசே
நீ மதுக்கடைகளைத் திறக்கிறாய் என்றதும்
என் நண்பன் குடித்து இறந்த கிருமிநாசினியும்
கள்ளச்சாரயமும் உன்னை இந்த முடிவிற்குத் திருப்பி
இருக்கும் என்று நினைக்கிறேன்
இந்த 38 நாளில் கையடக்க கண்ணாடி குப்பியில்
அந்த பொன்னிற திரவத்தை ருசிக்க முடியாமல்
நாக்கு வெறும் புளிக்கரைசலையும், இஞ்சி தேநீரையும் ருசித்து
ருசித்து தவித்தேன் என்பதை நீ உணர்ந்திருக்கிறாய்
இனிமேல் எப்போது காணப்போகிறேன்
காமாலைக் காரனின் மஞ்சள் பூத்த கண்களைப் போல் போதையின்
சிகப்பு என் கண்களை அண்டாமல் என் இணையாளின் இதம்
பரவியதையும்,
நடுக்கம் இல்லாத கரங்களில் நான் என் பிள்ளையை அணைத்ததையும்
ஆல்கஹாலின் வாசம் கலக்காத மூச்சினை என் முகக் கவசம் கூட
விரும்பியது.
இனிமேல் நான் என்ன செய்யப்போகிறேன்
சாலையோரம் மேலாடைகள் நெகிழ்ந்து சாக்கடைக்குள் புழுவைப் போல்
கிடக்கப்போகிறானா போகாதே என்ற மனையாளின் விழிக் கெஞ்சல்களை
அலட்சியப்படுத்தி அவள் தாலிக்கயிற்றையும் நெற்றிப் பொட்டையும்
கேள்விக்குறியாய் மாற்றப் போகின்றேனா
பிள்ளைகளின் பாசப் பார்வை மாறி அய்யோ அப்பா என்று பயப்பார்வையைப்
பார்க்க வைக்கப்போகிறேனா
யோசிக்கிறேன் இறுதியில் நான் எதை வெல்லப்போகிறேன்
எதை இழக்கப்போகிறேன்
வென்றாலும் வறுமையென்னும் அரக்கனின் மடியில்
வீழ்ந்தால் மதுவின் மயக்கத்தில் உங்கள் அரசின்
வருவாயை ஏற்றிக்கொண்டு.