இன்று தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வேட்புமனு பரிசீலனை

சென்னை,

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது.

முதல்நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் மற்ற வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் முதல்நாளில் 573 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2-வது நாளான கடந்த 2-ந்தேதி 788 பேரும், 3-ம் நாளான கடந்த 4-ந்தேதி 2 ஆயிரத்து 69 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். 3 நாட்களில் 3 ஆயிரத்து 430 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருந்தன.

இதற்கிடையே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் நேற்று தமிழ்நாட்டில் அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் அலுவலகங்களில் மனு தாக்கல் செய்ய கூட்டம் அலைமோதியது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மனு தாக்கல் செய்தார். இவர் 8-வது முறையாக இந்த தொகுதியில் களம் காண்கிறார்.

இவ்வாறு கடைசி நாளான நேற்று இதுவரை மனு தாக்கல் செய்யாத தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர். சரியாக மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முடிவு நேரம் இல்லை. சில தொகுதிகளில் அதிக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதுண்டு. எனவே ஒரே நாளில் அனைத்து வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்துவிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.

வேட்புமனு பரிசீலனைக்காக கூடுதல் நாட்களை தேர்தல் நடத்தும் அதிகாரி எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், பொதுவாக ஒரே நாளில் வேட்புமனு பரிசீலனையை முடித்து விடுவார்கள். அதன்படி அனைத்து தொகுதிகளிலும் தள்ளுபடியான வேட்புமனுக்களின் விவரங்கள் இன்று பிற்பகலில் தெரியவரும்.

வருகிற 9-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர் நேரில் வந்தோ அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். 9-ந் தேதி மதியத்துக்குள் வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுவிடும்.

வாக்காளர் துணைப் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அச்சிடப்பட இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துணைப் பட்டியல் இணைந்த வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!