இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடக்கம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். உரை நிகழ்த்துவதற்காக தமிழ்நாடு சட்டசபைக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, மரபுப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அவரை அவைக்குள் சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் அழைத்து வருகிறார்கள். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்வார். அருகில் உள்ள இருக்கையில் சபாநாயகர் உட்காருவார்.

2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் கவர்னர் உரையை, கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்று காரணம் கூறினார். தேசிய கீதத்தை முதலில் இசைக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி வைத்த வேண்டுகோளை ஏற்காத நிலையில், இன்று கவர்னர் உரை நிகழ்த்துவாரா? அல்லது வாசிக்காமலேயே சென்றுவிடுவாரா? என்பது இன்றுதான் தெரியும்.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்னர் கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். கவர்னர் உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டால், சபாநாயகர் அதை வாசித்து முடிப்பார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது அதில் முடிவு செய்யப்படும். மறைந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு சட்டசபையில் 21-ந்தேதியன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.

வரும் 22-ந்தேதியன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். அவர்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டத் தொடரின் கடைசி நாளான 24-ந்தேதியன்று பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சி மீதும் அரசு மீதும் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கலாம்? என்பதை அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பட்டியல் போட்டு கொண்டு வரும். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட அரசு தரப்பினரும் தயாராகி வருவார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!