முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம். நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது பாடப்பட்டது. தாகூர் உறவினரான சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடினார். இன்னொரு சமாச்சாரம் தெரியுமா? தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்டதாக்கும் இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம். நெசம் என்னன்னா இதை தாகூர் எழுதுன காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது.அதையொட்டி நடந்த சமவங்களை கண்டும், கேள்விப்பட்டும் ஏற்பட்ட வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை இயற்றினார் . அதே சமயம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை ‘god save the queen’ என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள். இப்பத்திய ஜன கண மன ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டுச்சு. இதுக்கிடையிலே தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது . அப்பாலே ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது அது மட்டுமில்லாம என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமாகிப் போச்சு.
1956 – தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நாள். தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து 1971ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தோற்றுவிக்கப்பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சி மொழித் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அமர்த்தப் பட்டாங்க. அலுவலக நிருவாக நடை முறையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக நூறு விழுக்காடு தமிழில் மட்டுமே அமைய வேண்டும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அனைத்து இனங்களிலும் தமிழிலே கையொப்பம் செய்ய வேண்டும். அலுவலகத்தில் சட்ட ஆணைகள், அரசாணைகள், குறிப்பாணைகள், கடிதப் போக்குவரத்துக்கள் விதிவிலக்கிற்குட்பட்டு மைய அரசு அலுவலகங்கள், பிற மாநில அலுவலகங்கள், நீதி மன்றங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், ஆங்கிலத்திலேயே செய்தி தொடர்பு வைத்துக்கொண்டுள்ள நிறுவனங்கள ஆகியவற்றிற்கு எழுதப்படும் கடிதங்கள் தவிர அனைத்து அலுவல்களுக்கும் தமிழில் மட்டுமே கோப்புகள் அமையப்பெற வேண்டும். -அப்படீன்னு சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்ட நாள்.
இன்றைய தினம் தான் ராமானுஜர் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திர உபதேசம் செய்தார். ராமானுஜர் உபதேசம்: “திருக்கோட்டியூரில்” வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, “யார்?’ என்று கேட்க, “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் “அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது. கோவில் எங்கே இருக்கிறது? அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் – 630 211. சிவகங்கை மாவட்டம்.
இரும்புக் கனவுகளைக் கோபுரமாய் மாற்றிய உலகப் புகழ்பெற்ற பொறியாளர் கஸ்டவ் ஈபல் அவர்களின் நினைவு தினம் இன்று. முக்கியப் பங்களிப்புகள்: பாரிஸின் அடையாளமான இக்கோபுரத்தை வடிவமைத்து, பொறியியல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையின் உட்புற இரும்புச் சட்டங்களை வடிவமைத்த பெருமை இவரையே சாரும். உலகம் முழுவதும் பல இரும்புப் பாலங்களையும், ரயில்வே கட்டமைப்புகளையும் தனது நுட்பமான அறிவால் உருவாக்கியவர். வானத்தை வசப்படுத்திய அந்த மாமேதையின் சாதனைகளை இத்தினத்தில் போற்றுவோம்!
அலுமினியம் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall) நினைவு நாள் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் தாம்சன் என்ற நகரில் (1863) பிறந்தார். தந்தை மதபோதகர். வீட்டிலேயே ஆரம்பக் கல்வி கற்றார். மிகச்சிறிய வயதிலேயே அம்மாவிடம் படிக்கக் கற்றார். 6 வயதில் அப்பாவின் பட்டப்படிப்பு வேதியியல் புத்தகத்தைப் படித்து முடித்தார். வேதியியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய நூல்களைப் படித்தார். பிரபல கண்டுபிடிப்புகள் குறித்த ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ என்ற இதழைத் தொடர்ந்து படித்தார். வீட்டிலேயே சோதனைக்கூடம் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொண்டார். சிறுவயதிலேயே இசை ஆர்வமும் இருந்ததால், உயர் கல்வியில் இசையையும் ஒரு பாடமாகப் பயின்றார். 1885-ல் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒருமுறை இவரது பேராசிரியர் ஒருவர், ஒரு அலுமினியத் துண்டைக் காட்டி, ‘இதை எளிதான முறையில் தயாரிப்பவர் பெரும் செல்வந்தர் ஆவார்’ என்று கூறினார். உடனே அதுதொடர்பான சோதனையில் இறங்கினார். ஆரம்பத்தில் ஓபெர்லின் கல்லூரி ஆய்வகத்தைத் தனது சோதனைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். பின்னர், தனது வீட்டில் ஓர் அறையை ஆய்வுக்கூடமாக மாற்றினார். வேதியியலாளரான சகோதரி மற்றும் அறிவியல் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். எட்டு ஆண்டுகள் ஓய்வின்றிப் பாடுபட்டார். 1886-ல் ரசாயனக் கலவைகளை மின்பகுப்புக்கு உட்படுத்தி அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு காப்புரிமையும் பெற்றார். ஏறக்குறைய இதே சமயத்தில், பிரான்ஸ் விஞ்ஞானி பால் ஹெரால்டு இதே முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். எனவே, இந்த முறை ‘ஹால் ஹெரால்டு செய்முறை’ என்று குறிப்பிடப்பட்டது. பிட்ஸ்பர்க் சென்றவர், அங்கு சில முதலீட்டாளர்களின் உதவியுடன் பிட்ஸ்பர்க் ரிடக் ஷன் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் இது ‘அலுமினியம் கம்பெனி ஆஃப் அமெரிக்கா’ எனப் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் குறைந்த செலவில் வர்த்தக ரீதியாக அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டது. இதனால் அலுமினிய உற்பத்தி பெருகியது. விலையும் குறைந்தது. 25 ஆண்டு காலம் கடினமாக உழைத்து அலுமினியத் தொழில் துறையில் மாபெரும் வளர்ச்சி பெற்றார். இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட உலோகம் அலுமினியம்தான். இரும்புடன் சேர்ந்து உலகிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய உலோகங்களில் ஒன்றாக இது மாறியது. வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்தவாறே இருந்தார். மொத்தம் 22 கருவிகளுக்கு காப்புரிமை பெற்றார். இவற்றில் பெரும்பாலானவை அலுமினியத்தால் ஆனவை. இவர் பயின்ற கல்லூரியில் இவருக்கு அலுமினியத்தால் சிலை அமைத்தனர். ஆக , அரிதான உலோகமாகக் கருதப்பட்ட அலுமினியத்தை சுலபமாகக் கிடைக்கச் செய்து, பல்வேறு விதத்திலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய உலோகமாக மாற்றினார். இரும்புக்கு மாற்றாக தற்போதும் பரவலாக அலுமினியம் பயன்படுத்தப்படுவதற்கு இவரே மூலகாரணம். அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், மனித வரலாற்றில் உலோகங்களின் பயன்பாட்டு வரலாற்றையே மாற்றியமைத்த சார்லஸ் மார்ட்டின் ஹால் 51-வது வயதில் (1914) மறைந்தார்.
மேரி பென்னிங்டன் நினைவு தினம். மேரி எங்கல் பென்னிங்டன் (Mary Engle Pennington, அக்டோபர் 8 1872; டிசம்பர் 27 1952) அமெரிக்க வேதியியலாளர். எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கியவர். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்லும் இம்முறையைக் கண்டறிந்ததன் மூலம் குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்டவர். பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்.
