இன்றும், நாளையும் சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்

சென்னை,

வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர். இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், கால அவகாசம் டிசம்பர் 11-ந்தேதி வரை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர், டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை மேற்கொள்ளலாம்.

பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, இனி அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உறுதிமொழி படிவம் என்பது, சிறப்பு தீவிர பணிக்காக கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவம் போன்று தான் இருக்கும். அதில் கடந்த 2002 மற்றும் 2005-ம் பட்டியலில் இடம் பெற்ற தங்களது பெயர் அல்லது பெற்றோர்கள் விவரங்களை பூர்த்தி செய்துதர வேண்டும்.

அந்த தகவல்கள் சரியாக இல்லாத பட்சத்தில் அதற்கான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் இந்த படிவம் 6ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெறலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் (டிச.20,21) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!