சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு (நாய்கள் மற்றும் பூனைகள்) மைக்ரோசிப் செலுத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை பெருநகர சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியாவால் 3.10.2025 அன்று தொடங்கப்பட்டது. இந்த இணையதள சேவையானது, செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்களின் தடுப்பூசி விவரங்கள் மற்றும் மீண்டும் அடுத்த தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிகளை திறம்பட கண்காணிக்க உதவுகிறது.

செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டும் உரிமம் செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை (Pet Abandonment) தடுப்பதற்காகவும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறுவது பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோசிப் எண்ணுடன் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இதுவரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 23.11.2025 என்ற காலக்கெடுவானது, 7.12.2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையினை ஏற்றும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு 14.12.2025 வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
