சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
‘டிட்வா’ புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. ஓட்டேரி, புரசைவாக்கம், புளியந்தோப்பு, மதுரவாயல், ,பட்டாளம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வியாசர்பாடி, புளியந்தோப்பு, எம்.கே.பி.நகர், முல்லை நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ச்சியாக மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. மெரினா கடற்கரை மணல் பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குட்டைபோல காட்சியளித்தது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. செங்குன்றம், ஆவடி சுற்றுவட்டாரங்களில் 2 ஆயிரத்து 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், காயரம்பேடு, மறைமலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு பிரியா நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

இதேபோல் செங்கல்பட்டு மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர், பாலூர், ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் நின்னக்கரை வனப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் காயரம்பேடு வழியாக கூடுவாஞ்சேரி, கொட்டமேடு சாலையில் உள்ள பெருமாட்டுநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை இருபுறங்களிலும் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் ஆமை போல் ஊர்ந்து சென்றன.
3 நாட்களாக தொடரும் மழையால் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளநிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
