சென்னை,
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதற்கிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனவே செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. அதேபோல் த.வெ.க. தரப்பில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்கப்பட்டபோதும் அவரும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். இதனால் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.
ராஜினாமா
அதனை உறுதிபடுத்தும் வகையில் செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் தலைமைச்செயலகம் வந்தார். அவர், நேராக சபாநாயகர் அறைக்கு சென்றார். அங்கு தான் கையோடு கொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டு, அதனை சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.
பின்னர் வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க சூழ்ந்தனர். ஆனால் செங்கோட்டையன், ‘‘ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து, செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு அவரை தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற கேள்வியை எழ செய்தது. பின்னர் செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். காரில் இருந்து அ.தி.மு.க. கொடியையும் அகற்றினார்.
விஜய் – செங்கோட்டையன்
இதற்கிடையே த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க.வா?, த.வெ.க.வா? என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலை 4.36 மணிக்கு செங்கோட்டையன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டுக்கு திடீரென்று சென்றார். அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்துச் சென்றார். அங்கு சுமார் 2 மணி நேரம் விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இருவரும் மனம் விட்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர்.
அமைப்பு பொதுச்செயலாளர் பதவி
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வர உள்ளார். அங்கு விஜய்யை சந்தித்து அவர் முறைப்படி த.வெ.க.வில் இணைகிறார். அவரது ஆதரவாளர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் அமைப்பு பொதுச்செயலாளர் அல்லது அவைத்தலைவர் பதவி வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

ராஜினாமா செய்த 2-வது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
தற்போதைய சட்டசபையில் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்து விட்டார். தற்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கோபிச்செட்டிபாளையம் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ராஜினாமா செய்து இருக்கிறார்.
ஏற்கனவே சேந்தமங்கலம் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுசாமி, வால்பாறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஆகியோர் மரணம் அடைந்து இருக்கின்றனர். எனவே தமிழக சட்டசபையின் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில், 4 இடம் காலியாக இருக்கிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.
பலமான கூட்டணி
அ.தி.மு.க. மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் அனுபவமும் செல்வாக்கும், வரவிருக்கும் தேர்தல்களில் தமிழக வெற்றி கழகத்திற்கு பல நன்மைகளை கொண்டு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செங்கோட்டையனின் வருகையால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு மிகவும் திறம்பட கையாளப்படும். செங்கோட்டையன் போன்றவர் இருந்தால் வலிமையான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். வலுவான நிலைப்பாடுகள், கருத்துக்களை செங்கோட்டையன் வைக்க முடியும். ஒட்டுமொத்த தேர்தல் பிரசார திட்டங்கள் தெளிவாகவும், இலக்குடன் கூடியதாகவும் மாறும். செங்கோட்டையன் இணைவது, விஜய் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும், பலமான கூட்டணிக்கு அடித்தளமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் இன்று த.வெ.க.வில் இணைகிறார். காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா பிரசாரத்துக்கு பயணத் திட்டம் வகுத்து கொடுத்ததில் வல்லவர்
செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுத்து கொடுக்கும் பணியை தலைமை தாங்கி செய்து வந்தார். அவர் ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு சில நாட்களுக்கு முன்பே சென்று எந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும். ஜெயலலிதா எந்த ஓட்டலில் தங்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊருக்கு செல்வது எப்படி? போன்ற பணிகளை திட்டமிட்டு செய்து வந்தார். எனவே அவருக்கு புவியியல் ரீதியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் அத்துப்படி. த.வெ.க.வில் இணைய இருப்பதால், விஜய்யின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை மேற்கொள்வார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
