காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீஸ் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதேபோல சம்பவத்தின் போது செயல்பாட்டில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 25-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர். மேலும் மின் வாரிய அதிகாரிகள், பவர் கிரிட் நிறுவன அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கரூர் சம்பவம் குறித்து தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
