விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றமா?

பல கேள்விகள் விஜய்யை உலுக்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்ற அடிப்படையில் தன்னை அடையாளப்படுத்தினார். தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அ.தி.மு.க. மீது அவர் எந்தவொரு பெரிய விமர்சனத்தையும் வைக்கவில்லை. எனவே விஜய் அ.தி.மு.க.வுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்டது.

ஆனால் விஜய், ஆட்சியில் பங்கு முதல்-அமைச்சர் பதவி என்று பேசியதால், இது சரிப்பட்டு வராது என்று அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் இணையும் அறிவிப்பை வெளியிட்டது. இதன்பின்னர் அ.தி.மு.க.வையும், விஜய் விமர்ச்சிக்க தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியை நேரடியாகவே தாக்கி பேசினார். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா இணைந்து விட்டதால், இனி அவர்களுடன் சேர வேண்டாம் என்ற அடிப்படையில் விஜய் தங்களது தனி பாதையை உறுதிப்படுத்தினார்.

ஆனால் கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவம், விஜய்யின் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி. அதேபோல அண்ணாமலையும் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார். எனவே அந்த கட்சி நிர்வாகிகளில் சிலர், தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர விடக்கூடாது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நம்மை முழுவதுமாக அழித்து விடுவார்கள்.

எனவே அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணியில் இணைந்து தி.மு.க.வை முதலில் வீழ்த்தலாம் என்ற குரல்களை எழுப்பினர். ஆனால் விஜய் வேறு வித கணக்கு போட்டார். சிறுபான்மை ஓட்டுகளை முழுவதுமாக பெறுவதற்கும், தேசிய அரசியலில் கால்தடம் பதிப்பதற்கும் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியே கொண்டு வந்து அவர்களோடு இணையலாம் என்று நினைத்தார். இது தொடர்பாக அவர் ராகுல்காந்தியோடும் பேசியதாக கூறப்பட்டது.

ஆனால் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் சிலர் தி.மு.க.வுடன் தான் கூட்டணி தொடர வேண்டும் என்றனர். ஏனென்றால் தி.மு.க.வுடன் இணைந்தால் எம்.எல்.ஏ.வாகி விடலாம். விஜய்யுடன் சேர்ந்தால் பதவி கிடைப்பது கஷ்டம் என்று எண்ணுகின்றனர்.

அதேபோல் ராகுல்காந்தியும், விஜய் முதலில் தேர்தலை சந்தித்து வாக்குகளை பெறட்டும். அரசனை நம்பி புருஷனை கை விடலாமா என்ற எண்ணத்தில் தி.மு.க.விடம் இருந்து விலக வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதற்கிடையில் பீகார் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வியை தந்து உள்ளது. இந்த முடிவுகள் விஜயையும் சற்று கலக்கமடைய செய்து விட்டது.

காங்கிரசுடன் சேர்ந்தால், அவர்கள் கட்சியின் பூசல்கள், கோஷ்டி மோதல்கள் எல்லாம் நம் படகையும் மூழ்கடித்து விடும் என்று எண்ணுகிறார். மேலும் த.வெ.க. தனித்து போட்டியிட்டால் தி.மு.க. ஜெயித்து விடும் என்று அவர்கள் கட்சியினரின் குரல்கள் விஜய்யை சற்று யோசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமாக விஜய்யின் வேட்பாளர்கள் தேர்வு குறித்த அலசலில் பணம் செலவு செய்து தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை மிக குறைந்தளவே இருக்கிறது.

ஒருவேளை 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து போட்டியிட்டால், அதற்கான செலவை யார் செய்வது?. அப்படி போட்டியிட வைக்கும் வேட்பாளர்கள் திராவிட கட்சிகள் விலை பேசி வாங்கி, அவர்களை கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகி ராஜினாமா செய்ய வைத்தால் என்ன செய்வது? போன்ற பல கேள்விகள் விஜய்யை உலுக்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தி.மு.க. என்ற கட்சியை எதிர்க்க அ.தி.மு.க.வே, பா.ஜனதாவுடன் சேர்ந்துள்ளது. கரூர் நெரிசல் வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் உள்ளது. எனவே இந்த தேர்தலில் மிக பாதுகாப்பாக அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டால் த.வெ.க. போட்டியிடும் தொகுதிகளில் 99 சதவீதம் வெற்றி உறுதி. இது தவிர த.வெ.க.விற்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும்.

தி.மு.க.வையும் வீழ்த்தி விட முடியும். இது போன்ற கணக்குகளை எல்லாம் போட்டு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை சற்று சுமுகமாக முடிந்து இருப்பதால் அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் அடுத்தக்கட்டத்தில் நேரடியாக பேச்சுவார்த்தையில் இறங்குவார் என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!