இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayings of the Philosophers” வில்லியம் காக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்பட்ட நாள் நவம்பர் 18 . முதன் முதலாக அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். அவர் இளைஞராயிருந்தபோது துவக்க காலத்திலிருந்த அச்சுக்கலையின் மீது காக்ஸ்டனுக்கு ஆர்வம் ஏற்பட்டது.அச்சு இயந்திர அமைப்பைத் தமது முயற்சியால் சீர்திருத்த நவீன யுக்திகளைக் கையாண்டு முன்னேறிய அச்சு இயந்திரத்தைக் உருவாக்கினார்.. 1476-ம் ஆண்டு காக்ஸ்டன் வெஸ்ட் மினிஸ்டர் என்ற இடத்தில் நவீன சாதனங்களுடன் நவீன அச்சு இயந்திரம் ஒன்றை அமைத்தார். பல நூல்களை எழுதி அவற்றைத் தமது அச்சகத்தில் அச்சிட்டார். அவ்வாறு அவர் வெளியிட்ட முதல் நூல் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட “Dictes and Sayings of the Philosophers” என்ற நூலாகும். காக்ஸ்டன் நவீன அச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்.
மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, ஜுலை 11,1710–நவம்பர் 18,1759) நினைவு தினம். கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. இறந்த தினமின்று: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு. 1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை.. சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார். அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை. சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது. தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. “இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் “-என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்.. அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார்.
மோகமுள்’, `அம்மா வந்தாள்’, `மரப்பசு’, `உயிர்த்தேன்’, `நளபாகம்’ போன்ற நாவல்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற தி.ஜானகிராமன் காலமான நாள். ஒரு நாவலாசிரியராகவே அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும் அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது அவரது `சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்புக்குத்தான். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். நடுத்தரவர்க்க மனிதர்களின் ஆசைகள் நிராசைகள்,விருப்புகள், வெறுப்புகள்,பொறாமைகள், இயலாமைகள்,பாலியல் தவிப்புகள் ஆகியவற்றை துல்லியமாக தன் படைப்புகளில் கொண்டு வந்து அசத்திய மாபெரும் படைப்பாளி தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டு நீதிமான்களில் ஒருவரான வி.பாஷ்யம் அய்யங்கார் காலமான தினமின்று! ‘ ஐகோர்ட் காம்பவுண்டுக்குள் அவருக்கு சிலை வைப்பதா? அதை தரிசனம் செய்து விட்டுத்தான் நாங்கள் கோர்ட்டுக்குள் வரவேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது’ என்று ஒரேயடியாக நீதிபதிகள் அடம் பிடித்தார்கள். வழக்கறிஞர்கள் சிலர் விடவே இல்லை. தொடர்ந்து போராடி, அவர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து ஒருவழியாக சிலை வைத்தார்கள். புகழ் பெற்ற சிற்பி எம்.எஸ்.நாகப்பா தத்ரூபமாக வடித்த அந்த சிலை ஐகோர்ட் வளாகத்திற்குள் வந்த பிறகு, நீதிபதிகள் வேறுவிதமாக வெறுப்பைக் காட்டினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வடக்குப் பக்க வாசல் வழியாக வந்தால் அந்த சிலையைப் பார்த்துக் கொண்டு வரவேண்டியிருக்கும் என்பதால், தெற்குப் புற வாசலை அதிகம் பயன்படுத்தினார்கள். சத்தமில்லாமல் இன்னொரு வேலையையும் செய்தார்கள். ஐகோர்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி கட்டடங்களை இணைக்கும் பாதையின் பக்கங்களில் நிர்வாக அலுவலகங்களையும், ஆவணக் காப்பகத்தையும் செயல்பட செய்துவிட்டார்கள். அப்படி என்றால் அந்தப் பகுதிக்கு அதிகம் செல்ல வேண்டி இருக்காதல்லவா? எவ்வளவு வன்மம் பார்த்தீர்களா? சிலை வைப்பதற்கே இவ்வளவு எதிர்ப்பென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அப்படிப்பட்ட ஆங்கிலேயரின் இனவெறி எதிர்ப்புகளை முறியடித்து, சட்டத் தொழிலில் வென்றவரான வி.பாஷ்யம் அய்யங்கார், இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கால் மேல் கால் போட்டபடி கம்பீர சிலையாக உட்கார்ந்திருக்கிறார். அப்படி அதிரடி நீதிமானாக நீதிபதியசக இருந்து அப் பதவியிலிருந்து விலகிய பிறகு வழக்கறிஞராக மீண்டும் தொழில் செய்ய ஆரம்பித்தார். 1908 நவம்பரில் முக்கிய வழக்கு ஒன்று, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்.அர்னால்டு ஒயிட், நீதிபதி அப்துர் ரகீம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் காலையிலிருந்து வாதங்களை முன்வைத்த அய்யங்கார் திடீரென மயங்கி விழுந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இதே நவம்பர் 18 அன்று மரணமடைந்தார்.
வணிக அடிப்படையிலான முதல் அழுத்தும் பட்டன் தொலைபேசிச் சேவையை, பெல் சிஸ்ட்டம் என்ற தொலைபேசி நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிமுகப்படுத்திய நாள் நவம்பர் 18. பெல் சிஸ்ட்டம் என்பது, பின்னாளில் ஏடி அண்ட் டி ஆக மாறிய பெல் டெலிஃபோன் கம்ப்பெனியின் முயற்சியிலும், தலைமையிலும், தொடக்கத்தில் தொலைபேசி வசதியை வழங்கிவந்த (தனியார்) நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மாறுபட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கிடையே தொலைபேசி அழைப்புகளை இணைத்தல், பொதுவான தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும். தொலைபேசி இணைப்பகத்திலுள்ள ஊழியரிடம், நாம் பேச வேண்டியவரைச் சொல்லி இணைக்கப்படுவதே தொடக்ககால தொலைபேசியாக இருந்தது. தொலைபேசி எண்கள் வந்துவிட்டாலும், அதனை எந்திரத்திற்கு நேரடியாகத் தெரிவிப்பதற்கு அக்காலத்தில் தொழில்நுட்பம் இல்லை. தந்தி போன்ற கருவியின்மூலம், எண்களை உள்ளிடக்கூடிய தானியங்கி தொலைபேசி இணைப்பகம், ஆல்மன் ஸ்ட்ரோஜர் என்ற அமெரிக்கரால் 1892இல் உருவாக்கப்பட்டது. முதல் ரோட்டரி டயலை இவரே உருவாக்கினார். நேர்மின் சுற்றால் இணைக்கப்பட்டிருக்கிற தொலைபேசி இணைப்பகத்தில், துடிப்புகளின்மூலம் எண்களை உள்ளிடும் இந்த முறையில், எண்ணைச் சுழற்றும்போதே துடிப்புகள் செல்லும். இதில் தவறுகள் அதிகம் நிகழ்ந்ததால், சுழலை ஸ்ப்ரிங்மூலம் திரும்பச் சுழலச்செய்து, அவ்வாறு திரும்பச் சுழலும்போது துடிப்புகள் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட சுழல் டயலே மிகநீண்ட காலம் பயன்பாட்டிலிருந்தது. இடையில், ரிசீவரை மாட்டும் கொக்கியையே ஸ்விட்ச்சாகப் பயன்படுத்தி, எந்த எண்ணோ அத்தனை முறை, வேகமாக கொக்கியைத் தட்டுவது உருவாகி, துல்லியமின்மையால் கைவிடப்பட்டது. ஆனால், இங்கிலாந்தில், நாணயம் போட்டுப் பயன்படுத்தும் தொலைபேசிகளை இம்முறையில் நாணயமின்றி(கட்டணமின்றி!) மக்கள் பயன்படுத்தியதால், இது குற்றமாக அறிவிக்கப்பட்டது தனிக்கதை! துடிப்புகளின்மூலம் இணைப்பை ஏற்படுத்துவது தாமதமாவதாகப் பின்னாளில் உணரப்பட, ‘டோன்’ டயலிங்குக்கான முயற்சிகள் தொடங்கினாலும், ட்ரான்சிஸ்ட்டர் கண்டுபிடிக்கப்படும்வரை அது வெற்றிகரமாகவில்லை. ட்ரான்சிஸ்ட்டரின் வருகைக்குப்பின், ஏடி அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய ட்யூயல்-டோன் மல்ட்டி-ஃப்ரீக்வென்சி(டிடிஎம்எஃப்) சிக்னலிங் என்ற டோன் டயலிங் முறையை, மூன்றாண்டுகள் வாடிக்கையாளர்களிடையே அந்நிறுவனம் சோதித்தபின், இந்நாளில், பெல் சிஸ்ட்டத்தில் வணிக அடிப்படையில் நடைமுறைப்படுத்தியது. சுழல் டயலுக்கான துடிப்புகளை உருவாக்கும் புஷ் பட்டன் தொலைபேசிகளும் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்டாலும், டிடிஎம்எஃப் முறையில் டயல் செய்யும் தொலைபேசிகளே சீர்தரமாக நிலைபெற்று, இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
அதிபர் தேர்தலில் வாக்களித்த குற்றத்திற்காக, சூசன் பி அந்தோணி உள்ளிட்ட 15 அமெரிக்கப் பெண்கள் கைது செய்யப்பட்ட நாள் நவம்பர் 18. ஆம்! வாக்களித்த குற்றத்திற்காகத்தான்! அப்போது, அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. செனகா ஃபால்ஸ் கன்வென்ஷன் நடைபெறக் காரணமாக இருந்த எலிசபெத் ஸ்டாண்டனும் இவரும் சேர்ந்து, 1866இல் தேசிய மகளிர் வாக்குரிமை இயக்கத்தைத் தோற்றுவித்திருந்த நிலையில், 1872 தேர்தலில் அதிகாரிகளைத் தங்கள் வாதத்தை ஏற்கச் செய்து 15 பெண்கள் வாக்களித்துவிட்டனர். கைது செய்யப்பட்ட 15 பேரில், இவரை மட்டும் விசாரிக்க முடிவு செய்த அரசு, இவரை கீழ் நீதிமன்றத்தில் விசாரிக்க அஞ்சி, சர்க்யூட் கோர்ட் எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தியது. இந்த நீதிமன்றத்தில், நீதிபதிகளாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் விசாரிப்பார்கள். வழக்கை விசாரித்த வார்ட் ஹண்ட் என்ற நீதிபதி, பெண்களுக்கு நீதிமன்றத்தில் பேசவே தகுதியில்லை என்றுகூறி, சூசனை அவரது தரப்பு வாதத்தைக்கூட கூற விடாமல், வாக்களித்தது குற்றம் என்று அறிவித்து, 100 டாலர் அபராதம் விதித்தார். தான் தவறு செய்யவில்லை என்றுகூறி, ஒரு டாலர்கூட அபராதம் செலுத்த முடியாது என்று சூசன் கூறினாலும், அவரைச் சிறையிலடைக்காமல் விடுவித்தார் ஹண்ட். ஒருவேளை சிறைத் தண்டனை வழங்கியிருந்தால், மேல்முறையீட்டில் பெண்கள் வாக்குரிமை குறித்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் என்பதாலேயே விடுவிக்கப்பட்டார். உழைக்கும் பெண்களுக்கான இயக்கம், சர்வதேச பெண்கள் இயக்கங்கள் என்று ஏராளமான பெண்கள் இயக்கங்களில் செயல்பட்டு பங்களித்த சூசன், தனது 86ஆவது வயதில் இறக்கும்வரை தொடர்ந்து செயல்பட்டுவந்தார். வாக்களித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டு 48 ஆண்டுகள் கழித்துத்தான் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. இவரை கவுரவிக்கும்விதமாக 1979இல் டாலர் நாணயத்தில் இவரது படத்தை வெளியிட்டது அமெரிக்க அரசு. இந்த கவுரவத்தைப் பெற்ற முதல் பெண் இவர்தான்.
தமிழ்த் திரையுலகம் மறந்தாலும், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களால் மறக்க முடியாத பெயர் – இயக்குநர் ருத்ரையா காலமான நாளின்று. ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் யாருக்கும் இல்லாத பெருமை ருத்ரையாவுக்கு உண்டு.. அது என்னன்னா இவர் தன் வாழ் நாளில் இயக்கியதே ரெண்டே படங்கள்தான். அதில் ஒன்று உலக சினிமாக்களின் பெஸ்ட் -களில் இடம் பிடித்திருப்பதுதான் ஆம்.. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியாவின் திரையுலக வாழ்க்கையிலும் மிக முக்கியமான படம் – அவள் அப்படித்தான். சென்னை பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் பயின்றுவிட்டு, பாலச்சந்தரின் உதவியாளராகவும் இருந்த ருத்ரையா இயக்கிய முதல் படம் இது. 1978 ஆம் ஆண்டு தீபாவளி அன்று அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே கமலஹாசன் நடித்த படங்கள். இவற்றில் சிவப்பு ரோஜாக்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.சிவப்பு ரோஜாக்கள் படத்தின் வெற்றியில் அவள் அப்படித்தான் என்ற படம் வெளிவந்த சுவடே இல்லாமல் போன நேரத்தில்தான், இந்தியத் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான மிருணாள் சென் சென்னைக்கு வருகை தந்திருந்தார். தற்செயலாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்தார் மிருணாள் சென். ”ஒரு அருமையான திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே” என்ற வருத்தத்தில் சென்னை பத்திரிகையாளர்களை அழைத்து அவள் அப்படித்தான் படத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறார். அதன் பின்தான் நிருபர்கள் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா ஆகியோரின் பேட்டிகளை வெளியிட்டு படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அப்புறமென்னபடம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியது. சிஎன்என் – ஐபிஎன் டெலிவிஷன் இந்தியாவின் சிறந்த 100 திரைப்படங்களில் ஒன்றாக ‘அவள் அப்படித்தான்’ படத்தைத் தேர்வு செய்து பெருமைப்படுத்திச்சு. அவள் அப்படித்தான் படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு “கிராமத்து அத்தியாயம்” என்ற படத்தை இயக்கினார் ருத்ரையா. ஆத்து மேட்டுல என்ற பாடல் சூப்ர்ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. ஆனால் கிராமத்து அத்தியாயம் படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு ருத்ரையா என்ற பெயரை திரையுலகம் மறந்துபோனது. திரைப்படத்துறையைவிட்டு விலகிய ருத்ரையா தன் சொந்த ஊருக்கே சென்று இதே நவம்பர் 18ல் இன்று உலகத்தைவிட்டே மறைந்துவிட்டார். அப்பேர் பட்ட ருத்ரையா மறைந்தாலும் தமிழ்சினிமா உள்ளவரை அவரது பெயரும், அவள் அப்படித்தான் படமும் சினிமா நேசன்களின் நினைவில் வாழும்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் காலமான நாளின்று (2021) கோவி. மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ளார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 1992ஆம் ஆண்டு இவரது வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறவஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரிடம் 21 ஆண்டு காலம் இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.இவர் இயக்கிய தென்னங்கீற்று என்ற தமிழ்த்திரைப்படம், தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்ஷே விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 18, 1787). லூயி தாகர் (Louis-Jacques-Daguerre) நவம்பர் 18, 1787ல் பிரான்சில் வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். பிரான்சின், இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில் சிறந்து விளங்கினார். இவர் நேர்காட்சி போல தோன்றும் ஓவியங்களைக் கொண்ட டயோராமா எனப்படும் ஓவிய முறையைக் கண்டுபிடித்தார். இக்காட்சி அரங்கு 1822 ஆம் ஆண்டில் பாரிசில் திறக்கப்பட்டது. உலகக் காட்சிகளை வண்ணமும் துரிகையும் இல்லாமல் அப்படியே படம் பிடிக்கும் ஒளிப்படக் கருவியை உருவாக்க ஆவல் கொண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டார். 1824 ஆம் ஆண்டில் யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவர் ஒளிப்படம் பிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரண்டு ஆண்டுகளின் பின்னர் டாகுவேரே அவருடன் இணைந்து ஒளிப்படத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இக் கூட்டு முயற்சி நியெப்சு 1833 ஆம் ஆண்டில் இறக்கும் வரை நீடித்தது. டாகுவேரேயைப் பொறுத்தவரை இக் கூட்டு முயற்சியின் நோக்கம், ஏற்கெனெவே புகழ் பெற்றிருந்த அவரது டையோராமா தொடர்புடையது ஆகும். நியெப்சு உருவாக்கிய ஒளிப்பட முறை தனது டையோராமா தடாரிப்புக்கு உதவும் என டாகுவேரே எண்ணினார். பல ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தியபின் 1833 ஆம் ஆண்டில், டாகுவேரியோவகை எனப்பெயரிடப்பட்ட திருந்திய ஒளிப்பட முறை ஒன்றை டாகுவேரே அறிவித்தார். இதற்கான உரிமத்தை பிரான்சு அரசு வாங்கி, 1839 ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் 19 ஆம் தேதி உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தது. டாகுவேரேயுன், நியெப்சுவின் மகனும் இதற்காக பிரான்சு அரசிடமிருந்து ஆண்டு தோறும் ஒரு குறித்த தொகையைப் பெற்று வந்தார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் ஜூலை 10, 1851ல் தனது 63வது வயதில், பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இதே நவம்பர் – 18. திருமலை கிருஷ்ணமாச்சாரியார் பிறந்த நாள்.. இந்தியாவின் தலைசிறந்த யோகா குருவாகவும் ஆயுர்வேத பண்டிதராகவும் திகழ்ந்த திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1888ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி கர்நாடக மாநிலம் சித்ராதுர்கா மாவட்டத்தில் முச்சுகுண்டபுரம் என்ற இடத்தில் பிறந்தார். 16 வயதில் இவருடைய கனவில் இவரின் மூதாதையரும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைசிறந்த யோகியுமான நாதமுனியும் தோன்றி தமிழகத்தின் ஆழ்வார் திருநகருக்குச் செல்லுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அதை மேற்கொண்டு இவர் தமிழகம் வந்தார். இவர் 1916ஆம் ஆண்டு யோகேஷ்வரா ராமா மோகனிடம் கல்வி பெற கைலாய மலைக்குச் சென்றார். அங்கு ஏழரை ஆண்டுகள் யோகா பயிற்சிகளை ஆழமாகப் பயின்றார். 11 வருடங்கள் பனாரசில் தங்கியிருந்தார். மைசூர் மகாராஜாவின் உதவியுடன் யோகசாலா என்ற பிரத்யேக யோகா அமைப்பை 1933ஆம் ஆண்டு தொடங்கினார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரைகள் மூலமாகவும், செயல்முறை விளக்கம் மூலமாகவும் யோகாவை வளர்த்தார். யோகா பயிற்சி, ஆயுர்வேதம் மூலமாக நோய்களை குணப்படுத்தினார். யோக மகரன்தா, யோகாசனகளு, யோக ரஹஸ்யா, யோகாவளி ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். யோகாஞ்சலிசாரம், எஃபக்ட் ஆஃப் யோகா பிராக்டீஸ் உள்ளிட்ட பல கட்டுரைகளையும்,கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யோகா குருவாகப் போற்றப்பட்ட திருமலை கிருஷ்ணமாச்சாரியார் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மறைந்தார்.
