வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என நீதிபதி உத்தரவிட்ட நிலையில் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் எனவும், ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்திற்கே ஆபத்தானது என கூறிய நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பெரும் போராட்டம் வெடித்தது. மாணவர்கள், இளைஞர்கள் என ஜென்-ஸெட் தலைமுறையினர் நடத்திய இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள சூழலில், அவரது அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக உள்ளார். வங்கதேசத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒருபக்கம் இருக்க, நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்திருக்கிறார் என்று கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஷேக் ஹசீனா தரப்பு ஆஜராகாத நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஷேக் ஹசீனா குற்றவாளி என நீதிபதி தீப்பளித்தார்.
போராட்டக்காரர்களை ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துள்ளார். ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்திற்கே ஆபத்தானது என்று கூறிய நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடந்தாண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். ஷேக் ஹசீனா போராட்டக்காரர்களை தூண்டிவிட்டார். அவர் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. அதிகாரத்தில் தொடந்து நீடிப்பதற்காக ஷேக் ஹசீனா இப்படி செய்திருக்கிறார்.
ஷேக் ஷசீனா போராட்டக்காரர்களை கொல்ல ஹெலிகாப்டர் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவும் உத்தரவிட்டு இருக்கிறார். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. போராட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி செய்ய விடாமல் மறுக்கப்பட்டிருக்கிறது. ஷேக் ஹசீனா செய்தது மனித குலத்துக்கு எதிரானது. எனவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.
ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதால், வங்கதேசத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைநகர் டாக்கா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாராவது கொலை செய்யும் நோக்கத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த அசாதுஸ்மான் கான் கமல் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல் மாயூன் ஆகியோருக்கும் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் மனிதகுலத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் மூன்று பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற போது, போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடிப்படையாக வைத்துதான் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் போலீஸ் ஐஜி ஆகியோர் மீது மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக சர்வதேச குற்ற தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
