சர்வதேச மாணவர் தினம் சர்வதேச மாணவர் நாள் (International Students’ Day) என்பது உலகளாவிய மாணவர் எழுச்சியை நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியா வின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் சிதறடிக்கப்பட்டது.மேலும், போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதன் பின் செக்கொசிலவாக்கியா நாசிகளால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டது. இந்த தொடர் நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாள் முதன் முதலில் 1941 ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்ததை அடுத்து ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழியாக இந்த மாணவர் அமைப்பு உறுதி பெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் தேசிய வலிப்பு நோய் தினம் நவம்பர் 17 அன்றும், உலக வலிப்பு நோய் தினம் பிப்ரவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமையும் அனுசரிக்கப்படுகிறது. மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’ என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். வலிப்பு என்பது ஒரு நீடித்த மூளைக் கோளாறு. இதனால் அடிக்கடி கால் மற்றும் கைகளில் வலிப்பு ஏற்படும். மூளை செல்கள் மற்றும் மூளை நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவாகவே வலிப்பு நோய் உண்டாகிறது. இது அனைத்து வயதினருக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. வலிப்பின் அறிகுறிகள் திடீரென காலும் கையும் கட்டுப்படுத்த முடியாமல் வெட்டி இழுத்தல், நினைவு இழத்தல், கை மற்றும் காலில் குத்தும் உணர்வு, கை, கால், முகத்தில் தசை இறுக்கம் போன்றவை வலிப்பு நோயின் அறிகுறிகளாக உள்ளது. வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் பிறப்புக்கு முன்போ, பின்போ ஏற்படும் மூளைச்சிதைவு, மரபுக் கோளாறுகள், மூளைத் தொற்று, பக்கவாதம் மற்றும் மூளைக்கட்டி, தலையில் காயம் அல்லது விபத்து, குழந்தைப் பருவத்தில் நீடித்த காய்ச்சல் போன்றவை வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளது. வலிப்பைக் கையாள்வதற்கான ஆலோசனைகள் வலிப்பைக் கண்டு பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். வலிப்பு வரும்போது அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கக் கூடாது. வலிப்பு வந்தவருக்கு அருகில் இருக்கக்கூடிய கூர்மையான, ஆபத்து ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும். கழுத்தில் இறுக்கமாக இருக்கும் ஆடையைத் தளர்த்த வேண்டும். வாயில் இருக்கும் திரவம் பாதுகாப்பாக வெளியேற நோயாளியின் தலையை ஒரு பக்கமாக (வலது அல்லது இடது பக்கமாக) மெதுவாகப் புரட்ட வேண்டும். தலைக்கு அடியில் மென்மையான துணி, தலையணை போன்ற ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். நாக்கைக் கடித்துவிடக் கூடாது என்று நினைத்து வாயில் எதையும் வைக்கக்கூடாது. மருத்துவ உதவி கிடைக்கும்வரை யாராவது உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். வலிப்பு வந்தவருக்கு ஏற்பட்ட உடல் மாற்றங்களைக் கவனித்து மருத்துவரிடம் தெரிவித்தால், அவருக்கு சரியான சிகிச்சையளிக்க அது உதவியாக இருக்கும். வலிப்பு வந்தவரை ஓய்வெடுக்க அல்லது தூங்க விட வேண்டும். வலிப்பு நோய்க்கு மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். அதற்கு சிகிச்சையைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதே முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. வலிப்பு என்று கண்டறிந்தவுடன் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் நிலை மேலும் மோசமாவதைத் தடுக்கலாம். வலிப்பு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை வலிப்பு இல்லாவிட்டாலும் மருத்துவர் ஆலோசனைப்படி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியாக தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும். மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தை நிறுத்தக்கூடாது. வேறு மருந்தை உட்கொள்ளும் முன்னர், பக்க விளைவுகளைத் தவிர்க்க உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. வலிப்பு நோயைத் தூண்டும் என்பதால் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். எனவே அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பூரணி அம்மா மறைந்த நாளின்று கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் . குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி எந்தவித நம்பிக்கையும் தராமல் இருக்கிறோமே என்று வருந்தியவர் பூரணி. மிகவும் அபூர்வமான நபர். தொடர்ந்து வாழ்க்கையையும் இலக்கியத்தையும் படிக்க முயன்றவர். படித்து அதை உள்வாங்க முயன்றவர். பூரணி 17 அக்டோபர் 1913 ல் பிறந்து இதே 17 நவம்பர் 2013ல் மறைந்தவர். இவர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வந்தார். பூரணி – கவிதைகள், பூரணி நினைவலைகள், பூரணி சிறுகதைகள், செவிவழிக் கதைகள் போன்ற பல நூல்கள் வெளியாகியுள்ளன. பழனியில் பிறந்தார் சம்பூர்ணம் 17-10-1913இல். ஒரு லட்சியவாதித் தந்தையின் மகளாகப் பிறந்த இவர் தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர் கவிதைப் புத்தகத்தில்: “நான் பிறந்த ஊர் பழனி. புகுந்த ஊர் தாராபுரம். என் தந்தை பெரிய தமிழ் வித்வான். பழனி ஹைஸ்கூலில் பெரிய வகுப்புகளுக்குப் பாடம் நடத்துவார். அதே பள்ளியில் என் அண்ணாவும் சரித்திர ஆசிரியர். எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கமாக இருந்தது. ஆனால் வீட்டில் சரஸ்வதி கடாட்சம் நிறைந்திருந்தது. என் தாய் கூடத் தமிழ்ப் பாடல்களுக்குப் பதம் பிரித்து அர்த்தம் சொல்லும் திறன் படைத்தவர். இந்தக் குடும்பச் சூழலால் நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருந்தும், “கடற்கரையில் நெடுநேரம் அமர்ந்திருந்தால் உடலும் உப்பாகிப் போவதுபோல” எனக்கும் தமிழ் அறிவு கூடுதலாக இருந்தது என்று நினைக்கிறேன்….” பதின்மூன்று வயதில் விவாகமாகி பதினைந்து வயதில் முற்றும் வேறு மாதிரியான குடும்பத்துக்குப் போனார் சம்பூர்ணம். கூட்டுக் குடும்பமாய் ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்த குடும்பம் அது. அதில் தத்தளிக்கும் படகாகிப் போனார் சம்பூர்ணம். அப்போது பாட்டெழுதத் தொடங்கினார். மன உளைச்சல்களை வெளிப்படுத்தவோ, பக்திப் பாடல்களையோ அவர் எழுதவில்லை. அவர் மனத்தை ஈர்த்த பல விஷயங்கள் பற்றி எழுதினார். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டன. “பிசிர் இல்லாத மரபுக் கவிதைகள் பிறக்கத் தொடங்கின”. புத்தகம் படிக்கும் தாபத்தைக் கணவரிடம் வெளிப்படுத்தியதும் புத்தகங்கள் வீட்டுக்கு வரத் துவங்கின. “இரும்பு குண்டாய் கனத்த நெஞ்சு இறகால் ஒத்தடம் பெற்றது” என்று அந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஒன்பது குழந்தைகளுடன் வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைப் பார்த்தும் உறுதியை இழக்கவில்லை. பெண்களுக்காக வாதாடும் மனப்பாங்கு மாறவில்லை. ஜஸ்டிஸ் சம்பூர்ணம்மாள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. மாதர் சங்கங்களிலும், ஹிந்தி வகுப்பு எடுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவர் ஓர் அடுப்புச் செய்தால் கூட அது கலை நயத்தோடு செய்யப்பட்டது. தொடர்ந்து எழுதி வந்தார். நவீன எழுத்தாளர்கள் அனைவரையும் படித்தும் வந்தார். அப்படி விடாமல் எழுதியதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”….மனசுலே ஒரு உத்வேகமும் கையிலே பேப்பரும் பேனாவும் இருந்தால் பாட்டெழுதிவிடலாம். ஆனால் பிரசுரம், புத்தகம் இதெல்லாம் என்னோட எல்லைக்கு அப்பாலான விஷயம். அதனாலதான் அதைப்பத்தியெல்லாம் எதிர்பார்க்கல்லே. ஆனாலும் இன்னைக்கு வரலும் நான் அப்பப்போ எழுதிவரேன். ஏன்னா பாட்டெழுதுறது எனக்கு ஒரு பசி மாதிரி. என்னாலெ எழுதாமலிருக்க முடியாது.
முருகப் பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமான தினமின்று. பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்! கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்! இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, “ஓ” போட வைச்சது! தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். தியாகராஜர் விருது, கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்பட பல இசை விருதுகளை பித்துக்குளி முருகதாஸ் பெற்றுள்ளார் “நான்” என்ற சொல்லே அவர் வாயில் வராது! ஒன்லி “அடியேன்”! இல்லீன்னா தன்னையே கூட “அவன்”-ன்னு தான் சொல்லிப்பார்! இவர் கச்சேரிக் காசு பலவும் போகுமிடம் = அனாதைச் சிறார் விடுதிக்கு.
தமிழ் சினிமாவின் முதல் பின்ணனி பாடகர் திருச்சி லோகநாதன் நினைவு நாள் இன்று….. இவர் பாடிய திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார். இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல். திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்: கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்) ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்) அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி) என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்) உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி) புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி) வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)
இதே நவம்பர் 17, 1970: ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டக்ளஸ் ஏங்கல்பர்ட் (Douglas Engelbart.) என்பவர் கணிணியின் சுட்டியை (cursor) நினைத்த வண்ணம் நகர்த்துவதற்கும் இயக்குவதற்கும் பயன்படுகின்ற மவுஸ்ஸைக் கண்டு பிடித்து அதற்கு காப்புரிமை பெற்றார்
