இன்று இந்திய கடல்சார் மாநாடு:அமித் ஷா தொடங்கி வைக்கிறார்..!

இந்திய கடல்சார் வாரம் என்ற சர்வதேச மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் சார்பில் இந்திய கடல்சார் வாரம்- 2025 என்ற சர்வதேச அளவிலான மாநாடு, மும்பை கோரேகானில் உள்ள பம்பாய் வர்த்தக கண்காட்சி அரங்கத்தில் இன்று முதல் 31-ந் தேதிவரை 5 நாள்கள் நடக்கிறது. உலக நாடுகளின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கிவைக்கிறார்.

இந்த விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிப்பாதை மந்திரி சர்பானந்த சோனோவால், மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஞ்ஜி, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய இணை மந்திரி சாந்தனு தாக்கூர் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

நார்வே, நெதர்லாந்து டென்மார்க், சுவீடன் உள்ளிட்ட நாடுகள் இம்மாநாட்டை இணைந்து நடத்துகின்றன. இன்று முதல் நாள் நிகழ்ச்சியில் மராட்டியம், குஜராத், ஒடிசா கோவா, அந்தமான் ஆகிய மாநிலங்களின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் போக்குவரத்து துறையில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.

இதுகுறித்து இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தலைவர் மற்றும் சென்னை, காமராஜர் துறைமுகங்களின் தலைவருமான சுனில் பாலிவால் கூறுகையில், “உலக அளவிலான கடல்சார் வளர்ச்சி, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்பட 350 பேர் பங்கேற்று சிறப்புரையாற்றுவார்கள். உலக அளவில் இந்திய துறைமுகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும். முன்னணி நிறுவனங்கள் சார்பில் சுமார் 500 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பீட்டிலான 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் 29-ந் தேதி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது, அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!