இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 25)

அனைத்துலக கலைஞர்கள் நாள் அக்டோபர் 25 அன்று அனுசரிக்கப்படும் அனைத்துலக கலைஞர்கள் நாள் என்பது, கலைஞர்களையும் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய அனைத்துப் பங்களிப்புகளையும் கௌரவிப்பதற்காக உள்ளது. இந்த நாளில், 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி பிறந்த மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவரான பாப்லோ பிக்காசோவும் நினைவுகூரப்படுகிறார். கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்க கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு அழகைச் சேர்க்கிறார்கள். பெரும்பாலான கலைஞர்கள் பலவிதமான ஊடகங்களில் (mediums) பணியாற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி, கலைஞர் என்ற வார்த்தையானது ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், டிஜிட்டல் கலைஞர்கள் மற்றும் பலரையும் உள்ளடக்கியது. ஒருவர் படைப்பாற்றல் மிக்கவராகப் பிறக்கும்போது, அந்தப் படைப்பாற்றல் பல துறைகளில் பாய்கிறது. உதாரணமாக, பிக்காசோ ஒரு ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார். எழுத்து வடிவங்கள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கலை உருவானது. காலத்தின் ஆரம்பம் முதல், கலை எண்ணங்களைப் பரிமாறவும், முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்யவும் உதவியது. கலை, கடந்த காலத்துடனான ஒரு தொடர்பை வழங்குகிறது. கலைஞர்கள் நம் வரலாற்றை, தங்கள் படைப்புகள் மூலம் அழியாமல் பதிவு செய்கிறார்கள். அவர்கள் உண்மைகளையும் வெளிக்கொணர்கிறார்கள். மேலும், தங்கள் படைப்புகள் மூலம் கதைகளைச் சொல்வதோடு, பாரம்பரியங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் இணைவதற்கு கலைஞர்களுக்கு ஒரு தனித்துவமான வழி உள்ளது. மோசமான செய்திகள் நிறைந்த உலகில், நம்பிக்கை செய்திகளை வழங்குவது அவர்களின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.படைப்பாற்றல் உங்களைச் சுற்றி எங்கேயும் இருக்கிறது. அதாவது, இந்த நாளை நீங்கள் தினமும் கொண்டாடலாம் (Celebrate Every Day®). உங்கள் தொலைபேசியில் ஒரு புகைப்படம் எடுப்பது கூட ஒரு கலை வடிவம்தான். இந்தக் கலைஞர்கள் தினத்தை நீங்கள் எப்படி கொண்டாடினாலும், சமூக ஊடகங்களில் #InternationalArtistsDay என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்திடுங்கள்

தகவல் அறியும் உரிமை சட்ட தினம் அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2004 டிச., மாதம் பார்லிமென்ட்டில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது.அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது. எப்படி பெறலாம்: தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. ஆனால் மோடி அரசு இச்சட்டத்தின் மூலம் பிரதமர் மோடி கல்லூரி கல்வி விவகாரத்தை அறிந்து கொள்வதை தடுத்து விட்டதுதான் பெரும் சோகம்.

சடாகோ சசாகி நினைவு நாள்! இரண்டாம் உலக போரின் காரணமாக ஜப்பான், அமெரிக்காவின் முத்து துறைமுகத்தைத் தாக்கவே அதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி தாக்கியது. இத்தாக்குதல் பல லட்சகணக்கான மக்களை இறக்கவும், லட்சக்கணக்கானோரை பாதிக்கவும் செய்தது . ஜப்பானின் ஹிரோஷிமாவைச் சேர்ந்த இரண்டு வயது நிரம்பிய சிறுமி சடோகோ சசாகியும் இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை .பாதிப்பின் தீவிரத்தை அறியாத ஸசாகி மகிழ்ச்சியாகவே தனது பள்ளி வாழ்கையை அனுபவித்தாள். வருடங்கள் ஓடியதே தெரியாத சசாகி ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்தாள். பள்ளியின் சிறந்த தடகள வீராங்கணையில் ஒருத்தியாக விளங்கிய சசாகியின் கனவு ‘’ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியராக வேண்டும்’’என்பதாக இருந்தது . ஒரு நாள் தனது அணிக்கு அன்றைய வெற்றியை பெற்றுக் கொடுத்த பின்னர், மிக அதிகமான சோர்வையும், தலை சுற்றலையும் உணர்ந்தாள். விளையாட்டின் காரணமாக சோர்வு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணி மற்றவர்களிடம் இது குறித்து கூறவில்லை. மற்றொரு நாள் மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சசாகி குறித்து சக மாணவர்கள் ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆசிரியர், சசாகியின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ‘’லுயுகேமியா’’ எனும் ‘’அட்டம்பாம்’’ என்ற நோயால் பாதிக்கபட்டுள்ளதை கூறினார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். தனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி அறிந்த ஸசாகி மிகவும் பயந்து அழுதாள். மருத்துவமனையில் நாட்கள் கழிந்த போது, ஒரு நாள் நலம் விசாரிக்க சசாகியின் நெருங்கிய தோழியான சிசுகோ தன் கைகளில் சில காகித கொக்குகளை கொண்டுவந்தாள். காகித கொக்குகள் குறித்து கூறும் போது, பல வருடங்களாக ஜப்பானில் வாழும் கொக்குகள் புனிதத்தின் அடையாளமாக விளங்குகின்றன. நோயுற்ற ஒருவர்,1000 காகித கொக்குகளை உருவாக்கினால் அவர் உடல்நலம் பெறுவார் . ஆகவே நீ 1000 காகித கொக்குகளை உருவாக்கு என அன்புக் கட்டளை இட்டுச் சென்றாள். சசாகி காகித கொக்குகளை உருவாக்க முடிவு செய்தாள் . ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காகித கொக்குகளை உற்சாகமாக உருவாக்கிய போது ஓரளவு உடல் நலம் பெற்றாள். ஆகவே மருத்துவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தின் முடிவில் மீண்டும் நோய்வாய்பட்டாள். முன்பை விட மிக அதிகமான வலியும், வேதனையும் கூடியபோது கூட நம்பிக்கையை தளரவிடாமல் இருந்த போதும் கூட மீளா உறக்கத்துக்குச் சென்று விட்டாள் சடோகோ சசாகி. அவளால் உருவாக்கப்பட்ட காகித கொக்குகள் மொத்தம் 644. சசாகியை பெருமை படுத்த எண்ணிய வகுப்பறை தோழர்கள் 39 பேர் சேர்ந்து காகித கொக்கு சபையை உருவாக்கினர் . சசாகியின் இறப்புக்குப் பின் மூன்று வருடங்களுக்கு பிறகு 1958 மே 5-ம் தேதி ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அவளுக்கென நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவளின் நினைவுச் சின்னம் இன்றளவும், நமக்கு உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கிறது.

2012 பொதுமக்களின் வாழ்க்கை சிக்கல்களை தமது அங்கத (Satire ) நாடகங்கள் மூலம் வெளிப்படுத்திய புகழ்பெற்ற இந்தியத் தொலைக்காட்சி ஆளுமை ஜஸ்பால் சிங் பட்டி நினைவு நாள். தனது கல்லூரி நாட்களிலேயே அவர் நடத்திய தெருவோர நாடகங்களான நான்சென்ஸ் கிளப் போன்றவை புகழ் பெற்றிருந்தன. இவை பெரும்பாலும் சமூகத்தில் நிலவிய ஊழலைக் கேலி செய்து அங்கத (Satire ) நடையில் அமைந்திருந்தன. சண்டிகரிலிருந்து வெளியான த டிரிப்யூன் என்ற செய்தித்தாளுக்குப் கார்ட்டூன் ஓவியராக பணி புரிந்து வந்தார். பின்னர் தொலைக்காட்சித் தொடர்களான பிளாப் ஷோ மற்றும் உல்ட்டா புல்ட்டா மூலம் நாடெங்கும் அறியப்பட்டார்.இவை 1980களிலும் 1990களிலும் இந்திய தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்சனில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரது கடைசி திரைப்படமாக அமைந்த மின்வெட்டைக் கேலி செய்யும் பவர்கட் என்ற திரைப்பட விளம்பரத்திற்காக பயணிக்கையில் சாலை விபத்தில் அக்டோபர் 25, 2012 அன்று உயிரிழந்தார்.

இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிஷ் அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட நாள் தமது வாழ்நாளில் இருபது ஆண்டுக் காலத்தில் நேதாஜி 11 முறை கைது செய்யப்பட்டார். அதில் முதலாவது 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அவரது ஆதரவாளர்களோடு கைது செய்யப்பட்டார். அப்போது நேதாஜி ஒரு காங்கிரஸ்காரர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை ஆக்ரோஷமாகவெளிப்படுத்திய நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது. கைது செய்யப்பட நேதாஜியும் அவரது ஆதரவாளர்களும் பர்மாவின் மண்டலாய் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த மண்டலாய் சிறையானது அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையைப் போன்றது. வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை அந்தமான் அல்லது மண்டலாய் சிறைகளுக்கு அனுப்புவது ஆங்கிலேய அரசின் வழக்கமாய் இருந்தது. மண்டலாய் சிறையில் தனது முதலாம் சிறைவாசத்தில் போஸ் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதன் காரணமாக மூன்று மாத காலத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்….!

நவீன மனநல மருத்துவத்தின் தந்தைஎன போற்றப்படும் பிலிப் பீனல் (Philippe Pinel) காலமான நாள் பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் (1745) பிறந்தார். தந்தை போலவே இவரும் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். மான்ட்பெல்லியர் மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகள் மருத்துவ மேற்படிப்பு படித்தார். 1778-ல் பாரீஸ் வந்தார். சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை. இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத பீனல் சுமார் 15 ஆண்டுகாலம் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பல்வேறு வேலைகளைப் பார்த்தார். கணிதம் பயின்றார். மருத்துவக் கட்டுரைகளை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்தார். ஒரு சூழலில் மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் நோய் முற்றி தற்கொலை செய்துகொண்டது இவரை வெகுவாக பாதித்தது. மன நோய் குறித்த ஆய்வில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. மனநோய் விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைபாடுதான் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று கருதினார். பாரீஸில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது மனநோயின் இயல்புகள், சிகிச்சை குறித்த தனது கருத்துகளை முறைப்படுத்தத் தொடங்கினார். பழம்பெரும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸை முன்மாதிரியாகக் கொண்டார். பிரெஞ்சு புரட்சி முடிவுக்கு வந்த பிறகு, இவரது நண்பர்கள் அதிகாரத்துக்கு வந்தனர். பீஸெட் மருத்துவமனையில் மருத்துவராக 1793-ல் நியமிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை 2 ஆண்டுகள் தொடர்ந்து தினமும் பலமுறை சந்தித்தார். அவர்களைப் பற்றிய குறிப்புகளை தொகுத்தார். ‘மெமோர் ஆன் மேட்னஸ்’ என்ற கட்டுரையை 1794-ல் வெளியிட்டார். தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப் புத்தகமாக உள்ளது. ஹாஸ்பிக் டி லா சல்பேட்ரயர் என்ற மருத்துவமனையில் தலைமை மருத்துவராக 1795-ல் நியமிக்கப்பட்டார். இறுதி வரை அங்கு பணிபுரிந்தார். பின்னர் மனநோய் குறித்த ஒரு அதிகாரப்பூர்வமான வகைப்பாடு புத்தகத்தை 1798-ல் வெளியிட்டார். மனநோய் என்பது தொடர்ச்சியான நோய் அல்ல. மனநோயாளிகளை குணப்படுத்த மனிதநேயம்தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். கட்டப்பட்டிருந்த சங்கிலிகளில் இருந்து மன நோயாளிகளை விடுவித்தார். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு, சிகிச்சையில் மனிதாபிமான, மனோதத்துவ அணுகுமுறையை மேம்படுத்தினார். எல்லா மன நோய்களும் ஒன்றல்ல. மனச்சோர்வு, பித்து, புத்தி மாறாட்டம், பாமரத்தனம் என்று அதில் 4 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக கையாளப்பட வேண்டியவை என்று விளக்கினார். 1801-ல் எழுதிய ட்ரீட்டஸ் ஆன் இன்சானிட்டி என்ற நூலில் தனது உளவியல் ரீதியான அணுகுமுறை பற்றி விவரித்துள்ளார். 19-ம் நூற்றாண்டின் பிரெஞ்ச், ஆங்கிலோ, அமெரிக்க மனநல நிபுணர்களிடம் இந்த நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘நவீன மனநல மருத்துவத்தின் தந்தை’ என போற்றப்படும் பிலிப் பீனல் 81 வயதில் இதே நாளில் (1826) மறைந்தார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிங்கார சென்னையின் மேயரான நாளின்று சென்னை மேயர் 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதோடு சென்னை மாநகராட்சி தேர்தலிலும் வெற்றிபெற்று மக்களால் தேர்வு செய்யபட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டாலின். இவர் மேயராக இருந்தக் காலத்தில் தான் சென்னையில் எண்ணற்ற மேம்பாலங்கள் கட்டப்பட்டன. 10 மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த்து. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்ததாக அறிவிக்கப்பட்டதாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!