உலக போலியோ தினம் இன்று! அக்டோபர் 24ஆம் தேதி உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது, இந்த நோய்க்கு தமிழில் இளம்பிள்ளைவாதம் என்றுபெயர். போலியோ இல்லாத உலகத்தை நோக்கிய உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டும் நாளாக இந்த நாள் இருக்கிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் போலியோ வைரஸை ஒழிப்பதற்கான போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர்களின் பங்களிப்புகளையும் இந்த நாள் மதிக்கிறது. பொதுவாக போலியோ என அழைக்கப்படும் போலியோமைலிடிஸைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெரியம்மை நோய்க்குப் பிறகு முற்றிலுமாக ஒழிக்கப்படும் இரண்டாவது மனித நோயாக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, போலியோ நோயாளிகள் எண்ணிக்கை 1988 முதல் தற்போது 99% க்கும் கீழாக குறைந்துள்ளது. அப்போது இருந்த 3,50,000 போலியோ வழக்குகளில் இருந்து 2017 ஆம் ஆண்டில் 22 வழக்குகளாக அவை குறைந்துள்ளன, இதற்கு காரணம் உலகளாவிய முயற்சியாகும். 2020 ஆம் ஆண்டில் உலகில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே போலியோ பரவுவதாக அறிக்கை செய்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாடுகளிலும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வந்தது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் 2014 பிப்ரவரி 11ம் தேதியே இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்தது.
உலக வளர்ச்சி தகவல் தினமின்று முன்பெல்லாம் ஒரு தகவலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகத்தான் இருந்தது .ஆனால் இன்றோ உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சில விநாடிகளில் தகவலை யாருக்கு வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சியையும் ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் தெரிந்து கொள்வதற்கும் இந்த தொழில்நுட்ப மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதை போல் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களும் இன்று அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் பக்கத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தி வந்த நாம் இன்று ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் விளையும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை எந்த நாடுகளுக்கு தேவைப்படுமோ அந்த நாடுகளின் இறக்குமதி செய்வதின் மூலம் மற்ற நாடுகளின் பொருட்களையும் பயன்படுத்தும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் பொது சபையில் அக்டோபர் 24ஆம் தேதி உலக வளர்ச்சி தகவல் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் உள்ள வளர்ச்சிக்கான தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் உருவாக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பெரும்பாலும் இளைஞர்கள் ,வளர்ச்சி பிரச்சனையை தீர்ப்பதற்காக புத்திசாலித்தனமாக யோசித்தல் மற்றும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உருவாக்குதல் போன்றவற்றின் நோக்கம் தான். (ஆந்தை ரிப்போர்டர்) Iந்த தினம் கூடுதலாக, 1970ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச வளர்ச்சித் திட்டத்திற்கான இரண்டாவது நாடுகளின் வளர்ச்சிக்கான தசாப்த ஆண்டை ஏற்றுக்கொண்ட தினத்திற்காகவும் நினைவு கூரப்படுகிறது.இணைய தளங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள், வானொலி, மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிக்கைவியலாளர்கள் மீது கவனம் செலுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது. இப்போது ஸ்மார்ட்போன்களின் காலம். இணையத்தின் வருகைக்குப் பின் ஸ்மார்போன்களின் சிம்மாசனம் சரியவேயில்லை. ஸ்மார்ட் போன்கள் தின்று ஏப்பம் விட்ட தொழில் நுட்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்லெண்ட் லெட்டர்களை மின்னஞ்சல்கள் விழுங்கின. பேஜர்களை எஸ்.எம்.எஸ்கள் தின்று தீர்த்தன. தந்திச் சேவையை குறுஞ்செய்திகள் இல்லாமல் செய்து விட்டன. கேசட்கள், சிடிக்கள் போன்றவற்றை டிஜிடல் வடிவ எம்பி3 கள் இல்லாமல் செய்து விட்டன. டிவிடிக்களை டிஜிடல் வீடியோக்கள் முழுங்கி விட்டன. வகை வகையாய் வந்து கொண்டிருந்த கேமராக்களை செல்போன்களின் கேமராக்கள் நாடுகடத்தி விட்டன.இணையமும் , சமூக வலைத்தளங்களும், ஸ்மார்ட் போன்களும் தகவல் வளர்ச்சியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரத்தில் கொண்டு போய் வைத்திருக்கின்றன. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே லைவ் ஆக காண்பிக்க ஃபேஸ்புக் லைவ் உட்பட பல்வேறு செயலிகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் நடக்கின்ற காதுகுத்து, கல்யாணங்களை ஊரின் கிராமத்து சொந்தங்களும் இப்போது திண்ணையில் அமர்ந்து கொண்டே ரசிக்க முடிகிறது. வீடியோ சேட்கள் தகவல் பரிமாற்றத்தை உணர்வு ரீதியாக மாற்றியிருக்கிறது. ‘எண்ணை தேய்ச்சு குளிடா’ என தூரதேசத்தில் இருக்கும் மகனுக்கு அம்மா தன் வெற்றிலை வாயோடு செய்தியைச் சொல்ல முடிகிறது. வீட்டில் இருக்கும் குழந்தையோடு அலுவலகத்தில் இருக்கும் அம்மா ‘சாப்டியா ?’ என நலம் விசாரிக்க முடிகிறது. நள்ளிரவு தாண்டிய பொழுதுகளிலும் நட்புகளும், காதல்களும் கவித்துவம் பேசித் திரிய முடிகிறது.அலெக்ஸா, இன்னிக்கு மழை பெய்யுமா ? சிரி, நுங்கம்பாக்கம் டிராபிக் எப்படி ? கூகிள், நல்லதா ஒரு பாட்டி போடு என இப்போது நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல கருவிகள் காது திறந்துக் காத்திருக்கின்றன. ஆக இப்போது உலகம் முழுவதும் இன்றைக்கு தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. அவையே நிறுவனங்களுக்கு லாபத்தை கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கின்றன. பிக்டேட்டா, இண்டர் நெட் ஆஃப் திங்க்ஸ், மெஷின் லேர்ணிங், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜெண்ட் என எல்லாமே இன்றைக்கு தகவல்களின் மேல் கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களே.உலக தகவல் வளர்ச்சி தினத்தில் நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம், இன்றைக்கு எதுவும் ரகசியமாய் இல்லை என்பது தான். பொதுவெளியில் பேசுகின்ற, பகிர்கின்ற, எழுதுகின்ற எல்லா செய்திகளும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தின் காது வழியாக இன்னொரு தொழில்நுட்பத்தின் மனசுக்குள் போய் அமர்ந்து கொள்கிறது. அதை அழிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் தினம் 24 அக்டோபர் 1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக “உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட” தீர்மானித்தது. 1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கொசுறு சேதி : ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும்.இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. ஐ.நா.சபை சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம் போன்ற சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம்தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்‘தான் ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதிமன்றம் தவிர மற்ற 5 அமைப்புகளும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகிறது.
மு.கதிரேச செட்டியார் காலமான நாளின்று பண்டிதமணி , மு. கதிரேசச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். ஏழு மாதம் கூடப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவருக்கு உரியது. பண்டிதமணி மூன்று வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பெற்றார். குடும்பச் சூழல் முறையான கல்வியைப் பெற அவருக்குத் துணை நிற்கவில்லை. பதினான்கு வயதில் பண்டிதமணியின் தந்தை காலமானார். அதே ஆண்டில் அவரது இடது காலும்,இடது கையும் வலுக்குறைந்தன. ஊன்றுகோல் இல்லாமல் நடக்க இயலாது. இவ்வளவு துன்பங்கள் வாழ்வில் அணிவகுத்து வந்தும், அவற்றால் சிறிதும் நிலைகுலைந்து, நெஞ்சம் துவண்டு விடவில்லை அவர். உள்ள உறுதியால் தமது உடற் குறையை வென்றார். தம் முயற்சியால் தமிழும்,வடமொழியும் கற்றார். நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால், வீட்டில் இருந்துகொண்டே படித்தார். முயற்சியும் மன உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய முடியும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும். இவர் தமது நுண்ணறிவால் வடமொழி நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். உதயணன் சரிதம், சுலோசனை, மண்ணியல் சிறுதேர், சுக்கிரநீதி, கெளடலீயம் பொருணூல், மாலதி மாதவம், பிரதாப ருத்திரம் , இரசங்காதாரம் முதலியவை இவரின் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களாகும். உரைநடைக்கோவை 1 (சமயம் சார்ந்த கட்டுரைகள்), உரைநடைக்கோவை2 (இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்), நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, பண்டிதமணி பாடல்கள்,பண்டிதமணி கடிதங்கள்,பதிற்றுப் பத்தந்தாதி ஆகியவை பண்டிமணி அவர்களின் அரிய நூல்கள். “கதிர்மணி விளக்கம்” என்ற தலைப்பில் பண்டிதமணி திருவாசகத்துக்கு எழுதிய பேருரையைப் பாராட்டாத தமிழறிஞர்களே இல்லை.
மருது சகோதரர்கள் தூக்குத் தண்டனை ஏற்ற நாள்! வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28ல் ஆங்கிலேயர், மருது அரசின் மீது போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்தது. ஒரு சூழலில் சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப் படை கைப்பற்றியது, மருது சகோதர்கள் அருகில் இருந்த காட்டில் மறைந்து இருந்தவாறு போரிட்டனர். காளையார் கோவில் கோபுரங்களுக்கு எதிரில் பீரங்கிகளை நிறுத்திய ஆங்கிலேயப் படை, மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் கோபுரங்களை தகர்க்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். தாங்கள் கட்டிய கோவில் தகர்க்கப்படுவதை விரும்பாத மருது சகோதரர்கள் ஆங்கிலேயர் படையிடம் சரணடைந்தனர். 1801 இதே அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், மொத்தம் 500கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர். இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மோசமான படுகொலை என வர்ணிக்கப்படும் 1919ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெறுவதற்கு 120 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமான நாளின்று ஒவ்வொரு கலையின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிக்கொண்டே இருப்பாய்ங்க. குறிப்பிட்டு சொல்வதானா புதுமைப்பித்தன், மௌனி, ஜெயகாந்தன் போன்றோர் அவிய்ங்கய்ங்க காலகட்டத்தில் இலக்கியத்தில் ஆளுமை செலுத்தினாய்ங்க என்றால், பம்மல் சம்பந்த முதலியார், சி.கன்னையா, தி.க.சண்முகம் உள்ளிட்டோர் நவீன நாடகத்தை மறுமலர்ச்சிக்குக் கொண்டுவந்தவிய்ங்க எனலாம். மேலும் கே.பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்றோர் சினிமாவை அடுத்த தளத்துக்குக் கொண்டுசென்றாய்ங்க. ஆனால், இவர்கள் யாரும் தான் சார்ந்த துறைகள் தவிர்த்து, பிற துறைகளில் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால், ந.முத்துசாமி அப்படி இருக்கவில்லை. சிறுகதைகள், நாடகங்கள், சினிமாவுக்கான பங்களிப்பு, பத்திரிகை ஆசிரியர் எனப் பல துறைகளிலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளார். சினிமாவுக்கும் கலைஞர்களுக்குமே சமூகத்தில் பெரிய அளவில் மதிப்பில்லாதபோது, நடிகர்களுக்கான ஓர் அமைப்பாகக் கூத்துப்பட்டறையை நிறுவியதோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் நுழைவதற்கான வாசலாகவும் அதை மாற்றிக்காட்டினார். தமிழ்த் திரையில் இன்று நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களுக்குக் காரணமானவர்களை உருவாக்கியதில் இவருக்கும் இவர் உருவாக்கிய இந்தக் கூத்துப்பட்டறைக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. வெற்று வசனங்கள் மூலமே கதாபாத்திரங்களின் பிம்பத்தைக் கட்டமைக்க முடியும் என்ற பழைய நாடக முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையில் இவரது நாடகங்கள் அமைஞ்ச்சுது. தமிழ்நாட்டின் பாரம்பர்ய நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை இவர் உருவாக்கினார். அதே நேரத்தில் நாடகத்தில் பயன்படுத்தும் லைவ் மியூசிக் பாணியை அறிமுகம் செஞ்சு இசையிலும் மிக முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தினார். இவையே கூத்துப்பட்டறையின் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துச்சு கிராமப்புறத்திலிருந்து நகர்ப்பகுதிக்குக் குடிபெயர்ந்தவர் என்பதாலேயே இவரது படைப்புகள் நகர்ப்புற வாழ்க்கையில் காணப்படும் ஊழல்களையும் கிராம வாழ்க்கையை நகர வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியைப் பிரதிபலிக்கவும் அவரைக் கட்டாயப்படுத்தின. அவரது சிறுகதைகளின் கருப்பொருள்களும் இவற்றை மையமிட்டவையாக இருந்துச்சு. அவரது நாடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் சமூக மற்றும் அரசியல் உருமாற்றத்தை வெளிக்கொண்டுவந்தவையாகவே இருந்தன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நகரங்களிலும் அவரது நாடகங்கள் முக்கியத்துவம் பெற்றன. `தொடர்ந்து பல்வேறு வகையில் தன் படைப்புகள் சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தவர் இதே 24.10.2018இல் மூச்சுத்திணறல் காரணமாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
இலட்சிய நடிகர் என்று பேரெடுத்த ஒரே நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமான நாளின்று எஸ்.எஸ்.ஆர். என்று ரசிகர்களால் அன்போடு அழைக் கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன், 1928 ம் ஆண்டு பிறந்தவர். தனது 15 வது வயசில் நாடகங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். ‘பைத்தியக்காரன்’ படத்தில் தக்கணூண்டு கேரக்டரின் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுகமானச்சே அவருக்கு வயசு 20. அதன்பின் 1952ம் வருசம் ரிலீசான ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ்த் திரையில் இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்துச்சு. சி.என் அண்ணாதுரையின் ‘எதையும் தாங்கும் தெய்வம்’, கருணாநிதியின் அவன் பித்தனா, பூம்புகார் உள்ளிட்ட படங்களில் நடிச்சவர். முரசொலிமாறன் வசனத்தில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தில் எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டுச்சு. மதுரை சேடப்பட்டியில் பிறந்தவர். கிட்டத்தட்ட80க்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் நடிச்சிருக்கார். தன்னோட படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடிச்சது மட்டுமின்ரி புராண் படங்களில் நடிக்க மாட்டேன்னு அவாய்ட் செஞ்சதா அவரை ‘லட்சிய நடிகர்’ அப்படீபாய்பாங்க. சிவாஜிகணேசனைப்போல வசன உச்சரிப்பில் தனி முத்திரை பதித்த நடிகராக திகழ்ந்தவர். கொஞ்சம் டீடெய்லா சொல்றதானா தக டகன்னு செக்கச்செவேலென கலர், ப்யூட்டிபு ஃபேஸ், அட்ராக்டிவான ஹேர்ஸ்டைல், அற்புதமான குரல் வளம்- இப்படி பல பிரகாச அம்சங்கள் இருந்தும், ஜொலிக்க முடியாமல் நிழலாகவே போவது ஒரு விதமான கொடுமை. அதற்கு ஆளானவர்தான் இந்த சேடப்பட்டி நாராயண தேவர் ராஜேந்திரன், அதாவது, எஸ்எஸ்ஆர். கலைவாணர் துணைவியார் டி.ஏ.மதுரத்துடன் எம்ஜிஆர் ஜோடியாக நடித்த ஒரே படம் பைத்தியக்காரன். நாடு சுதந்திரம் பெற்ற இரண்டாவது மாதத்தில் வந்த படம். அதில்தான் சின்ன வேடம் எஸ்.எஸ்.ஆர்க்கு. அப்பாலே 1948ல் அபிமன்யு படம். உயிர் நண்பரான எம்ஜிஆரின் சிபாரிசு பேரில் அபிமன்யுவாக நடிக்க வாய்ப்பும், ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கிடைச்சுது. ஆனால் எஸ்எஸ்ஆர் நடிச்சிக்கிட்டிருந்த நாடகசபை, சினிமாவில் நடிக்க காண்ட்ராக்ட்டிலிருந்து விடுக்க முடியாது-னு வழக்குபோட்டதால், ஜூபிடர் நிறுவனத்தின் பட வாய்ப்பு பறிபோயிடுச்சு. அதே வருஷம், சேலம் மூர்த்தி பிலிம்ஸ் தயாரித்த ஸ்ரீஆண்டாள் படத்தில் வில்லன் ரோல். ஆனால் படத்தை மேற்பார்வையிட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம், அய்யே தம்மாதுண்டு பையனா இருக்கான் என அதிருப்தியை தெரிவிக்க, உடனே படத்திலிருந்து எஸ்எஸ்ஆர் வெளியே வாரி போடப்பட்டார். சரி.. நல்ல குரல் வளம் பெற்றிருந்ததால் பின்னணி பாடகராகி முன்னுக்கு வரலாம் என்று பார்த்தால், ஒரே பாடலோடு அதுவும் ஓடிப்போயிச்சு. நொந்துபோன நிலையில் 1951 இல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புரொட்யூஸ் பண்ணி டைரக்ட் செஞ்ச ‘மணமகள்’ படத்தில் கிடைச்சுது, ஒரு பிச்சைக்காரன் வேடம். கருணாநிதியின் அனல்பறக்கும் வசனத்தில் புகுந்து விளையாடினார் எஸ்எஸ்ஆர். விதி இங்கே சென்சார்போர்டு வடிவத்தில் வந்துபுடுச்சு.அப்பல்லாம் திராவிட ஆட்களுக்கும் சென்சாருக்கும் ஏழாம் பொருத்தம். எஸ்எஸ்ஆரின் பிச்சைக்காரன் வசனங்கள் அபாயகரமாகவும், புரட்சிகரமாகவும் கீது அப்படீன்னு, அவர் நடிச்ச போர்ஷன்களையே ஸ்வாகா செஞ்சுபுடுச்சு சென்சார் போர்டு. கடைசியில் முன்னரே சொன்ன ‘பராசக்தி’ படம்தான் எஸ்எஸ்ஆர்க்கு திருப்புமுனை படமாக அமைஞ்சுது. மூன்று சகோரதரர்களில் ஒருவர் என முக்கிய வேடம்.ஆனா அந்டஹ் ‘பராசக்தி’ வெற்றியை தொடர்ந்தும் எஸ்எஸ்ஆர்க்கு சோதனைதான். பணம், மனோகரா, ரத்தக்கண்ணீர் என்ற மற்ற கதாநாயகன்களின் படங்களிலேயே அவர் செகண்ட் ஹீரோகவாக பயணிக்க நேர்ந்துச்சு. (கட்டிங் கண்ணையா) ஒரு வழியாய் ஏவிஎம் புண்ணியத்தில், முரசொலிமாறன் வசனம் எழுதிய ‘குலதெய்வம்’ படத்தில் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடிச்சார். படம் பெரிய அளவில் வெற்றி. அடுத்து முக்தா சீனுவாசன் இயக்கிய, முதலாளி (1957) படம். “ஏரிக்கரையின் மேலபோறவளே பெண் மயிலே” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க படம் மெகா ஹிட். ஆனால் தெளிவில்லாத, சுவாரஸ்யமில்லாத கதைகளில் தொடர்ந்து நடிச்ச எஸ்எஸ்ஆரின் அடுத்தடுத்த படங்கள் காணாமல் போயிடுச்சு. தொடர்ந்து களத்தில் இருப்பதற்காக ராஜாதேசிங்கு, ஆலயமணி, காஞ்சித்தலைவன் என எம்ஜிஆர் சிவாஜி படங்களில் இரண்டாம் ஹீரோவாக பாதுகாப்புடன் செல்லவேண்டிய கட்டாயம். இருந்தபோதிலும் சிவகங்கை சீமை, சாரதா, குமுதம், வானம்பாடி, நானும் ஒரு பெண் போன்ற படங்கள் எஸ்எஸ்ஆரை தவிர்க்கமுடியாத கதாநாயகனாகவே வைச்சிருந்துச்சு ஆனாலும் கே.பாலச்சந்தர் – சிவாஜி கூட்டணியில் படு ஃபிளாப்பான எதிரொலி (1970) படத்தோடு ஃபீல்டை விட்டு ஒதுங்கிட்ட எஸ்எஸ்ஆர், எண்பதுகளில்தான் மீண்டும் சினிமா பக்கம் எட்டிப்பார்த்தார். இரட்டை மனிதன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதுவும் ஓடலை. அதன்பின் சில படங்களில் கௌரவவேடம் அவ்வளவே. இப்படி சினிமாவில் தத்தளிச்ச எஸ்எஸ்ஆர், ஆரம்பகால பாலிடிக்ஸ் ைஃப்ஃபில் நன்றாகவே முன்னேறினார். எம்ஜிஆர், திமுகவுக்கு வருவதற்கு முன்பாக அண்ணா வின் திரை தளபதிகளாக கோலேச்சிய மும்மூர்த்திகளில் கே.ஆர். ராமசாமி, சிவாஜி ஆகியோருடன், எஸ்எஸ்ஆரும் இருந்தார். அற்புதமான மேடைப்பேச்சால் திமுக மேடைகளை அலங்கரிக்கவும் செஞ்சார். தென்மாவட்டங்களில் திமுவுக்கு வலிமை சேர்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், கட்சி 1957ல் சந்திச்ச முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எஸ்எஸ்ஆர்க்கு சீட் வழங்கியது. துரதிஷ்டவசமாக அவர் வெற்றியை இழந்தார். இருந்தாலும் 1962 தேர்தலில் தேனி தொகுதியில் வென்று, இந்திய வரலாற்றிலேயே சட்டசபைக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சாதனையை படைச்சார். 1964 இல் சுதந்திர தினம், சென்னை எல்டாம்ஸ்ரோட்டில் தன் வீட்டில் கருப்பு ஏற்றி திராவிட இயக்க கோஷம் போட்டார். போலீஸ் பட்டாளம் முற்றுகையிட்டது. கையில் ரிவால்வருடன் மொட்டைமாடியில் ஏறியவர், ‘என் வீட்டில் நான் எது வேண்டுமானாலும் செய்வேன். அதை கேட்க நீங்கள் யார்?’ என்று ஓங்கிச்சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜ்யசபா எம்பி, அதிமுகவில் இருந்தபோது, தமிழ்நாட்டி லேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த சாதனை என பல சிறப்பான அம்சங்கள் எஸ்எஸ்ஆர்க்கு உண்டு. ஆனாலும் அரசியலுக்கே உண்டான முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற சாதூர்யமான குணங்கள் இல்லாமல் வெள்ளந்தியாக இருந்தது, எஸ்எஸ்ஆரை பின் தங்கவைத்துவிட்டது. சரியாக செயல்பட்டிருந்தால் எம்ஜிஆர் வந்து இடத்திற்கு எஸ்எஸ்ஆர்தான் வந்திருப்பாருன்னு ஆரூடம் சொல்வோர் இப்பமுண்டு. எனி வே இன்றும் நினைவில் வாழும் லட்சிய நடிகருக்கு லட்சிய பாதையில் பயணிக்கு ஆந்தை குழுமம் நினைவஞ்சலி செலுத்துகிறது.
ஆர்.கே.லக்ஷ்மன் எனும் கார்ட்டூன் மேதையின் பிறந்தநாள் இன்று (24 அக்டோபர் ). இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன். முதலில் ‘தி ஹிந்து’வில் வரைந்த இவர் பின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் அறுபதாண்டு காலமாக ‘யூ செட் இட்’ (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள், நக்கல்கள் அபாரம். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த ‘காமன்மேன்’ நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் ‘மால்குடி நாட்கள்’ தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார். எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே! இவரது வாழ்க்கையை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது . இவர் ரமன் மாக்சசெ, பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் பெற்றவர். இப்பொழுதும் அவர் உருவாக்கிய ’காமன் மேன்‘சிலையாக மும்பையில் பெருமையுடன் நிற்கிறது.
