இந்திய காவலர் தினம்!வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
தேசிய ஆப்பிள் தினமின்று (National Apple Day) தேசிய ஆப்பிள் தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று தேசிய தினக் காலண்டரில் இடம்பெறுகிறது. இது ஆப்பிள் தொடர்பான அனைத்தையும் கொண்டாடும் நாளாகும்! இந்த உணவுத் திருவிழா, இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்களின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம், அத்துடன் விவசாயம் மற்றும் பாரம்பரியத்தில் பழத்தோட்டங்கள் (orchards) மற்றும் ஆப்பிள் சார்ந்த பொருட்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். உலகளவில் 7,000க்கும் அதிகமான ஆப்பிள் வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் வகைகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், துல்லியமாக அவற்றைக் கணக்கிடுவது கடினம். ஆயிரக்கணக்கான ஆப்பிள் சாகுபடி வகைகள் (cultivars) உள்ளன; ஒவ்வொன்றும் சுவை, தோற்றம் மற்றும் அமைப்பு ஆகியவற்றில் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. புதிய நுகர்வு, பேக்கிங் அல்லது சிடர் (cider) உற்பத்தி போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஆப்பிள்கள் பயன்படுத்தப்படுவதால், புதிய வகைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து ஆப்பிள் வகைகளும் பரவலாக அறியப்படுவதில்லை அல்லது வணிக ரீதியாகக் கிடைப்பதில்லை. பல ஆப்பிள் வகைகள் குறிப்பிட்ட பிராந்திய சிறப்புப் பொருட்களாக உள்ளன, மேலும் அவற்றின் சாகுபடி குறிப்பிட்ட பகுதிகள் அல்லது பழத்தோட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கலாம்.
டாக்டர் டி. எஸ். சௌந்தரம் நினைவு நாள் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் .டி .வி.. சுந்தரம் தென்னிந்தியாவின் பிரபலமான டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் ஆவார் டி. எஸ். சௌந்தரம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஹரிஜன் இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகள் இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநியாக நியமித்தார். இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது. 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். 1962 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் துணைக் கல்வி அமைச்சரானார் கட்டாய இலவச ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்தார். டி. எஸ். சௌந்தரம், 3 ஜனவரி 1980 முதல் 21 அக்டோபர் 1984 முடிய காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார் 1962 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றார். இந்திய அரசு 2005 இல் டி. எஸ் சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
இசை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள். இவர் திருவாரூரில் பிறந்தார்.சிறுவயதிலேயே வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்), காவியம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீதும் பாடல் இயற்றியுள்ளார். இவர் முருகனையே தன் குருவாக நினைத்தார். இவரது பாடல்களில் குருகு என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நவகிரகங்கள், புண்ணிய தீர்த்தங்கள், மொழிகள், மாயை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். நவாவர்ணக் கீர்த்தனைகள், பஞ்சலிங்க ஸ்தல கிருதிகள், கமலாம்பா நவாவர்ணம், அபயாம்பா நவாவர்ணம் உள்ளிட்ட பல கீர்த்தனை தொகுப்புகளை இயற்றியுள்ளார். அரிதான, அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களிலும்கூட கீர்த்தனைகள் பாடிய முத்துசுவாமி தீட்சிதர் தனது 60வது வயதில் இதே அக்21 (1835)இல் காலமானார்.
இதே அக்டோபர் 21, 1577 –இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம் ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர் சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் . சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார். முழுவதும் சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று. இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு இடமாக அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் தங்க கோயில் விளங்குகிறது. தங்க நகரம் என்றழைக்கப்படும், தங்க நகரம் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு 28 கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது.
உலக அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தடுப்பு தினம்: (அக்டோபர் 21) உலக அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தடுப்பு தினம் (Global Iodine Deficiency Disorders Prevention Day), இது உலக அயோடின் குறைபாடு தினம் எனவும் அறியப்படுகிறது, இது ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கான அயோடினின் முக்கியத்துவம் மற்றும் அதன் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். அயோடின் கலந்த உப்பு (iodized salt), கடல் உணவுகள் (seafood), முட்டை மற்றும் பால் பொருட்கள் (eggs and dairy) போன்ற ஆதாரங்கள் மூலம் போதுமான அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அயோடின் உட்கொள்ளல் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அயோடின் ஏன் முக்கியம் உடலின் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு அயோடின் மிக அவசியம். இந்த ஹார்மோன்கள், உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவை. அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் (IDD) தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கருத்தரித்தது முதல் இரண்டு வயது வரை உள்ள வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் ஏற்படும் அயோடின் குறைபாடு, நிரந்தர மூளைச் சேதத்தை கூட விளைவிக்கலாம். உணவுப் பழக்கங்களில் மாற்றங்களை ஊக்குவிக்கவும், அயோடின் கலந்த உப்பை அனைவரும் அணுகுவதை அதிகரிக்கவும், அனைத்து மக்களுக்கும் போதுமான அயோடின் கிடைப்பதை உறுதி செய்யவும், இந்த நாளில் கல்வி மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேங்காய்_சீனிவாசன் பிறந்த தினம் இன்று… 1970-80-களில் படு பிஸியாக இருந்த நடிகரிவர். கல் மணம் என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு இதே அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் இருந்தவர் அவருடைய தந்தை எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ மேடை நாடகத்தில்தான் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். பின்னாளில் ஏகப்பட்ட நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடிச்சார், இவர் குறித்து கட்டிங் கண்ணையா ஷேர் செஞ்சிருக்கும் ஒரு சுவையான சேதி : முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா ஆகியோரின் நடிப்பில் 1972ம் ஆண்டு ரிலீஸான படம் காசேதான் கடவுளடா. ஏற்கனவே நாடக வடிவில் மெகா ஹிட் அடிச்சிருந்துது இந்த நாடகம். அதை திரைப்படமாக மாற்ற முடிவு செஞ்சிது ஏ.வி.எம். ஸ்டுடியோ.. அந்தப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான சாமியார் கதாபாத்திரத்தில் நாகேஷ் உட்பட அனைவரும் விரும்பினர். நாகேஷ் ஏ வி எம் செட்டியார்கிட்டே அன்பு கட்டளையிட்டே சென்றுவிட்டார், இந்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பேன் என்று. ஆனா அந்த வாய்ப்பு தேங்காய் சீனிவாசனிடமே சென்றது. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அனைவரையும் குலுங்கி, குலுங்கி சிரிக்க வைச்சுபுட்டார். படம் ரிலீஸாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் முக்கியமாக தேங்காய் சீனிவாசன் நடிப்பு மற்றும் அந்த சாமியார் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டுச்சு. அப்போ சென்னை ராயப்பேட்டையிலிருந்த பைலட் திரையரங்கில் ஆங்கில படங்கள் மட்டுமே ஸ்கீரின் பண்ணிக் கொண்டிருந்தன. ஆனால் காசேதான் கடவுளடா படம் பைலட் திரையரங்கில் திரையிடப்பட்டது. சென்னை தமிழில் பேசும் அந்த அப்பாசாமி ‘சாமியார்’ கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிச்சிருந்தது. அம்புட்டு பேரு அதை கொண்டாடினர். இதனால் இரவோடு இரவாக ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் பதினாறு அடி நீளத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் சாமியார் வேட கட் அவுட் வைத்தார். இதைப்பார்த்த தேங்காய் சீனிவாசன் ஆனந்த கண்ணீர் வடித்தார். உடனே இயக்குனர் கோபுவை வந்து சந்தித்து மனம் மகிழ்ந்து கண்ணீர் விட்டார். அதே சமயம் அந்த படத்தின் கதாநாயகனான முத்துராமன், இயக்குனர் கோபுவிடம், கோபமாக ஆனால் மரியாதையுடன் என்ன சார் அந்த படத்தின் கதாநாயகன் எனக்கு கட் அவுட் வைக்காமல், காமெடியனுக்கு வச்சிருக்கிங்களே, நாம் இத்தனை படங்கள் சேர்ந்து வொர்க் பண்ணியும் இப்படி பண்ணிடிங்களே எனக்கேட்டு, பின் கலங்கினார். ஆனா இயக்குனர் கோபு நடந்ததைக் கூறி முத்துராமனை சமாதானப் படுத்தினார்.
