சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி (அ.தி.மு.க.) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.
இந்நிலையில் இன்று புதன்கிழமை), 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படுகிறது. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
