தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நல்லக்கண்ணு நன்றி தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
ஆனால், நல்லக்கண்ணுவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த டாக்டர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்தனர். நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த நல்லக்கண்ணு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார். சுமார் 45 நாட்கள் செயற்கை சுவாச சிகிச்சையிலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இருந்த அவர், அதிலிருந்து மீண்டு வந்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நல்லக்கண்ணு நன்றி தெரிவித்தார்.
