அக்டோபர் – 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child) பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் ( International Day of the Girl Child, Day of the Girl , International Day of the Girl ) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது. பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை , பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள். பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன் என்பதை உணர்த்தவும் இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளி ‘உலக முட்டை தினம்‘ ஆக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (அக்.11) கொண்டாடுகிறோம். முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதனால் விளையும் உடல் நலப்பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வைட்டமின்கள் – ஏ, பி 12, பி 2, பி 5, இ , கோலின், சீயாந்தீன், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், துத்தநாகம் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன. காலையில் முட்டை சாப்பிடுவது ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவையும் பராமரிக்க உதவுகிறது. 6 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுன் வகையில் முட்டையில் கொழுப்பு உள்ளது. லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு, கண்புரை மற்றும் கண்களில் தசை சிதைவு அபாயத்தைக் குறைக்கும் பார்வை திறனை மேம்படுத்தும். முட்டையில் உள்ள கோலின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவுகிறது. நினைவக செயல்பாட்டையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது இதயம், மூளை ஆரோக்கியம் மற்றும் கண்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் படி, ஒரு ஆண்டிற்கு 180 முட்டை ஒரு நபருக்கு தேவை..ஆனால், நாடு முழுவதும் கிடைக்கும் சராசரி அளவு 79 முட்டைகள் மட்டுமே. இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவு என்று கூறுகிறது. முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அடர்த்தி, ஜீரணிக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வது முதளியவற்றை செய்கிறது. முட்டையில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்கள் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும் துணைப்புரிகிறது.
சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமான நாளின்று கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத் தொட்டவர் கத்ரி கோபால்நாத். மேற்கத்திய வாத்தியங்கள் தென்னாட்டு செவ்வியல் இசையில் பிரவேசித்து, காலப்போக்கில் கர்னாடக இசையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுவதைக் கடந்த சில நூற்றாண்டு வரலாற்றைப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். வயலினில் தொடங்கி, கிளாரினெட், மாண்டலின் வரிசையில் சாக்ஸஃபோனுக்கும் அந்த இடம் கிடைக்கச் செய்தவர் கத்ரி கோபால்நாத். நாகஸ்வரப் பரம்பரையில் தோன்றிய கோபால்நாத், ஆரம்பத்தில் தன் தந்தையிடமே நாகஸ்வரம் பயின்றார். தனது பதினைந்தாவது வயதில் மைசூர் அரண்மனையில் பாண்டு வாத்தியங்களில் ஒன்றாக சாக்ஸஃபோன் இசைப்பதைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்ட்டார். கத்ரி கோபால்நாத்தின் வாழ்வில் திருப்புமுனை அவர் ‘டூயட்’ திரைப்படத்தில் வாசித்ததுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் படம் வந்த 1994-க்கு முன்னாலேயே அகில இந்திய வானொலியின் ஏ-டாப் கலைஞர் என்கிற அங்கீகாரம். மியூசிக் அகாடமி முதலான பிரதான சபைகளில் வாசிக்கும் வாய்ப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. திரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்றாலும் கத்ரி-யின் சாதனை தனி பெருமைதான்.. கடந்தாண்டி இதே நாளில் மறைந்த அவரின் நினைவுக் கொள்வோம்!
ஜே.பி என்று அழைக்கப்பட்ட ‘லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்திதினம் இன்று.(1902) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்ட சில காந்தியவாதிகள், சுதந்திரத்துக்குப் பிறகும் அதிகாரத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜெயபிரகாஷ் நாராயண். தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் அரசின் அதிகாரங்கள் ஒரே மையத்தில் குவிக்கப்படும் இந்நாளில் அவரைப் போன்ற ஒரு கொள்கைப் பிடிப்பு மிக்க தலைவரை நினைவுகூர வேண்டியது காலத்தின் அவசியம். காந்தி அடிகளாரின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் தீரமாகப் போராடிய இவர், விடுதலைக்குப் பின் கிராமங்களை முன்னேற்றும் சர்வோதயா திட்டத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டு பதவிகளில் இருந்து விலகியிருந்தார். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மாற்று அரசியலை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த இவர் பல்வேறு கட்சிகளை இணைத்து ஜனதா கட்சியை உருவாக்கினார்; அவ்வாறு உருவாக்கிய ஜனதா கட்சியை தேர்தலை இணைந்து சந்திக்க வைத்துக் காங்கிரஸ் மற்றும் இந்திராவை வீட்டுக்கு அனுப்பினார். .இரண்டாவது காந்தி எனப் புகழப்படும் அவர் அப்பொழுதும் எந்தப் பதவியையும் ஏற்கவில்லை. காந்திய நெறிகளின்படி வாழ்ந்த சமதர்மவாதியான ஜே.பி. மக்களை ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். மத்திய அரசும் பிரதமரும் அதிகாரங்களைக் குவித்துக்கொள்வதைக் கடுமையாக எதிர்த்தார். மக்களை மொழி, மதம், இனம் அடிப்படையில் பிளவுபடுத்துவதையும் அவர் விரும்பியதில்லை. சம்பல் கொள்ளைக்காரர்களை அத்தொழிலைக் கைவிடச் செய்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர் வலியுறுத்திய அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி மீண்டும் விவாதிப்பதற்கான தேவையை தற்போதைய நாடாளுமன்ற முறையிலான ஜனநாயக அமைப்பும் அதன் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஜெயபிரகாஷ் நாராயண் என்றால் ‘நெருக்கடிநிலை கால நாயகர்’ என்ற நினைவுடன் அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி அவர் பேசியதும் நம் நினைவுக்கு வர வேண்டும்.
மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று = அக் -11 இவர் தமிழ் நாவலின் தந்தை என அழைக்கப்படுபவர். இவர் தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும், சுகுண சுந்தரி கதையையும் படைத்தவர். பிரதாப முதலியார் சரித்திரம் அற்புதச் சம்பவங்கள் நிறைந்த ஒன்று. சத்தியபுரி என்னும் கிராமத்திலுள்ள நிலமானியக் குடும்பங்கள் இரண்டின் இணைவு பற்றியது அதன் கதைக் கரு. சாதாரணக் குடும்பக் கதைதான் இது என்றாலும், இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள், திடீர் சம்பவங்கள் போன்ற பல அம்சங்களால் துப்பறியும் கதை போலவும், தலைவி ஞானாம்பாள் மாறுவேடத்தில் சென்று அரசாளுதல் முதலியன செய்தலால் வரலாற்றுப் புதினம் போலவும், கிளைக்கதைகள் நீதிக் கருத்துகள் இடம்பெறுதலால் நீதிக்கதை போலவும் அமைந்துள்ளது. சுகுணசுந்தரி கதை, கதைத்தலைவியை ஓர் அரசன் கவர்ந்து செல்கிறான். தலைவி வழியில் கன்னி மாடத்தில் புகுந்து கொள்கிறாள். அரசன் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதற்குள் அந்த அரசனுடைய ஆட்சியை அமைச்சன் கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன. இவரின் முதல் நாவல் சமூக நாவலுக்கு வித்திட்டது என்றால், இவரின் அடுத்த நாவலான சுகுண சுந்தரி கதை வரலாற்று நாவலுக்கு அடிகோலியது எனலாம்.
“ஒன் மேன் இண்டஸ்ட்ரி” – அமிதாப் பச்சன் –க்கு இன்னிக்கு வயசு 84 வெள்ளித்திரை எனப்படும் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. ஆனாலும் இங்கு சில கலைஞர்கள் மொத்த சினிமாவிற்கும் தனியொரு மனிதனின் முகத்தை மாட்டிபுடுறாய்ங்க. அப்படி ஒரு முகம் தான் அமிதாப் பச்சன். இது வெறும் புகழ்ச்சிக்காக சொல்லப்பட்டதல்ல. 1970 மற்றும் 80களில் இருந்த இந்திய சினிமாவைக் கண்ட ஒரு பிரெஞ்சு டைரக்டர் உண்மையாகவே அமிதாப்பச்சனை பார்த்து ‘ஒன் மேன் இண்டஸ்ட்ரி’ அப்படீன்னு சொன்னாராக்கும். சிலருக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தை அளவிடுவது மிகக் கடினமானது. தமிழகத்தில் உச்சபட்ச புகழை ரஜினி அளவிற்கு புகழ்பெற்றவர் என்று கூறுவதைப்போல் தான் இந்தியாவில் அமிதாப்பச்சன் பெற்றிருக்கும் புகழ். ஒரு எக்ஸாம்பிள் சொல்லவேண்டுமானால் ஒரே ஒருமுறை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது கொண்ட நட்பால் தேர்தல் அரசியலில் களமிறங்கினார் அமிதாப் பச்சன். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதுவரை யாரும் பெற்றிராத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். கொஞ்சம் ஆழமான உதாரணம் வேண்டுமென்றால் ஒன்று சொல்லலாம். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை உச்சத்திலிருந்த 70-80 காலகட்டத்தில் இவர் உருவாக்கிய ‘ஆங்க்ரி யங் மேன்’ கேரக்டர் அப்போதைய இந்திய இளைஞர்களின் அடையாளமாக மாறிச்சு. சாதாரண இளைஞர்கள் மட்டுமல்ல, அப்போது வளர்ந்து கொண்டிருந்த மற்ற ஹீரோக்கள்கூட ‘ஆங்க்ரி யங் மேன்’ கதாபாத்திரத்தை தங்கள் படங்களில் ஏற்று நடித்து அவர்களை வளர்த்துக்கிட்டாய்ங்க அமிதாப்பின் மிகமுக்கிய அடையாளம் அவரது குரல். இத்தனை வருடங்கள் அவர் சினிமாவிற்கு செய்த பணிக்கு பலனாக அவர் குரலுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம்தான் ஷமிதாப். இப்படி இதனினும் அதிகமாக அவரைக் கொண்டாடோணும். அமிதாப்பின் அப்பா ஹரிவன்ஷிராய் பச்சன் ஒரு அபாரமான இந்திக் கவிஞர். அவர் தன் மகனுக்கு முதலில் ‘இன்குலாப்’ என்றுதான் பெயர் சூட்ட ஆசைப்பட்டார். ஆனால் ஒரு நண்பரின் யோசனையால் ‘அமிதாப்’ எனப் பெயரிட்டார். அதற்கு ‘நிலையான ஒளி’ என்று பொருள். எத்தனை பொருத்தமான பெயர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மேலா இந்த ஒளி நிலைத்து ஒளிர்கிறது. ஒரு கலைஞனின் வாழ்வியல் என்பது ஒருகட்டத்திற்குப் பிறகு வெறும் இயங்கியலிலேயே அடங்கியிருக்கிறது. இன்னும் இன்னும் தொடர்ந்து இயங்குங்கள் அமிதாப்ஜி!
