ராமதாஸுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை பாமக இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ் பாமக தலைவராக நானே இருப்பேன், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என்று அறிவித்தார். பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் என்றும் அறிவித்தார். இதையடுத்து, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கியும் புதிய நிர்வாகிகளை நியமித்தும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதனிடையே, கடந்த மாதம் 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முவைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 10ம் தேதிக்குள் (இன்று) பதில் அளிக்காவிட்டால் அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அதேவேளை, தந்தையுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் கடந்த ஜூலை 25ம் தேதி முதல் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் கிராமங்களை நோக்கி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுற்றுப்பயணத்தின் தேதி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸுக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
